ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா?" தோழர் கி. வெங்கட்ராமன்.


"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா?" தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்த்தேசியத்தில் இடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என இரண்டு போக்குகள் இருப்பதாகவும், இவற்றுள் இடதுசாரித் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதாகவும் சில நண்பர்கள் பேசுகிறார்கள்.

இதுபற்றி சில சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தச் சொல்லாடலில் இருக்கிற முகாமையான தொடர்கள் பற்றிய வரையறுப்பை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு, இது குறித்துப் பார்ப்போம்.

‘தேசியம்’ (Nationalism) என்பது என்ன? ஒரு தேசிய இனம், தனக்கான இறையாண்மையுள்ள தேச அரசை நிறுவிக் கொள்வது குறித்த கோட்பாடே தேசியம் ஆகும்!

தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் யாது? இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதற்கான கோட்பாடே தமிழ்த்தேசியம் ஆகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், அதற்கான உரிமைகளையும் பற்றி மட்டுமே பேசுவதோ, தமிழினத்தின் மரபுப் பெருமை களை நிலைநாட்ட விழைவது மட்டுமோ, “தமிழ் நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்” என்று முழங்குவதோ தமிழ்த்தேசியம் ஆகாது! அது தமிழின உணர்வை எடுத்துக்காட்டும், அவ்வளவே!

இறையாண்மையுள்ள தமிழ்த்தேச அரசு நிறுவு வதை இலட்சியமாகக் கொள்ளாத, அந்த இலட்சியத்திற்கு உதவாத பிற எந்த முழக்கமும் தமிழ்த்தேசியம் ஆகாது!

எனவே இவ்வாறான தேசிய இலட்சியத்தை முன்வைக்காத இயக்கங்களை தமிழ்த்தேசியத்தோடு தொடர்புபடுத்தி, தமிழ்த்தேசியம் குறித்தத் திறனாய்வில் இறங்குவது நிழல் சண்டையாக முடியும்!

இடதுசாரி என்றால் என்ன? பொதுவுடைமை மற்றும் நிகரமை சமூகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்வதை இடதுசாரிக் கொள்கை என்பர். சாதி, பாலின, மத சமத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை சமத்துவம் பேசுவோரை இடதுசாரிகள் எனப் பொதுப்பட அழைப்பதுண்டு!

பிரஞ்சுப் புரட்சியில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற அவையில், இடதுபுறம் அமர்ந்தோர் மன்னராட்சி ஒழிப்பு, சமநீதி ஆகியவற்றை முன்வைத்தனர். வலது புறம் அமர்ந்தோர் மன்னராட்சியையும் அன்றைக்கு இருந்த நிலையையும் ஆதரித்தனர். இதிலிருந்து சமத்துவம் பேசுவோர் “இடதுசாரிகள்” என்று அழைக்கப்பட்டனர்.

எல்லா சமூகத்திலும் முற்போக்காளர்கள் உண்டு, பிற்போக்காளர்களும் உண்டு! எல்லாத் தேசிய இயக்கத்திலும் இடதுசாரிகள் உண்டு, வலதுசாரிகள் உண்டு! வரலாற்றின் வாய்ப்பைப் பொறுத்து, ஒரு தேசிய இயக்கம் இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படலாம் அல்லது வலதுசாரிக் கொள்கை உடையவரால் தலைமை தாங்கப்படலாம்.

ஒரு மக்கள் சமூகம் சந்திக்கும் பல்வேறு முரண்பாடுகளில் தேசிய முரண்பாடு முதன்மையாக நிற்கும். ஒரு வரலாற்றுச் சூழலில், இறையாண்மையுள்ள தேசம் படைப்பதுதான் அச்சமூகத்தின் அன்றைய முதன்மை வரலாற்றுக் கடமையாக விளங்கும். தேசிய முரண்பாடு என்ற முதன்மை முரண்பாட்டை தேச அரசு படைத்து நீக்குவதன் வழியாகத்தான், பிற முரண்பாடுகளைத் தீர்க்க - பாதை திறக்கும்!

இவ்வாறான சூழலில், அந்தத் தேசியத்தை ஆதரிப்பதே மக்கள் முன் உள்ள கடமையாகும். அதே நேரம் அத்தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோரில் முற்போக்காளர்களை வலுப்படுத்துவதும் மக்கள் கடமையாகும்.

ஒரு தேசிய இயக்கம் பற்றிய செயல்பாட்டாளர்களின் அணுகுமுறை குறித்த பொது நிபந்தனை இது!

ஆனால், தமிழ்த்தேசியம் என்பது இவை அனைத் திற்கும் அப்பாற்பட்ட தனித்தன்மை வாய்ந்ததாகும். தமிழ்த்தேசியம் என்பதில், இடதுசாரிப் போக்கு - வலதுசாரிப் போக்கு, முற்போக்கு - பிற்போக்கு என்ற பிளவுக்கே இடமில்லை! தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொண்டால், இந்த உண்மை விளங்கும்.

தமிழ்த்தேசியம் என்பது ஆரிய இன ஆதிக்கத்தை எதிர்த்து, பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் போராட்டத்தின் வரலாற்று விளைபொருள் ஆகும். நேற்றைய ஆரியத்தின், இன்றைய வளர்ச்சியடைந்த வடிவமே இந்தியம் ஆகும்! எனவே, ஆரியத்தை எதிர்த்த தமிழினத்தின் வரலாற்றுப் போராட்டம் - இந்தியத்தை எதிர்க்கும் தமிழ்த்தேசியமாக வளர்ந்துள்ளது.

ஆரிய ஆதிக்கத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தமிழினத்தின் போராட்டம், வரலாறு நெடுகிலும் இனத்தற்காப்புப் போராட்டமாக மட்டும் இல்லை. ஆரியத்தின் மொழியான சமற்கிருத ஆதிக்கத்திலிருந்தும் ஊடுருவலிலிருந்தும் தமிழ் மொழியை அதன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டமாகவும் இருந்தது.

அது மட்டுமின்றி, ஆரிய இன ஆதிக்கத்தோடு இணைந்து வந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்து, அறம் சார்ந்த சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்ட மாகவும் நடந்தது.

இது வேறு எந்த தேசிய இன வரலாற்று வழிப் போராட்டத்திலும் பார்க்க முடியாத தனித்தன்மை யாகும்!

வளர்ச்சியடைந்த மொழி, அற விழுமியங்கள் சார்ந்த வாழ்நெறி, அறிவியல் வழிப்பட்ட வாழ்முறை ஆகிய செம்மாந்த தன்மையோடு இருந்த தமிழ்ச்சமூகம், தனது தற்காப்புப் போராட்டத்தின் ஊடாக இந்தக் கூறுகள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்தை இணைத்தே நடத்துவது வரலாற்றின் தேவையாக அமைந்தது.

எனவே, தொல்காப்பியர், வள்ளுவர், திருமூலர் காலம் தொடங்கி சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் என வரலாறு நெடுகிலும் தமிழினம் நடத்திய போராட்டம் - தமிழினப் பாதுகாப்பு - தமிழ் மொழிப் பாதுகாப்பு - சமநீதிப் பாதுகாப்பு ஆகிய வற்றோடு பின்னிப்பிணைந்து நடந்த போராட்டமாக விளங்குகிறது.

வரலாற்றின் எந்தக் கட்டத்திலும், தமிழினத்தின் போராட்டம் பிற்போக்கை (வலதுசாரித் தன்மையை) பின்பற்றியதில்லை; பின்பற்றி இருக்கவும் வாய்ப்பில்லை. தமிழின வரலாற்றின் தனித்தன்மை அது!

அப்போதும், இப்போதும் இதே நிலைதான்! தமிழ்த்தேசியம், பிற்போக்கோடு இணையும் வாய்ப்பை வரலாறு வழங்கவில்லை!

இடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற கற்பனைப் பிரிவைத் தேடும் நண்பர்களில் பலர், இடதுசாரி இந்தியத்தேசியம் இருப்பதாக கருதிக் கொள்வதுதான் வியப்பாக இருக்கிறது.

வலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற ஒன்றில்லை! அதேபோல், இடதுசாரி இந்தியத்தேசியம் என்பதும் இல்லை!

ஏனெனில், எல்லா வித பிற்போக்குத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் நிலைக்கலனாக விளங்குவது இந்தியம் ஆகும்! இந்தியத்தேசியம் என்பதே புனைவான தேசியமாகும். அது வெறும் புனைவு அல்ல - ஆதிக்கப் புனைவு ஆகும்!

ஆரியத்தை அடித்தளமாகக் கொண்டு, புனையப் பட்டதுதான் இந்தியத்தேசியம்! நவீன வரலாற்றுப் போக்கில் அனைத்திந்திய சந்தையை தமது முதன்மைச் சந்தையாகக் கொண்ட பெருமுதலாளிகள் சுரண்டலுக் கான சந்தைத்தேசியமாகவும், இந்த ஆதிக்கப் புனைவுத்தேசியம் விளங்குகிறது. சமற்கிருதமயமான இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக விளங்கு வதன் வழியாக, இந்த ஆதிக்கப் புனைவிற்கு மக்கள் திரள் அடித்தளம் கிடைக்கிறது. அதன்வழியாக, அது ஒரு சனநாயகத் தோற்றம் பெறுகிறது. இந்துத்துவம் என்ற வழியில் மட்டுமின்றி, இந்தியம் என்ற வழியிலும் ஆரியப் பண்பாடே இந்தியாவின் பொதுப் பண்பாடாக முன்வைக்கப்படுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த ஆதிக்கப் புனைவிற்கு அரணாக விளங்குகிறது. நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் முறை வழியாக, மக்களின் ஏற்புப் பெற இந்த ஆதிக்கப் புனைவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

எனவே, மொழி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, பெருமுதலாளிகளின் சுரண்டல், சூழல் சூறையாடல் ஆகிய ஆதிக்கங்களை ஒழிக்க உண்மையாகப் போராடுகிற யாரும் ஆதிக்கப் புனைவான இந்தியத்தேசியத்தோடு முரண்படாமல் போராட முடியாது!

ஆரியப் பார்ப்பனியம்தான் இந்தியத்தேசியப் புனைவின் மெய்யியல் (தத்துவ) அடித்தளமாகும். எனவே, இந்தியத்தோடு இணைந்திருந்து, சமூகநீதிப் போராட்டத்தை - சாதி ஒழிப்பு இலக்கோடு நடத்த முடியாது!

தொழிற்சங்கப் போராட்டங்கள், வரம்புக்குட்பட்ட சில தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுத் தருவது போல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அதன் வீச்சுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற வகையில், சில உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆனால், சாதி ஒழிப்பு என்ற இறுதி இலக்கு நோக்கிய சமத்துவப் போராட்டத்தை, இந்தியத்தோடு இணைந்து நடத்துவது சாத்தியமில்லை!

பெருமுதலாளிகள் ஆதிக்கத்தை முறியடித்து, நிகரமைச் சமூகம் நோக்கிய மக்கள் சனநாயக அல்லது புதிய சனநாயகப் புரட்சி நடத்த உண்மையில் விரும்புவோர், இந்தியத்தேசியத்தோடு இணைந்து நின்று நடத்தவே முடியாது! ஏனெனில், பெருமுதலாளி களின் சந்தை என்ற பொருளியல் அடித்தளத்தில்தான் இந்தியத்தேசியம் நிற்கிறது.

“புதிய சனநாயகம்” என்பது, தனியுடைமைக்கு வரம்பு கட்டுவது ஆகும். “நிகரமை” என்பதுதான் தனியுடைமையை ஒழிப்பது ஆகும். இன்றைக்கு இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இயங்கும் பெரும்பாலான பொதுவுடைமை இயக்கங்கள், தனியுடைமைக்கு வரம்பு கட்டும் சனநாயகப் புரட்சியையே முன்வைக்கிறார்கள். இதுதான் இயல்பானது!

வரம்புக்குட்பட்ட தனியுடைமையாளர்களான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் சந்தை - முதன்மையாகத் தமிழ்நாடுதான்! தமிழ்த்தேச சந்தையை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புப் போராட்டத் தோடு, இவர்களது வாழ்வுரிமை இணைந்திருக்கிறது.

பாட்டாளிகளின் வர்க்க நலன், பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதில் இருக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் ஆதிக்கமோ இந்தியத்தோடு இணைந்திருக்கிறது.

