ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன்


தமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

ஓர் ஆறானது நிலத்தை அறுத்துக் கொண்டு ஓடி தனக்கான கரையைத் தானே அமைத்துக் கொள்கிறது. அப்படித்தான் ஒரு மொழி பேசும் மக்கள் வரலாற்றுப் போக்கில் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம் - பனம்பாரானார்) என்ற வடிவில் தமிழர் தாயகமும் அப்படித்தான் அமைந்தது.

தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலை (திருமலை – திருப்பதி), தெற்கே குமரிமுனை, கிழக்கிலும் மேற்கிலும் கடல் என்ற இயற்கை வரம்புகளுடன் தமிழ்நாடு இருந்தது. பின்னர் மலையாள மொழி உருவானதால் மேற்கில் கேரளம் உருவானது.

கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியார் பீரங்கி முனையில் பல்வேறு இன மக்களின் தாயகங்களைக் கைப்பற்றி, தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப “இந்தியா” என்ற நாட்டை உருவாக்கினர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்குக் காந்தி அவர்கள் தலைமையேற்ற பின், அவர் இந்தியாவின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டு, மாநிலக் காங்கிரசு அமைப்புகளை பிரித்தானிய அரசு அமைத்திருந்த மாநில அடிப்படையில் இல்லாமல், மொழிவழித் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கச் சொன்னார். அவ்வாறு 1920களில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி! இப்பெயர் அப்போது சூட்டப்பட்டதுதான்!

அப்போது இன்றுள்ள ஆந்திரப் பிரதேசம் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டிருந்தது. ஆந்திர மாநிலத்தார் தனி மாநில காங்கிரசுக் கமிட்டி வைத்துக் கொண்டனர்.

விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள், அவற்றிற்கான தன்னாட்சி (மாநில சுயாட்சி) எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மாநில மறுசீரமைப்புக் குழுவை அனைத்திந்திய காங்கிரசுக் கமிட்டி 1927இல் நிறுவியது. அக்குழுவின் தலைவர் மோதிலால் நேரு, செயலாளர் பண்டிதர் சவகர்லால் நேரு!

சென்னைக் கடற்கரையில் 1938 செப்டம்பர் 11-இல் வெள்ளம்போல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்ட மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்தது. அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய மறைமலை அடிகளார் முன்மொழிய பெரியாரும், தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரும் வழிமொழிய “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தைத் தமிழர் தாயகமாகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கோரியது.

அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் 1946-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை மொழிவழி மாநிலம் அமைக்க உறுதியளித்தது.

ஆனால் 1947 ஆகத்து 15-இல் இந்தியா விடுதலை பெற்ற பின், நேரு அரசாங்கம் மொழிவழி மாநிலம் அமைப்பதற்கான முயற்சியில் இறங்கவில்லை. அக்கோரிக்கையைக் கிடப்பில் போட்டு விட்டது.

தொடர்ந்து கோரிக்கைகள் வரவே தலைமை அமைச்சர் பண்டித நேரு மொழி மாநிலம் குறித்த பரிந்துரை வழங்குவதற்காக 1948 சூன் 17 அன்று எஸ்.கே. தார் தலைமையில் ஆணையம் அமைத்தார்.

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1948 செப்டம்பர் 13ஆம் நாள் தார் ஆணையக் குழுவைச் சந்தித்து, கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தார். அதன் சுருக்கம் :

“சென்னை மாகாணத்தைத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என நான்கு மொழிவழி மாநிலங்களாக உடனே ஏக காலத்தில் பிரிக்க வேண்டும். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டியது அவசியம் என்பதைத் தமிழர்கள் உணர்கின்றனர். அந்தப் பிரிவினை அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிரிக்கப்படும் தமிழ் மாகாணத்தின் எல்லைகள் தெற்கே குமரி முனையாகவும் வடக்கே திருப்பதியாகவும் இருக்க வேண்டும்.

“சென்னை நகரம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும். புதிய தமிழகம் சட்டசபை, மந்திரிசபையோடு கூடிய சுயாட்சியுள்ள மாகாணமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து, ஏனைய எல்லா அதிகாரங்களும் உள்ள சுதந்தர அரசுகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும்”.

ஆனால் தார் ஆணையம் 1948 டிசம்பர் 10ஆம் நாள் அளித்த அறிக்கையில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் நிர்வாக வசதிக்கேற்ப இப்போதுள்ள மாநிலங்களைப் பிரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது.

