ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“காவிரிப்படுகையில் ஐட்ரோ கார்பன் எடுக்கப்படும்" என்கிறார் பெட்ரோலிய அமைச்சர்” போராடித் தடுப்பதைத் தவிர வழியில்லை! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

“காவிரிப்படுகையில் ஐட்ரோ கார்பன் எடுக்கப்படும்" என்கிறார் பெட்ரோலிய அமைச்சர்” போராடித் தடுப்பதைத் தவிர வழியில்லை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (18.12.2017) அன்புமணி இராமதாசு மற்றும் செங்குட்டுவன் ஆகியோர் நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு, ஐட்ரோ கார்பன் - எண்ணெய், எரிவளி ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆனால், காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை என்று கூறி திசை திருப்பியுள்ளார். ஐட்ரோ கார்பனில் மீத்தேனும் அடக்கம் என்பது அம்பலப்பட்டுப்போன உண்மை! 

நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஐட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். நெடுவாசலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தத் தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் எடுக்க முடியும்; இன்னும் அவை அந்த அனுமதி பெறவில்லை என்றும் கூறியுள்ளார். 

நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் ஏலத்தை, கர்நாடக ஜெம் லேபரட்டரி என்ற தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் நேரடியாக வரவில்லை. அதற்காக, ஓ.என்.ஜி.சி. வண்டிகளும் அதிகாரிகளும்தான் ஐட்ரோ கார்பன் எடுக்க வந்தார்கள். ஏற்கெனவே ஓ.என்.ஜி.சி. நிலம் குத்தகைக்கு எடுத்து, ஆழ்குழாய்க் கிணறு அமைத்து, கச்சா எண்ணெய் எடுத்துப் பார்த்தபின் மூடிவிட்டுப் போன, அதே கிணற்றை ஜெம் லேபரட்டரி நிறுவனத்துக்காகப் புதுப்பிக்கத்தான் வந்தார்கள். 

எண்ணெய் மற்றும் எரிவளி எடுத்ததால் காவிரிப்படுகையில் ஏற்கெனவே நிலமும் நிலத்தடி நீரும் பல ஊர்களில் பாழ்பட்டுப் போனதை அறிந்திருந்த நெடுவாசல் மக்கள் ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்துப் போராடினார்கள். எனவே புதிதாக நிலம் கையகப்படுத்துதல் என்ற தேவை கர்நாடக தனியார் நிறுவனத்திற்கு ஏற்படவில்லை. 

ஏற்கெனவே மீத்தேன் எடுக்க வந்த “தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி” நிறுவனத்தை தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்கள் போராடி வெளியேற்றிவிட்டதால், ஓ.என்.ஜி.சி. மூலம் வேலை தொடங்கச் செய்த சதியை மக்கள் புரிந்து கொண்டு நெடுவாசலில் தடுத்தார்கள். தனியார் ஏலம் எடுத்த 31 இடங்களில் நெடுவாசலும் ஒன்று என்று தர்மேந்திர பிரதான் மக்களவையில் கூறியுள்ளார். 

கதிராமங்கலத்திலும் புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவை எழவில்லை. அங்கு ஏற்கெனவே ஏழு எரிவளிக் கிணறுகள் செயல்படுகின்றன. அங்கு செயல்படாமல் இருந்த எட்டாவது ஆழ்குழாய் கிணற்றைச் செயல்படுத்த ஓ.என்.ஜி.சி. வரும்போதுதான், மக்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள். ஏற்கெனவே உள்ள ஏழு கிணறுகளால் கதிராமங்கலத்தில் நிலமும் நீரும் பாழ்பட்டுப் போனதால் பாதிக்கப்பட்ட மக்கள் எட்டாவது கிணற்றைப் புதுப்பிப்பதை எதிர்த்தார்கள். இந்தக் கிணற்றுக்கான நிலம், ஓ.என்.ஜி.சி.யால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டதுதான்!

எனவே இதற்குப் புதிதாக மாநில அரசின் ஒப்புதலை ஓ.என்.ஜி.சி. கோரவில்லை. மாநில அரசு கதிராமங்கலத்தில் முழுக்க முழுக்க ஓ.என்.ஜி.சி. பக்கம்தான் இருந்தது. 

இங்கு மீத்தேனா, பெட்ரோலியமா, எரிவளியா, ஐட்ரோ கார்பனா என்ற கேள்வியே எழவில்லை! இவற்றில் எதை எடுத்தாலும், யார் எடுத்தாலும் நிலமும் நிலத்தடி நீரும் பாழ்பட்டுப் போகின்றன. எனவே இவற்றில் எதையும் எடுக்கக் கூடாது; ஓ.என்.ஜி.சி.யைக் காவிரி மண்டலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மக்கள் கோரிக்கை! 

பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுத்ததால், நிலத்தடி நீரும் வேளாண் நிலங்களும் பாதிக்கப்படவில்லை என்று தாங்கள் பலமுறை விளக்கிவிட்டோம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், மக்களோ இரசாயனக் கலவையாகிப் போனத் தண்ணீரை நிலத்தடியிலிருந்து எடுத்து காட்டுகிறார்கள். பொதுவான ஆய்வகங்களுக்கு அனுப்பி, அந்நீர் நஞ்சாகி இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள். வேளாண் நிலங்கள் சாகுபடிக்குத் தகுதியற்றுப் போனதை நேரில் காட்டி வருகிறார்கள். ஆனால், இந்திய அரசு “உலகத்தரம்” வாய்ந்த பொதுவான ஆய்வாளர்களையும், வேளாண் மக்கள் பரிந்துரைக்கும் ஆய்வாளர்களையும் கொண்டு பொது நிலையில் ஆய்வு செய்து இதுவரை பாதிப்புகள் குறித்த உண்மை நிலை வெளியிடவில்லை. பாதிப்பு இல்லை என்று ஓ.என்.ஜி.சி. பரவலாக மக்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். ஓ.என்.ஜி.சி. என்பது, எதிர்த் தரப்பாக நின்று கொண்டு, பாதிப்புகளை மறைத்து பரப்புரையும் விளம்பரமும் செய்கிறதே தவிர, மதிக்கத்தக்க ஆய்வாளர்களைக் கொண்டு அவர்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிடவில்லை. 

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பீர்களா என்று மக்களவை உறுப்பினர் இருவரும் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் நேரடியாக விடையளிக்காமல் சுற்றி வளைத்து, கனிம உற்பத்தியும் வேளாண் உற்பத்தியும் கைகோத்து இணைந்தே செயல்படுகின்றன என்று கூறியுள்ளார். 

வேளாண்மையை அழித்து, விவசாயிகளை வெளியேற்றி, கழனிகளைக் கனிம வேட்டைக் காடாக மாற்றுவது என்ற கொள்கையில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, மக்கள் தங்கள் வாழ்வுரிமையைக் காப்பாற்ற ஒருங்கிணைந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.