எனவே, புதிய சனநாயகப் புரட்சியின் கடமையாக விளங்கும் பாட்டாளி வர்க்க நலன் காப்பும், தமிழ்த்தேச முதலாளிகளின் நலன் காப்பும் தவிர்க்க முடியாமல் புனைவு இந்தியத்தேசியத்தோடு முரண்படுகிறது - தமிழ்த்தேசியத்தில் இணக்கம் காண்கிறது!

ஆரிய வேதமத அடையாளங்களே இந்தியாவின் அடையாளங்களாக முன்வைக்கப்படுகின்றன. தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் மதச் சிறுபான்மையினர் இதனால் “இந்திய” அடை யாளங்களுக்கு எதிரானவர்களாக, “தேச விரோதி” களாக முன்வைக்கப்படுவது எளிதாகிறது!

எனவே, தங்களைத் தற்காத்துக் கொள்ள விரும்பும் தமிழ்நாட்டு மதச் சிறுபான்மையினர் இந்தியத்தோடு முரண்படுவதும், தமிழ்த்தேசியத்தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது!

தனியார் பெருமுதலாளிகள், இந்திய அரசின் பெரு நிறுவனங்கள் ஆகியோரின் வளர்ச்சியே இந்தியாவின் “வளர்ச்சி” என்பதாக புனைவு இந்தியத்தேசியம் வலியுறுத்துகிறது. பெரு நிறுவனங்கள்தான் சூழல் சூறையாடலுக்கு முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன. எனவே, சூழல் பாதுகாப்பில் அக்கறையுள் ளோர் “வளர்ச்சிவாதம்” பேசும் இந்தியத்தோடு முரண்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்த்தேசியத் தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது!

இவற்றைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் அனைத்து மக்கள் நலனும் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதில் தங்கியிருக்கிறது என்பது புலனாகும். மக்கள் நலனுக்கான அனைத்து முற்போக்கு சிந்தனைகளின் குவிமையமாக “தமிழ்த்தேசியம்” விளங்குவது தெளிவாகும்!

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் என்ற தெளிவான இலக்கை முன்வைக்காத சில தமிழின உணர்வாளர்கள் பிறமொழி பேசுவோரை கண்டறிந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழர்கள் தங்கள் சாதிகளைச் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சரிசெய்யப்பட வேண்டிய தோழமை முரண்பாடு! பல நூற்றாண்டுகளாக இங்கே தங்கி வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் சாதியினரும், தமிழ்த்தேச மக்கள்தாம். அவர்கள் அயலார் அல்லர்! இந்த உரையாடல் தேவைப்படுகிறது. ஆனால் இவ்வாறு கேட்போரை சாதி ஆதிக்கவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது.

இதை வைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியத்தில் சாதியவாதம் இருப்பதாகக் கூறுவது, ஒன்று - அறியாமை, அல்லது தமிழ்த்தேசியத்தை சீர்குலைக்கும் தீய உள் நோக்கம் கொண்டது!

மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தாலோ, பெரியா ரைத் திறனாய்வு செய்தாலோ அது வலதுசாரித்தன்மை வாய்ந்தது எனக் கருதிக் கொள்வது - முற்றிலும் அறியாமை!

மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தால், அவை எல்லாமே முதலாளியப் பார்வை என பட்டம் சூட்டுவது நீண்டகாலமாக நடந்துவரும் தவறுதான்! இவர்கள் தங்கள் கைவசம் சில முத்திரைகளை வைத்திருப்பதற்காக, அந்த முத்திரைகளுக்குள் வரலாற்றை அடக்கி விட முடியாது. குழு வாதத்திற்கே அது பயன்படும்!

வர்ணசாதி ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் பெரியாரிலிருந்து தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலந்தொட்டு தொடர்ந்து நடந்து வருவது. பெரியாரின் பார்வையோ தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழ் இன நிராகரிப்பு என்ற ஆபத்தான பார்வையாகும். மொழி சார்ந்த இனமாக தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பயணத்தைத் தொடர முடியாமல், தமிழ்த்தேச அரசை நிறுவிக் கொள்ள முடியாமல், பயனாளிக் கூட்டமாக - உதிரிகளின் தொகுப்பாக தமிழர்களை மாற்றிவிடும் ஆபத்து அந்தப் பார்வையில் உண்டு!

இந்த ஆபத்தை உணர்ந்து, பெரியாரைத் திறனாய்வு செய்தால், அதனாலேயே அவர்கள் சாதியவாதியாகி விட மாட்டார்கள்.

