ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு!

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு!
அக்டோபர் 31 அன்று சென்னை - திருச்சியில் ... தமிழ்த்தேசியப் பேரியக்கம் காத்திருப்புப் போராட்டம்!
#தமிழர்களுக்கே90விழுக்காடுவேலை
#90PercentJobsforTamils

திரும்பிய திசையெல்லாம் தமிழ்நாட்டில் வேற்றினத்தார் முகங்கள்! கரையுடைத்த வெள்ளம் போல் கடை வீதிகளில், கட்டுமானப் பணி இடங்களில், உயர் ஊதியம் பெறும் இந்திய அரசுத் தொழிற்சாலைகளில் - இந்திய அரசு அலுவலகங்களில், உணவு விடுதிகளில், சிறு தொழில் பட்டறைகளில், பெருங்குழும நிறுவனங்களில், மென்பொருள் வளாகங்களில், வேளாண் பண்ணைகளில் என நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிரம்பி வழிகின்றனர் வெளி மாநிலத்தவர்!

ஏற்கெனவே, தொழில் மற்றும் வணிகத்தில் மார்வாடி - குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரத் தெலுங்கர்கள் ஆதிக்கம்; அண்டி வாழும் நிலையில் தமிழர்கள்!

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? இதற்காகத்தான் 1947-இல் வெள்ளையரை வெளியேற்றி “விடுதலை” பெற்றோமா? இதற்காகத்தான் 1956-இல் தமிழர் தாயகமாக மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப்பட்டதா?
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூட ஒருமொழி பேசும் மக்கள் தாயகத்தில் அயல்மொழி பேசும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறுவதை எதிர்த்துள்ளார்கள். இதோ, 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் சி.எஸ். முல்லான் கூறுவதைப் பாருங்கள்!

அசாமில் வங்காளிகள் மிகை எண்ணிக்கையில் குடியேறுவது அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சுகிறார் அந்த ஆங்கிலேயர்!

“இந்த மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள மிகமுகாமையான நிகழ்வு என்ன வென்றால் அசாமிற்குள் நிகழ்ந்த வங்காளிகளின் குடியேற்றம்தான் என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன். இது அசாமின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை மாற்றிவிடும்; அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என அஞ்சுகிறேன். கிழக்கு வங்காளத்தில் இருந்து எறும்புகளின் அணி வகுப்பு போல் வங்காளிகள் குறிப்பாக வங்காளி முஸ்லீம்கள் நிலப்பசியோடு கூட்டம் கூட்டமாகக் குடியேறி வருகிறார்கள். போடோக்களிடமிருந்தும், அசாமியர்களிடமிருந்தும் நிலங்களை இந்த வங்காளிகள் கைப்பற்றுகிறார்கள். அசாமியர்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்வுமுறை ஆகிய அனைத்திலும் இவர்களின் ஆக்கிரமிப்பு பெரும் குலைவை ஏற்படுத்திவிடும். கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு அசாம் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ள வங்காளிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் ஆகும். பள்ளத் தாக்கில் நிலவும் இனச் சமநிலைக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துவிடும்”.

அதிகாரி முல்லான் அச்சப்பட்ட தீங்கு உண்மையிலேயே நடந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் வங்காளிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் அசாமில் குடியேறியதால் வேலை வாய்ப்பிழந்த, அரசியல் அதிகாரம் இழந்த அசாம் மக்கள் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை 1970களின் பிற்பகுதியில் தொடங்கினர். அது மாபெரும் மாணவர் தொடர் போராட்டமாக நடந்தது.

வெளியாரை வெளியேற்றுவது தொடர்பாக அசாம் மாணவர் தலைவர்களுடன் அன்றையத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி, 15.08.1985 அன்று உடன்படிக்கை செய்து கொண்டார். அதன் பிறகே அப்போராட்டம் ஓய்ந்தது. ஆனால் இன்றைக்கும் அசாம் முதலமைச்சராக வங்காளிகளே வரும் வாய்ப்புள்ளது.

திரிபுராவிலும் இதே அவலம்தான்! இன்றைய முதல்வர் மாணிக் சர்க்கார் வங்காளியாவார்!

அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழ்நாட்டில் ஏராளமான நிலங்களை வாங்கி வைத்துள்ளார்கள். மலையாளிகள் குடியேற்றம் தமிழ்நாட்டில் மிகமிக அதிகமாகிவிட்டது.

இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள தனது தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் வேலைக்குச் சேர்க்கிறது.

தொடர்வண்டித்துறையில் ஓடும் வண்டியிலும் அது நிற்கும் நிலையங்களிலும் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களே வேலை பார்க்கிறார்கள். புதிதாக தொடர்வண்டித்துறைக்கு ஆள் எடுத்தால், 90 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களை எடுக்கிறார்கள். ஆவடி, திருச்சி, அரவங்காடு படைத்துறைத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகம், வானூர் நிலையங்கள், வங்கிகள், வருமானவரி - உற்பத்தி வரி - சுங்க வரி அலுவலகங்கள் என அனைத்திலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்பு வெளி மாநிலத்தவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

அவ்வேலைகளுக்கான அனைத்திந்தியத் தேர்வுகள் பெரும் மோசடி! அண்மையில் அரியானாக்காரர்கள் தமிழ்நாட்டு அஞ்சலக வேலைக்கான தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெற்ற விந்தை நடந்தது. எதிர்த்த பின் அச்சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. அம்பலமாகாத மோசடிகள் ஏராளம்! ஏராளம்!

இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் விழுக்காட்டு கணக்கில் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 1986இல் அமைக்கப்பட்ட சரோஜினி மகிசி அறிக்கையின்படி மாநில அரசு மற்றும் தனியார் துறையில் 100 விழுக்காடு வேலை கர்நாடக மக்களுக்கு வழங்க வேண்டும். இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர் சேர்க்கையில் 90 விழுக்காடும், அதிகாரிகளில் 80 மற்றும் 70 விழுக்காடு அளவிலும் கர்நாடகத்தவர்க்கு வேலை வழங்க வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடு கர்நாடகத்தில் உள்ளது.

குசராத்தில் 1995ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் போட்ட ஆணைப்படி நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 85 விழுக்காடு வேலை குசராத்திகளுக்கு வழங்க வேண்டும்.அண்மையில் (2017 மே), இந்தியன் எண்ணெய்க் கழகம் (ஐ.ஓ.சி.எல்.) 116 பணியாளர்களை வேலைக்கு சேர்த்தபோது, 15 பேர் மட்டுமே குசராத்திகள்! இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மண்ணின் மக்கள் குசராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக குசராத் அரசு தானே முன்வந்து அவ்வழக்கில் இணைந்து கொண்டது.

மராட்டியம், சட்தீசுகட், ஜார்கண்ட் முதலிய மாநிலங்களில் மாநில மக்களுக்கான ஒதுக்கீடு உள்ளது. உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு, 80 விழுக்காடு வேலைகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசு, பா.ச.க., இராட்டிரிய சனதா தளம் போன்ற கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலைமை? தன்மானம், இனமானம், மாநில சுயாட்சி என்று ஒலிபெருக்கி உடையும் அளவிற்கு ஓசையிட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சி 1967லிருந்து சற்றொப்ப ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. இத்திசையில் இக்கட்சிகளும் சிந்திக்கவில்லை; இவற்றின் ஆட்சிகளும் சிந்திக்கவில்லை!

ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை உயர்த்துவது எப்படி, மாட்டிக் கொள்ளாமல் அதைக் கொடுப்பது எப்படி என்ற வித்தைகளைத்தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் சாதித்துள்ளன. மக்கள் கேட்காத இலவசங்களை மக்கள் வரிப்பணத்தில் கொடுத்து, அவர்களிடம் அண்டிப் பிழைக்கும் பயனாளி உளவியலை உருவாக்கி வாக்கு வேட்டையாடுவது இக்கட்சிகளுக்குக் கைவந்த கலை!

தமிழர்களின் எல்லா உரிமைகள் குறித்தும் முன்கூட்டியே சிந்தித்து, முன்மொழிவுகளாக வழங்கி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) 1990களின் தொடக்கத்தில் நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80, 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து அதற்கான பெருந்திரள் போராட்டங்களை சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தியது.

இப்போது இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்; 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 2017 அக்டோபர் மாதம் பரப்புரை செய்து வருகிறது.

31.10.2017 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தின் முன்பும், திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பின் முன்பும் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறது.

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருப்போர் 90 இலட்சம் பேர். உயர்கல்வி கற்றும் வேலையில்லாமல் துன்புறுவோர் பல இலட்சம் பேர்! சென்னை ஐ.சி.எப்.பில் பயிற்சிப் பணி முடித்துப் பல ஆண்டுகளாகக் காத்திருந்து, வறுமையில் இதுவரை 27 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொறியியல் பட்டம் பெற்றும் தொழில்நுட்பக் கல்விப் பட்டங்கள் பெற்றும் உரிய வேலை இல்லாமல் தமிழ் இளைஞர்கள் தவிக்கிறார்கள். முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றும் உரிய பணி இல்லாமல் வறுமையில் உழல்வோர் பல இலட்சம் பேர்!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளியார் வேட்டைக்காடா? இந்த அநீதியை இனியும் சகித்து, வாழ்க்கையை இழக்கக்கூடாது!

இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலையும், தனியார் துறையில் 90 விழுக்காடு வேலையும் தமிழ்நாடு அரசில் 100 விழுக்காடு வேலையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.!

ஒவ்வொரு தமிழ் ஆணும், பெண்ணும் இந்த கோரிக்கையை எழுப்ப வேண்டும்!

பெரும்பாலோர் குரலெழுப்பினால், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்தே ஆக வேண்டும்.!

அடையாளப் போராட்டத்துடன் நிற்காமல் தமிழர் அறப்போராட்டம் தொடரட்டும்!

#தமிழர்களுக்கே90விழுக்காடுவேலை
#90PercentJobsforTamils
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.