ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி! தமிழ்நாட்டில் நாம் கோரினால் இனவெறியா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

மண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி! தமிழ்நாட்டில் நாம் கோரினால் இனவெறியா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்டு), தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தின் மண்ணின் மக்களுக்கு மாநில அரசுத் துறையில் 70 விழுக்காடு பணி ஒதுக்கீடு தருவதாக உறுதி கூறியுள்ளது (The Hindu, 03.11.2017). இது வரவேற்கத்தக்கது!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1992லிருந்து தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் நிலவும் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு உரிய முன்னுரிமை வேண்டும் என்று கோரி வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில், 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இவற்றில் 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசுத் துறையிலுள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் 100 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.

இக்கோரிக்கைகளை வைத்து, அண்மையில் 31.10.2017 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகம் முன்பும், திருச்சி திருவெறும்பூர் பி.எச்.இ.எல். தொழிற்சாலை முன்பும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தினர்.

இவ்வாறான மண்ணின் மக்களுக்குரிய கோரிக்கைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பும்போதும், போராட்டம் நடத்தும்போதும் இதனை “இனவெறி” என்றும், “பாசிசம்” என்றும் மார்க்சியர்கள் பலர் கண்டனம் செய்து வந்துள்ளனர். இப்போது, மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இமாச்சலப் பிரதேசத்தில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாட்டின் உரிமைகள் – தமிழர்களின் நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைக்கும்போது, அயல் இனத்தாருக்கு எதிரான இனவெறித்திட்டம் எதையும் முன்வைப்பதில்லை! தமிழினத்தின் தற்காப்பு மற்றும் வாழ்வுரிமைக் கோரிக்கைகளாகவும், அதேவேளை உலகு தழுவிய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள தேசிய இனங்களின் தாயக உரிமைகளுக்கு இயைந்த கோரிக்கைகளாகவும்தான் வைக்கிறோம்.

ஏற்கெனவே கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீஸ்கட் போன்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது.

இயற்கையாய் வளர்ச்சியடைந்துள்ள தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தியத்தேசியம் மற்றும் தமிழின மறுப்பை அடித்தளமாகக் கொண்டுள்ள திராவிட இனவாதம் ஆகியவற்றை இங்கு முன்னிலைப்படுத்துவோர் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் தமிழர் தாயக உரிமைகளை “இனவெறி” என்று கொச்சைப்படுத்துகின்றனர். மேற்கண்ட இரு வாதங்களுக்கும் பலியான அப்பாவிகளும், அதேபோல் “இனவெறி” முழக்கம் என்று நம் கோரிக்கைகளைக் கருதுகின்றனர்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இந்தியத்தேசியம் மட்டுமின்றி சர்வதேசியத்தையும் பேசும் கட்சி! அக்கட்சி மட்டுமல்ல, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கர்நாடகப் பிரவு, அம்மாநிலத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்ய சரோஜினி மகிசி பரிந்துரைகளைச் சரியாகச் செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்து, பெங்களூரில் 13.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் காங்கிரசு, பா.ச.க., ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கெனவே செயல்படுத்தி வருகின்றன அல்லது கோரி வருகின்றன. இப்போது, சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளும் அக்கோரிக்கையை முன்வைக்கின்றன.

போலியாக திராவிட இனவாதம் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 1967லிருந்து தமிழ்நாட்டை ஆண்டு வந்த போதிலும், மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பு முன்னுரிமைத் திட்டத்தை செயல்படுத்தவில்லை! மாறாக, தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் வழங்கி, தமிழர்களின் வாழ்வுரிமையை அவர்கள் பறித்திட வாய்ப்பளித்து வருகின்றன.

தமிழர்கள் கட்சி வேறுபாடு பார்க்காமல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்திருக்கும் மண்ணின் மக்களுக்கான வேலை ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்துக் குரல் எழுப்பினால் – போராடினால், தமிழ்நாட்டில் தகுதி இருந்தும் சொந்த மண்ணிலேயே வேலை மறுக்கப்பட்டு, வறுமையில் உழலும் இலட்சோப இலட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்வு கிடைக்கும்!

அனைவரும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு – தனியார் துறையில் 90 விழுக்காடு – தமிழ்நாடு அரசுத்துறையில் 100 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்குக் கோருவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.