பெரியாரை தேசியப் போராட்டத்தின் முன்னோடியாக ஏற்காமல் போனால், தமிழ்த்தேசியப் போராட் டத்தை முன்னெடுக்க பெரியார் சிந்தனையான “திராவிடம்” தடையாக இருப்பதாகத் திறனாய்வு செய்தால், தமிழ்த்தேசியம் சமூகநீதிக்கு எதிரான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது!

மார்க்சியத்தைத் திறனாய்வு செய்வதால், தமிழ்த் தேசியம் முதலாளிகளுக்கு ஆதரவான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது!

மேலே விளக்கியதுபோல், தமிழ்த்தேசியமானது “தமிழர் அறம்” என்ற சமத்துவ மெய்யியலில் வேர் கொண்டு நிற்பதால், அனைத்து முற்போக்குச் சிந்தனை ஓட்டங்களும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயக் கடப்பாடு உள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஒடுக்குண்ட சுரண்டப் பட்ட மக்கள் உரிமையில் அக்கறை கொண்ட யாரும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டியது வரலாற்றுக் கட்டாயமாகும்!

மாறாக, “சமூகநீதி” - “இடதுசாரி’’ என்று தமிழ்த் தேசியத்திற்கு நிபந்தனை விதிப்போர், தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த்தேசிய இலக்கை _- இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கை முரணின்றி முன்வைக்காதவர்கள் ஆவர்!

சமத்துவ சமூகம் படைப்பது குறித்த சமூக அறிவியல் பார்வையின்றி, தங்கள் கற்பனையில் ஒன்றை வைத்துக் கொண்டு, அதற்குப் பயன்படும் ஓர் உத்தியாக தமிழ்த்தேசியத்தைக் கையாள நினைக்கும் “சமூகத் நுட்பவாதிகள்” (Sociocrats) ஆவர்.

சமத்துவ நோக்கை செயல்படுத்த இந்தியத்தேசியமும் ஒரு வழி, தமிழ்த்தேசியமும் இன்னொரு வழி என்ற இரட்டை வாய்ப்பை வரலாறு வழங்கவே இல்லை!

இந்தியத்தேசியம் என்பது அனைத்து அநீதிக்கும் நிலைக்கலனாக விளங்கும்போது, அதற்குள் சமத்துவ நோக்கை செயல்படுத்துவது என்ற வாய்ப்பு அறவே இல்லை. “புதிய சனநாயக இந்தியா”, “சாதியற்ற இந்தியா”, “மதச்சார்பற்ற இந்தியா” என்பதெல்லாம் கடைந் தெடுத்த கற்பனையே!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சமத்துவ நோக்கம் கொண்டோரின், இடதுசாரிகளின் ஒரே தளம் தமிழ்த்தேசியம்தான்! தமிழ்த்தேச அரசு என்ற தளம் இருந்தால்தான் சமத்துவக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும். இதற்கு நிபந்தனை விதிக்கவும், அடைமொழி சூட்டவும் முனைந்தால், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கம் இல்லை என்பதே பொருள்!

தேசியம் என்பது வர்க்கம், சாதி, பாலினம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பது என்ற முதன்மை இலட்சியத்தின் பிரிக்க முடியாத உட் கூறு இலட்சியங்கள்தான். வர்க்க சமத்துவம், சாதி சமத்துவம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு போன்ற அனைத்து வகை இலட்சியங்களும் ஆகும்.

தமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கையின் உட்கூறுக் கொள்கைகள்தான் அனைத்து வகை சுரண்டலுக்கும் எதிரான சமத்துவக் கொள்கைகள் ஆகும்!

முதன்மைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கு உட்பட்ட உள் கூறுக் கொள்கைகளை - தமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கைக்கு முன் நிபந்தனை ஆக்குவது, தமிழ்த்தேசியம் என்ற கொள்கையை பெயருக்கு உச்சரிப்பதாக அமையும்!

முற்போக்கு என்ற பெயரால், இடதுசாரி என்ற பெயரால், மக்கள் இயக்கத்தினர் ஆதிக்கப் புனைவு இந்தியத் தேசியத்திற்கும் - விடுதலைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கும் இடையில் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது!

(தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை இது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.