பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களில் பலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் வருகின்ற 23.11.2017 அன்று காலை 10 மணிக்கு சென்னை தரமணி நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (Central Polytechnic College) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்திருந்தது.
தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் வேலைக்கு வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அனுமதிப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்தது. இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளி மாநிலத்தவர் பெயர்களை நீக்கிவிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்தது.
அவ்வாறு வெளி மாநிலத்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் தரமணியில் நடந்தால், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் நேர்காணல் நடைபெறும் அலுவலகம் முன் நீதி கேட்கும் ஒன்றுகூடல் போராட்டம் நடத்துவது என்றும் அறிவித்திருந்தோம். போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தோம்.
வெளி மாநிலத்தவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பிரிவுகளுக்காக சென்னை தரமணியில் 23.11.2017 அன்று நடைபெறவிருந்த நேர்காணலை, இப்போது நிர்வாகக் காரணங்களுக்காக நாள் குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
எனவே தமிழ்த்தேசியப் பேரியக்கம் 23.11.2017 சென்னை தரமணி பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தவிருந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதையும், மேற்படி நேர்காணல் வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு மீண்டும் நடந்தால், அந்நாளில் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மண்ணின் மக்கள் வேலைவாய்ப்பு உரிமையில் அக்கறையுள்ள அனைவருக்கும், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்ட அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment