ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்! மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு!” ஜூனியர் விகடன் ஏட்டில் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்! மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு!” ஜூனியர் விகடன் ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்!” என்ற தலைப்பில், ஜூனியர் விகடன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் பேட்டியுடன், செய்திக் கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

ரயில்வே உள்பட தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் துறைகளில் வெளி மாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்படுவதும், தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதும் திட்டமிட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசினோம். “தமிழகத்தில் ரயில்வே, பெல், என்.எல்.சி., ராணுவத் தளவாட நிறுவனங்கள், பெட்ரோலியத் துறை, வருமானவரித் துறை, சுங்கவரித் துறை, துறைமுகங்கள் போன்ற இந்திய அரசு தொழிலகங்களில் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். சமீபகாலமாக, இந்தத் தொழிலகங்களில் திட்டமிட்டே வெளி மாநிலத்தவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கான தேர்வுகளை வெளி மாநிலத்தவருக்குச் சாதகமாக நடத்துகிறார்கள். இதனால், திறமைகள் இருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். இங்கு, வேலைக்கான அனைத்துத் தேர்வுகளிலும் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு மோசடி செய்துவருகிறது.

2016-ல், தமிழகத்தில் அஞ்சலகப் பணிக்காகத் தேர்வு நடந்தது. அதில் அரியானா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் தமிழில் 25-க்கு 25 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்வாகினர். ஆனால், தமிழகத்தில் யாருமே 25 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. வினாத்தாள்களும், அதற்குரிய பதில்களும் வெளி மாநிலத்தவருக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. இதுதான் தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டு வருகிறது. ‘மொழிவாரி மாநிலம்’ உருவாக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே, அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். கர்நாடகாவில், அந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக, 1983-ம் ஆண்டு, ‘சரோஜினி மகிசி’ என்ற குழுவைக் கர்நாடக அரசு அமைத்தது. தற்போதுகூட, இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தின் மண்ணின் மக்களுக்கு மாநில அரசுத்துறைகளில் 70 சதவிகிதம் பணி ஒதுக்கீடு தருவதாக உறுதியளித்துள்ளது.

2015-ம் ஆண்டு, குஜராத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 116 பேர் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களில், வெறும் 15 பேர் மட்டுமே குஜராத்தின் மைந்தர்கள். மற்ற 101 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனை எதிர்த்து அம்மாநில இளைஞர்கள், ‘85 சதவிகிதம் பொறியாளர்கள் குஜராத் மண்ணைச் சேர்ந்தவர்களாக மட்டும்தான் இருக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்குக்கு, குஜராத் அரசும் ஆதரவு தந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மக்கள் தங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனைத்து விஷயங்களிலும் நம் உரிமையை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் கவலையுடன்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, “திருச்சி பெல் நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 52-ல், 16 இடங்களில் தமிழர்களும், 36 இடங்களில் வெளி மாநிலத்தவர்களும் பணியமர்த்தப்பட்டனர். 2011-ம் ஆண்டு, மொத்தப் பணியிடங்கள் 163 பேரில், 118 பேர் வெளிமாநிலத்தவர். 45 பேர்தான் தமிழர்கள். ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 2010-11-ம் ஆண்டில் 85 சதவிகிதமும் 2011-12-ல் 87 சதவிகிதமும் 2012-13-ல் 82 சதவிகிதமும் 2013-14-ல் 83 சதவிகிதமும் வெளி மாநிலத்தவர்கள்.

அதேபோல, வருமானவரித் துறையில், 2013-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 42. அதில், தமிழர்கள் இருவர் மட்டும்தான். 2014-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 78. அதில், மூன்று பேர் தமிழர்கள், 75 பேர் வெளி மாநிலத்தவர்கள். இப்படித்தான், தமிழகத்தில் மத்திய அரசுத் தொழிலகங்களில் தமிழர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு தென்னக ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப்-க்கான தேர்வை ஆர்.ஆர்.சி நடத்தியபோது, இந்தியா முழுவதிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், சுமார் 2,27,000 தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன’’ என்றார் அருணபாரதி.

தமிழக அரசுத் துறைகளில் 100 சதவிகிதமும், தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசின் தொழிலகம் மற்றும் தனியார் துறைகளில் 90 சதவிகிதமும் தமிழர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் கோரிக்கையாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்”.

இவ்வாறு அச்செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் படிக்க:
http://www.vikatan.com/juniorvikatan/2017-nov-12/society/136015-ignorance-of-tamil-youths-employment.html
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.