தார் ஆணையத்தின் இந்தப் பரிந்துரையை எதிர்த்து ஆந்திரம் கொந்தளித்தது. “விசாலாந்திரம்” கோரி ஆந்திரக் காங்கிரசுத் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுத் தலைவர்பகளும் மக்களும் போராடினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அறிக்கையை எதிர்த்து எந்தப் போராட்டமும் இல்லை!

தமிழ்நாட்டில் மாநிலக் காங்கிரசுத் தலைமை மொழிவழி மாநிலக் கோரிக்கையை எழுப்பவே இல்லை. இளைஞர்களின் இன எழுச்சி அமைப்பாக விளங்கிய திராவிடர் கழகம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் தாயகங்களைக் கொண்ட திராவிட நாடும் திராவிட இனமும் பேசி வந்ததால் தமிழ் மாநில அமைப்பில் அக்கறை காட்டவில்லை.

ஆனால் தமிழ்நாட்டின் தெற்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள மாநில நிர்வாகத்தில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்று 1948லிருந்தே தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

அதேபோல் வடக்கில், ஆந்திரத் தெலுங்கர் நிர்வாகத்தில் சிக்கிக் கொண்ட சித்தூர் மாவட்டத் தமிழர்கள் 1947லிருந்தே தாய்த்தமிழகத்தில் இணைய தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். தெற்கிலும் வடக்கிலும் மொழி இன அடிப்படையில் தமிழ்நாட்டுடன் தங்கள் பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடிய தலைவர்கள், செயல்பட்டாளர்கள் - பெரும்பாலும் காங்கிரசார் மற்றும் காந்தியவாதிகள்!

தாய்த் தமிழ்நாட்டுடன் இணைந்திட வடக்கிலும் தெற்கிலும் காங்கிரசார் நடத்திய போராட்டங்களைத் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி ஆதரிக்கவில்லை. கேரளக் காங்கிரசிலிருந்து விலகி, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி அமைப்பை உருவாக்கித்தான் மார்சல் நேசமணி, பி.எஸ். மணி, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்ற பெருமக்கள் தலைமையில் அப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தை ஆதரித்து அதில் கலந்து கொண்ட ப. ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். கட்சி சார்பற்ற பிரமுகர்களும் அப்போராட்டத்தில் இருந்தார்கள்.

அதேபோல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்த ம.பொ.சி., மங்கலங்கிழார், தளபதி கே. வினாயகம், கோல்டன் ந. சுப்ரமணியம், டி.எம். திருமலைப்பிள்ளை, சித்தூர் அரங்கநாத முதலியார் போன்றோர் காங்கிரசாரே! இப்போராட்டக் குழுவில் செயல்பட்ட ந.அ. ரசீது அவர்கள் தி.மு.க.!

1946-ஆம் ஆண்டு சூன் 30ஆம் நாள் தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தின் முதல் தொடக்கமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.
மலையாளக் காவல்துறையின் தடியடி – குறிப்பாக முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை அரசின் கொடிய அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு – சிறை அடைப்பு அனைத்தையும் எதிர்கொண்டு வளர்ந்தது தி.த.நா. காங்கிரசு!

இப்போராட்டங்களின் சிகரமாக 1953 ஆகத்து 11-ஆம் நாளைத் தமிழர் விடுதலை நாள் (Deliverance Day) என்று அறிவித்து திருவிதாங்கூர் சமஸ்தானத் தமிழகப் பகுதி முழுவதும் முழு அடைப்பு நடத்தினர். அனைத்து மக்களும் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு விடுத்த அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சி, நாஞ்சில் மாவட்ட தி.மு.கழகம், மாணவர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றன.

கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பட்டம் தாணுப்பிள்ளை அரசு, 11.08.1954 அன்று 11 தமிழர்களை சுட்டுக் கொன்றது. பல நூறு பேரை அடித்தும் சுட்டும் படுகாயப்படுத்தியது. பலநூறு தமிழர்களை சிறையில் அடைத்தது.

வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சி. செயலாளர் தளபதி கே. வினாயகம். பல போராட்டங்கள் நடத்தியது. 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953இல் கைதாகிச் சிறை சென்றனர்.

வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிடைக்கப்பட்ட திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், பழனிமாணிக்கம் தடியடியிலும் மாண்டனர்.

ஏற்கெனவே தனி ஆந்திரம் கோரி சென்னையில் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமலு சாகும்வரை உண்ணாப் போராட்டம் தொடங்கி, 57ஆம் நாள் 15.12.1952 அன்று காலமானார். பொட்டி ஸ்ரீ ராமலுவின் இறப்பு – ஆந்திராவில் பெருங்கிளர்ச்சியைத் தட்டி எழுப்பியது.

நீதிபதி பசல் அலி தலைமையில் கே.எம். பணிக்கர் (இவர் கேரளம்), கே.என். குன்சுரு ஆகியோரைக் கொண்ட மாநிலங்கள் மறு சீரமைப்புக் குழுவை 22.12.1952 அன்று இந்திய அரசு அமைத்தது. அது 1955 அக்டோபர் 10 அன்று தனது அறிக்கையை அளித்தது.

அவ்வறிக்கை சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவுடன் சேர்த்தது. சித்தூர் மாவட்டம் 90 விழுக்காடு தமிழர்களைக் கொண்ட தமிழ் மாவட்டம்! 1911-இல் வெள்ளை அரசு வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து, சித்தூர் மாவட்டத்தை உருவாக்கியது. வடார்க்காடு மாவட்டத்திலிருந்த திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி, பல்லவனேரி (பலமனேரி) ஆகிய ஆறு தமிழ் வருவாய் வட்டங்கள் சித்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. அம்மாவட்டத்தில் மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு மட்டுமெ தெலுங்கு வருவாய் வட்டங்கள்! பசல் அலி குழு முழு சித்தூர் மாவட்டத்தையும் ஆந்திராவுடன் இணைத்தது.

சித்தூர் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி ம.பொ.சி. தலைமையில் போராட்டங்கள் தொடர்ந்தன. சித்தூர் மாவட்டம் மறு ஆய்வுக்குரிய பகுதி என்று அறிவித்து, ஆய்வு செய்ய இந்திய அரசு படாஸ்கர் குழுவை அமைத்தது.

படாஸ்கர் குழு பரிந்துரையில், திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், பலமனேரி முதலிய தமிழர் வருவாய் வட்டங்களை இழந்தோம். திருத்தணி, திருவாலங்காடு, வள்ளிமலை பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. சென்னையை ஆந்திரம் கேட்டது. தமிழ்நாடு ஆந்திரம் இரண்டுக்கும் பொதுவான தலைநகரமாக சென்னையை அறிவிக்க பண்டிதநேரு திட்டமிட்டார்.

அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி நேருவின் இத்திட்டத்தை எதிர்த்தார். மீறி பொதுத் தலைநகரமாக சென்னையை அறிவித்தால் முதல்வர் பதவியிலிருந்து விலகி விடுவென் என்று இராசாசி நேருவிடம் கூறி விட்டார்.
சென்னைத் தமிழ்நாட்டின் தலைநகராக மட்டுமே இருக்க வேண்டும் என்று ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கவுன்சிலர்கள் உட்பட மிகப்பெரும்பாலோர் ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சென்னை தப்பியது!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழ் வருவாய் வட்டங்களான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது வருவாய் வட்டங்கள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும். ஆனால், தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய வருவாய் வட்டங்களும், செங்கோட்டை வருவாய் வட்டத்தில் செங்கோட்டை நகரம் மட்டும் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டன. எஞ்சியவற்றை இழந்தோம். கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகிய மாவட்டங்களைக் கர்நாடகத்திடம் இழந்தோம்.

தேவிகுளம் – பீர்மேட்டை இழந்ததால் முல்லைப் பெரியாறு அணையையும் இழந்தோம். சித்தூர் மாவட்டத்தை இழந்ததால், வடபென்ணை ஆறு, பொன் வாணியாறு, ஆரணி ஆற்று அணை, திருப்பதி மலை போன்ற முக்கிய இடங்களை இழந்தோம். ஆந்திரம் பாலாற்றில் பல அணைகள் கட்டித் தமிழ்நாட்டுத் தண்ணீரைத் தடுத்துவிட்டது. அதன்பிறகு கச்சத்தீவையும் இழந்தோம். காவிரி ஆற்று உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை ஆகியவை அந்தரத்தில் தொங்குகின்றன.

தெற்கு வடக்கு எல்லை மீட்புப் போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்து கொண்டிருந்த காலத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தித் தமிழர்கள் கொல்லப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மையப்பகுதிகள் வீச்சான மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் சேர வேண்டிய பல பகுதிகளை சேர்க்க முடியாமல் இழந்து விட்டோம். இந்தப் படிப்பினையை இன்றையத் தலைமுறையினர் கற்று விழிப்படைய வேண்டும்! தெற்கு - வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களையும், அதில் செய்யப்பட்ட தியாகங்களையும் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.