பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் நா. வைகறை கோரிக்கை!
பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கோரிக்கை!
பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 திசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர்.
தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து சற்றொப்ப மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர். அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் ஊர்திகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தெரு விளக்கின் சுவிட்ச் பலகையை அடித்து நொறுக்கியதால், தெருவிலே இருட்டாகிவிட்டது. தெருவின், இரண்டு புறமும் உள்ள சற்றொப்ப 30 வீடுகளில் கண்ணாடி சன்னல்களை, ஒடுகளை, தொலைக்காட்சிப் பெட்டிகளை, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் முதலியவற்றை வெறி கொண்டு தாக்கியுள்ளனர்.
உயிருக்கு பயந்து கையில் குழந்தைகளுடன் இருட்டில் பெண்கள் ஓடி, பின்பக்கம் தோப்பில் ஒளிந்துள்ளனர். பூட்டிய வீடுகளின் முன்பு நின்று கொண்டு வந்தவர்கள் கூறிய ஆபாச வார்த்தைகள், கொலை வெறித் தாக்குதல்கள் – ஒடுக்கப்பட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
புத்தாண்டு நாளுக்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். சற்றொப்ப 15 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!
எனவே, வீடுகளைத் தாக்கிய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment