ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன! தோழர் பெ. மணியரசன் அறிக்கை !

காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை ! 
தமிழர்களின் காவிரி உரிமை மீட்பு முயற்சியில், இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் முதுகில் குத்திவிட்டன; ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டின் மார்பில் குத்திவிட்டன.


“உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்கக் கட்டளை இடவில்லை; ஏதோ “ஒரு செயல்திட்டம்” அமைக்கத்தான் கட்டளை இட்டுள்ளது” என்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் நேற்று (09.03.2018) பிற்பகல் தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று விவாதித்தபின் யு.பி. சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

இக்கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட வினாக்களுக்கு விடை அளித்த யு.பி. சிங், “நாங்கள் புது வகையான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முயல்வோம்; அச் செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சொன்னபடி ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது; இனிமேல்தான் அப்பணியைத் தொடங்க வேண்டும். காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பதுகூட ஒரு பரிந்துரைதானே தவிர – கட்டளை அல்ல” என்றார். நடுவண் அரசு விரும்புகின்ற “செயல்திட்டத்தை” கூட உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது என்கிறது நடுவண் அரசு!

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம், அதன்கீழ் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தால், உச்ச நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ள 177.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடுமே என்று கவலைப்பட்டுள்ளது நரேந்திர மோடி அரசு!

வரிகளுக்கிடையே படித்து, தோண்டித் துருவிக் கண்டுபிடித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “ஒரு செயல் திட்டம் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது; காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை” என்று நடுவண் அரசு இப்போது கூறுகிறது. அந்த “ஒரு செயல்திட்டம்” எப்படி இருக்க வேண்டும் என்று நான்கு மாநிலங்களும் தனித்தனியே கருத்துகள் வழங்குங்கள் என்று கேட்கிறது மோடி அரசு!

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் கூறிய “ஏதோ ஒரு செயல்திட்டம்” என்ற விளக்கம் கர்நாடக அரசு கூறிய விளக்கம்தான்!

“கர்நாடகத்தின் வன்முறைகள் வளர்க! கர்நாடகத்தின் சட்ட மீறல்கள் வாழ்க! கர்நாடகத்தின் இனவெறி ஓங்குக!” என்று நடுவண் அரசும் உச்ச நீதிமன்றமும் முழக்கம் போடுவதுபோல்தான் நம் காதுகளில் ஒலிக்கிறது!

தமிழர்களுக்கெதிரான கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களையும், இந்திய அரசின் (காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சியாளர்களின்) இனப்பாகுபாட்டு வஞ்சகச் செயல்களையும் கர்நாடகத்தில் வரப்போகும் தேர்தலுக்காக - பதவி அரசியலுக்காக செய்யும் தவறுகள் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு மற்றும் பா.ச.க. தலைமைகளின் தமிழின எதிர்ப்பு உளவியலை “பதவி ஆசை” என்ற பட்டுத் துணியால் போர்த்தி மறைக்கும் ஏமாளிகளாக அல்லது இனத்துரோகிகளாக அந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் சேர்ந்து 22.2.2018 அன்று சென்னையில் காவிரிக்காக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கர்நாடகத்தின் மனம் காயம்படாமலும், நடுவண் அரசுடன் உரசல் ஏற்படாமலும் எச்சரிக்கையுடன் போடப்பட்டதை நாடறியும்!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறி, ஒருதலைச் சார்பாக, தமிழ்நாட்டின் இயற்கை நீதியை மறுத்து வெளிவந்தது. அத்தீர்ப்பில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் பறிக்கப்பட்டதும், அநீதியாகத் தமிழ்நாட்டின் தண்ணீரில் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துக் கர்நாடகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த உண்மைகள்! இப்படிப்பட்ட இந்தத் தீர்ப்புகூட, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஒரு கொலை பாதகச் செயல் போல் உள்ளது!

காவிரியாறு மாநிலங்களுக்குச் சொந்தமில்லை – அது தேசியச் சொத்து என்று கூறி, இந்திய அரசின் அதிகாரத்துக்குக் காவிரி உரிமையை உச்ச நீதிமன்றம் கொண்டு போய் உள்ளது. இவ்வாறான பல இழப்புகளை அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் சுட்டிக்காட்டவே இல்லை!

தீர்ப்புரையின் பத்தி 403 - பக்கம் 457-இல், “A SCHEME” – “ஒரு செயல்திட்டம்” இன்றிலிருந்து (16.2.2018லிருந்து) ஆறு வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கர்நாடகம் வல்லடி வழக்குப் பேச இதுவே வாய்ப்பளித்தது. இந்த “ஏதோவொரு செயல்திட்டம்” (A SCHEME) என்ற தீர்ப்புரையின் சொல்லாடல் குழப்பத்தை உண்டாக்கும் என்று தீர்ப்பு வந்த அன்றே (16.02.2018) நான் தொலைக்காட்சி விவாதங்களில் கூறினேன். மறுநாள் அறிக்கையாகவும் வெளியிட்டேன். “ஏதோ ஒரு செயல் திட்டம்” என்று உச்ச நீதிமன்றம் குழப்பாகக் கூறியதை அனைத்துக் கட்சித் தீர்மானம் கண்டு கொள்ளவே இல்லை!

தீர்ப்பு வந்த அன்று மாலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு செயல்திட்டம்” அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதாக அவர் கூறவில்லை! எனவே, அவருக்கும் “அந்த விவரம்” புரியாமல் இல்லை!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மனமொத்து நிறைவேற்றியது, அனைத்துக் கட்சித் தீர்மானம்!

தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் காவிரி வழக்கை விசாரித்து வருவதை காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள் அங்குலம் அங்குலமாகக் கவனித்து அவ்வப்போது எதிர்வினை ஆற்றியுள்ளோம்.

தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆயம் நடுநிலை தவறி கர்நாடகத்துக்குச் சாய்வாகக் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து, “உச்ச நீதிமன்றமே காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்யாதே” என்று தீர்மானம் போட்டதுடன், 27.07.2017 அன்று பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

“கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டிக் கொள்ளத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்காது, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தந்தால் போதும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள் உமாபதியும், சேகர் நாப்தேவும் வாதிட்டதை எதிர்த்து, 19.08.2017 அன்று முதலமைச்சருக்குத் திருவாரூரில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகுதான், மேக்கேதாட்டு அணையை ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் திருவாரூரிலேயே அறிக்கை வெளியிட்டார். சேகர் நாப்தே உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணையை எதிர்த்தார்.

தீபக் மிஸ்ரா ஆயம் ஒருதலைச் சார்பாக விசாரிக்கிறது என்ற நமது கவலையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர், செல்லமேசுவரர் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தீபக் மிஸ்ரா பக்கச்சார்பு பார்ப்பவர் என்று விமர்சித்தனர். அதன்பிறகு உடனடியாக 18.01.2018 அன்று கூடிய காவிரி உரிமை மீட்புக் குழு தீபக் மிஸ்ரா ஆயம், தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு காவிரி வழக்கை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குக் கோரிக்கை வைத்தோம்.

இன்னுமொரு முகாமையான செய்தி – காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை இரத்து செய்துவிட்டு, காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, காவிரி வழக்கை புதிதாக அமைக்கப்பட உள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திடம் புதிய வழக்காகத் தாக்கல் செய்ய 2017 மார்ச்சில் இந்திய அரசு மக்களவையில் சட்ட வரைவு முன்மொழிந்தது. அதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், என் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 19 நாள் இரவு பகலாக 15.04.2017 வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் – ஏழுநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினோம். இப்போராட்டங்கள் மக்கள் ஆதரவையும், அனைத்துக் கட்சி ஆதரவையும் பெற்ற நிலையில், மக்களவையில் முன்மொழியப்பட்டு விவாதப் பட்டியலில் இருந்த ஒற்றைத் தீர்ப்பாய வரைவு நிறைவேற்றப் படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

காவிரி வழக்கின் மீது காவிரி உரிமை மீட்புக் குழு உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் அ.தி.மு.க.வின் பங்கு என்ன? தி.மு.க.வின் பங்கு என்ன? ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தைத் தடுக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் – அதன் அரசும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

1991 சூன் 25-இல் வெளியான காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பு 1991 திசம்பரில் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 2007 பிப்ரவரி 25இல் இறுதித் தீர்ப்பு வந்தது. அது 2013 பிப்ரவரி 19இல் இந்திய அரசின் அரசிதழில் போடப்பட்டது. இத்தீர்ப்புகள் இரண்டையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை! இந்திய அரசு அவற்றைச் செயல்படுத்தும்படி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உரியவாறு போராடியதுண்டா? வெற்றி கண்டதுண்டா? தி.மு.கழகம் காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் நடுவண் அரசில் பங்கேற்று சாதித்தது என்ன?

எனவேதான் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து, நமது காவிரி உரிமையைப் பறித்துக் கர்நாடகத்திற்குக் கொடுக்கும் இந்தத் தருணத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழ வேண்டும்.

காரைக்கால், சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்! எனவே, தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி மீட்பு சனநாயகப் போராட்டம் நடைபெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தத்தை நடுவண் அரசுக்குத் தர வேண்டும்.

அரசமைப்பு ஆயத் தீர்ப்பு வரும்வரை செயல்படக் கூடிய வகையில் தீபக் மிஸ்ரா ஆயம் கூறியுள்ள தண்ணீரைக் கர்நாடகம் மாத வாரியாகத் திறந்துவிட தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் முதற்கட்டமாக ஒரு வாரம் இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படாதவாறு முடக்கும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.