ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"உச்ச நீதிமன்றத் தராசு சாயக்கூடாது!" தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

"உச்ச நீதிமன்றத் தராசு சாயக்கூடாது!" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
கேரளத்தைச் சேர்ந்த அகிலா என்ற மாணவி தமிழ்நாட்டில் சேலம் தனியார் ஓமியோபதி கல்லூரியில் படித்து வரும்போது 2015இல் தன் சொந்த விருப்பத்தின்பேரில் இந்து மதத்தைவிட்டு விலகி இசுலாம் மதத்தில் சேர்ந்தார். மகளின் செயலறிந்து தந்தை அசோகன் மகளைப் பார்க்க சேலம் வந்தபோது, அகிலா தங்கியிருந்த நண்பர் வீட்டைவிட்டு பர்தா முக்காடுடன் வெளியேறி விட்டார். தந்தையைப் பார்க்க மறுத்துவிட்டார். தன் பெயரை ஹாதியா என்று முறைப்படி மாற்றிக் கொண்டார்.

அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு (ஹேபியஸ் கார்பஸ்) போடுகிறார். கேரளக் காவல்துறை அகிலாவை அழைத்து வந்து உயர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்துகிறது. “என் சொந்த விருப்பத்தின் பேரில் சட்டமுறைப்படி இசுலாம் மதத்திற்கு மாறி இருக்கிறேன். யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை” என்று உயர் நீதிமன்றத்தில் கூறுகிறார். பெற்றோருடன் போக விருப்பமில்லை என்கிறார்.

யாருடைய வற்புறுத்தலும் இன்றி சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறியுள்ளார் ஹாதியா. எனவே, மகளிர் அமைப்பொன்றின் தலைவி ஏ.எஸ்.ஜைனாபா என்பவரின் பொறுப்பில் உயர் நீதிமன்றம் அவரை அனுப்பி வைப்பதாகக் கூறுகிறது. இசுலாம் மத வகுப்புகளுக்குப் போகவும் அனுமதிக்கிறது.

மறுபடி ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் போடுகிறார் அசோகன். “இசுலாமியத் தீவிரவாதிகள் தம் மகளை மதிமயக்கி, மதமாற்றம் செய்துவிட்டார்கள். ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்த்து சிரியாவுக்கு அனுப்பும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தன் மகளை சிரியாவுக்கு அனுப்பப் போகிறது. அதைத் தடுக்க வேண்டும்” என்று கோருகிறார். ஜைனாபா இல்லத்திலிருந்து கொச்சியில் உள்ள ஒரு மகளிர் பாதுகாப்பு விடுதிக்கு ஹாதியாவை மாற்றுகிறது உயர் நீதிமன்றம்!

இதற்கிடையில் 2016 திசம்பர் 19இல் செபின் ஜெகான் என்ற இசுலாமிய இளைஞரை முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார் ஹாதியா. தனக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டது பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது. சிரியா போர்க்களத்திற்குப் போவதற்கான ஏற்பாடு இது என்று அசோகன் தரப்பு வாதிடுகிறது. கேரள உயர் நீதிமன்றம் அத்திருமணத்தை செல்லாது என்று அறிவித்ததுடன், பெற்றோருடன் வசிக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறது.

பல மாதங்ளாக வீட்டுச் சிறையில் துன்புற்று வந்தார் ஹாதியா. இந்துத்துவா அமைப்பினர் அப்பெண்ணை அடிக்கடி சந்தித்து மனமாற்ற அறிவுரை என்று “கவுன்சிலிங்” என்ற பெயரில் துன்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஹாதியா கணவர் செபின் ஜெகான். அவருக்கு வழக்கறிஞர் கபில்சிபில்.

உச்ச நீதிமன்றத்தில் 27.11.2017 அன்று நடந்த விசாரணைகள் கவலை அளிப்பதாக உள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மூன்று மணி நேரம் இவ்வழக்கை விசாரித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இது போன்ற ஒரு வழக்கை இதுவரை சந்தித்ததில்லை” என்று தொடங்கினார். “உயர் நீதிமன்றங்களில் பணிபுரிந்த போது நூற்றுக்கணக்கான ஆட்கொணர் மனுக்களை விசாரித்திருக்கிறோம். ஆனால் இது போல் ஒரு வழக்கும் சிக்கலாக இல்லை” என்றார்.

தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) என்ற நடுவண் அரசு அமைப்பு தனது அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளின் காதல் புனிதப்போர் (லவ் ஜிகாத்) மூலம் தன் மகளை மதிமயக்கி, சிரியாவின் போர் முனைக்கு அனுப்பப் போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார் அசோகன். இக்குற்றச்சாட்டில் இந்துத்துவா அமைப்புகளின் தூண்டுதல் இருக்கிறது. அசோகன் கூறிய குற்றச்சாட்டுடன் மேலும் சிலவற்றைச் சேர்த்து, “புலனாய்வு அறிக்கை” என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்திருந்தது. அந்தப் பின்புலத்தில்தான் தீபக் மிஸ்ரா குழம்பினார் என்று கருத இடமிருக்கிறது!

இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்) மனீந்தர் சிங், தீவிரமாக வாதாடினார். “கேரளத்தில் இசுலாமியத் தீவிரவாதிகள் மதிமயக்கி சிரியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்குகள் இத்துடன் சேர்த்து 11 இருக்கின்றன, கேரளக் காவல்துறை இது போன்ற 89 வழக்குகளை விசாரித்துள்ளது, ஹாதியா திருமணத்தை ஏற்பதற்கான ஒரே காரணம் மணமகன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். உண்மை இவ்வாறிருக்க இந்த வழக்கில் ஹாதியாவை அழைத்து உச்ச நீதிமன்றம் கருத்துக் கேட்பதில் பொருளே இல்லை” என்றார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஹாதியாவின் தனிநபர் உரிமையையும் காக்க வேண்டும். அதேவேளை தேசியப் புலனாய்வு முகமை திரட்டியுள்ள மதிமயக்க - மதமாற்றத் தீவிரவாதச் செயல்களுக்கான ஆதாரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குழம்பிக் கருத்துகள் கூறிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறிய கருத்துகள்தாம், 25 அகவை அடைந்த ஹாதியாவின் தனிமனித உரிமையைப் பாதுகாப்பதாக அமைந்தது.
“எந்தக் கட்டத்தில் நீதிமன்றம் தனிநபர் உரிமையைக் காக்கத் துணிந்து தலையிட வேண்டும் என்று கருதுகிறீர்கள்” என்று வழக்கறிஞர் கபில்சிபிலைப் பார்த்துக் கேட்டார். அதற்கு கபில், “தனிநபர் சுதந்திரத்தைத் தகர்க்கும் வகையில் மிகை வற்புறுத்தல்கள் வரும்போது அப்பெண்ணின் விருப்பத்தைக் கண்டறியும் வகையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்றார்.

கேரளாவில், மதிமயக்கி மதமாற்றம் செய்யும் தீவிரவாதம் மேலோங்கி வரும் நிலையில் அதையெல்லாம், என்.ஐ.ஏ. புலனாய்வு செய்து வரும் நிலையில், அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட ஒரு பெண்ணிடம் கருத்தறியும் விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் தலையிடுவது சரியா என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் மனீந்தர் சிங் கேட்டபோது, சந்திரசூட் தக்க விடையளித்தார். “மதிமயக்கம் செய்த வழக்காக இருந்தாலும், அந்த நபர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியாத நிலையில், அவரின் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிராக நீதிமன்றம் தலையிட முடியாதா” என்று எதிர் கேள்வி கேட்டார் சந்திரசூட்.

அசோகன் வழக்கறிஞர் சியாம் திவான், “குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே - உலக நாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுகின்றன” என்றார். அதற்கு சந்திரசூட், “நாம் சர்வாதிகார சமூகத்தில் வாழவில்லை” என்று சூடாக விடை தந்தார்.

நீதிபதி சந்திரசூட் குறுக்கீடுகள் இல்லை என்றால் தீபக் மிஸ்ரா அமர்வு இவ்வழக்கில் இன்னும் மோசமான முடிவு எடுத்திருக்குமோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.

ஏனெனில் தீபக் மிஸ்ரா குழம்புகிறார். இன்னொரு நீதிபதியான கன்வில்கர் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.

கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா - ஜெகான் திருமணத்தை முறித்தது நீதிக்கு முரணான செயல்! இருபத்தைந்து அகவை வந்த பெண்ணும் ஆணும் நலமான தற்சிந்தனையுடன் - இசுலாமிய சட்டதிட்டங்கள்படி செய்திருக்கும் திருமணத்தை எந்த அடிப்படையில் இரத்துச் செய்தது? என்.ஐ.ஏ. சொன்னால் இரத்து செய்துவிடுமா நீதிமன்றம்? இந்தியப் புலனாய்வுத் துறையின் ஒரு பின் இணைப்பா இந்திய நீதித்துறை?

உச்ச நீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா அமர்வு ஹாதியா - ஜெகான் திருமணத்தை ஏற்று, அப்பெண்ணின் விருப்பப்படி கணவருடன் அனுப்பியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஹாதியா சேலம் ஓமியோபதி கல்லூரி விடுதியில் கல்லூரியின் பாதுகாப்பில் இருக்கும்படி இடைக்காலத் தீர்ப்பளித்ததில் என்ன சட்ட நெறி இருக்கிறது?

“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா” - தடை செய்யப்பட்ட அமைப்பு அன்று! சட்டப்படி இயங்கி வருகிறது. அதில் உறுப்பினராகச் சேர ஜெகான் ஒத்துக் கொண்டிருந்தால், அதில் என்ன குற்றம் இருக்கிறது? என்ன தேசத்துரோகம் இருக்கிறது?

ஜெகான், ஹாதியா இருவரும் ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்கான உண்மையான சான்று இருந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுங்கள். இந்துத்துவா அமைப்புகள் கிளப்பிவிடும் புரளிகளுக்கெல்லாம் உச்ச நீதிமன்றம் ஊசலாடுமா?

என்.ஐ.ஏ. விசாரணையை - அதன் அறிக்கையை ஏற்காத கேரள அரசு, திடீரென்று குட்டிக் கரணம் அடித்து, உச்ச நீதிமன்ற விசாரணையில் 27.11.2017இல் என்.ஐ.ஏ. அறிக்கையை ஏற்றுக் கொண்டு, கருத்துத் தெரிவித்தது ஏன்? எப்படி? சி.பி.எம். தலைமை விசாரிக்க வேண்டும்!

ஆரியத்துவாவை அடித்தளமாகக் கொண்ட இந்துத்துவாவை முழுமையாக இந்தியாவில் அரங்கேற்றிவிட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பரிவாரங்கள் நடுவண் அரசைப் பயன்படுத்தி வருகின்றன. இதில் மக்களின் தனிநபர் உரிமையை - மத உரிமையை - சனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பீடம் நீதித்துறைதான்! உச்ச நீதிமன்றத்தின் தராசு சாயக்கூடாது!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் 2017 திசம்பர் 1-15 இதழின் ஆசிரியவுரை இது!).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.