தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் ! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் ! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், தஞ்சாவூரில், 2018 மார்ச் 17 – 18 ஆகிய நாட்களில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, பழ. இராசேந்திரன், குடந்தை விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், ஓசூர் கோ. மாரிமுத்து, மதுரை இரெ. இராசு, சென்னை க. அருணபாரதி, தஞ்சை ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருநெல்வேலி க. பாண்டியன், சிதம்பரம் ஆ. குபேரன், தருமபுரி க. விசயன், திருத்துறைப்பூண்டி தை. செயபால், மதுரை பே. மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – ஏழுநாள் பரப்புரை இயக்கம் மற்றும் வேண்டுகோள் போராட்டம்
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத உயிரினம் அழிந்துவிடும் என்பது உயிரியல் கோட்பாடு. தற்காக்கும் தகுதியுடையது மட்டுமே தங்கும் என்றார் டார்வின் (Survival of the Fittest). தற்காப்பு ஆற்றலை இழந்த டைனோசர், அன்னப்பறவை போன்றவை அழிந்தன.
தமிழ்நாடு – தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரைமுறையின்றி அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், வெளி மாநில முதலாளிகளின் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இதனால், தமிழர்களின் தொழில்களும், வணிகங்களும் நசுக்கப்படுகின்றன.
அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால் சொந்த மண்ணில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் வெளியாரால் பறிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டில் தமிழர்களின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு அயலார் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
அந்த நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு என்ற பெயர், தமிழ் ஆட்சி மொழி தமிழர் ஆட்சி என்பதெல்லாம் காணாமல் போய்விடும். கலப்பின மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடும். இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் அமைக்கப்பட்டது. இது மாற்றப்பட்டு விடும்!
தமிழ்நாட்டை இப்படி மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, துறைமுகம், வானூர்தி நிலையம் உள்ளிட்ட தொழிலகங்கள் அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களை 80 முதல் 100 விழுக்காடு வரை வேலையில் சேர்க்கிறது.
இதற்காக நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான தேர்வுகள் மோசடியாக நடத்தப்படுகின்றன. பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன. தமிழ்நாட்டை வெளி மாநிலத்தார் வேட்டைக்காடாக்குவது என்பது காங்கிரசு ஆட்சிக்கும், பா.ச.க. ஆட்சிக்கும் பொது வேலைத் திட்டமாக உள்ளது.
இந்த அநீதியைத் தமிழ்நாட்டில் தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தடுக்கவில்லை!
அதுமட்டுமல்ல, இப்போது தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பாக்கித்தான், வங்காளத்தேசம், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரும் சேரலாம் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு 2016-இல் சட்டத்திருத்தம் செய்துள்ளது.
*தமிழர் தற்காப்புக் கோரிக்கைகள்*
1. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வழங்கக் கூடாது.
2. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களையும் வெளி நாட்டினரையும் அனுமதிக்கக் கூடாது. மராட்டியம், கர்நாடகம், குசராத், சத்தீசுகட் மாநிலங்களில் உள்ளது போல் மண்ணின் மக்கள் வேலை உறுதிக்கான சட்டம் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
3. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வேண்டும்.
நடுவணரசு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்.
4. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தை மாநில அரசு கட்டுப்படுத்தும் உள் அனுமதி (Inner Line Permit) சட்டம், தமிழ்நாட்டிற்கும் இயற்ற வேண்டும்.
5. தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
*மக்கள் இயக்கம்*
சட்டப்படியான இந்த ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் செயல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தழுவிய மக்கள் இயக்கம் நடைபெற வேண்டும்.
இதற்காகத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – ஏப்ரல் 17 முதல் 23 வரை ஏழு நாள் பரப்புரை இயக்கம் நடத்துகிறது.
அதன்பிறகு, இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வலியுறுத்தி, திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (Workshop) வாயில் முன் - மே 7 - ௮ன்று வேண்டுகோள் போராட்டம் நடைபெறும்!
தமிழர்களே, தற்காப்பு உணர்ச்சியுடன் இப்பரப்புரைகளில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள்!
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசை வலியுறுத்தும் வகையில், ஒரு வார காலம் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டம் நடத்த வேண்டும்!
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு சமநீதி வழங்காமல், அநீதி இழைத்துள்ளபோதிலும், அதையும் செயல்படுத்த வழக்கம்போல் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது. அந்த அடாவடித்தனத்தை நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலுள்ள இந்திய அரசு பாராட்டும் வகையில், கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
கடந்த 09.02.2018 அன்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதன்முடிவில், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கோரவில்லை என்றும், “ஏதோவொரு செயல்திட்டம் அமைக்கலாம்” என்றும் கூறியுள்ளது, எனவே “ஏதோவொரு செயல்திட்டம்” அமைப்போம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 403ஆவது பத்தியில், “ஒரு செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. அதேவேளை, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையில்லை என்று கூறவில்லை. ஆனால் இதில் நடுவண் அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற நிலைபாட்டை தேர்வு செய்து, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
தொடர்ந்து, 1991லிருந்து இடைக்காலத் தீர்ப்பு, இடையிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை இந்திய ஆட்சியாளர்கள் (காங்கிரசு மற்றும் பா.ச.க.வினர்) செயல்படுத்த மறுத்துவந்ததைப் போலவே, இப்போது பா.ச.க. ஆட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கிறது.
இந்நிலையில், காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் தமிழர்களின் உயிர் நீரோட்டமாக இருக்கும் காவிரி உரிமையை மீட்க, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட வேண்டிய தேவை இருக்கிறது.
நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஒரு வார காலம் தமிழ்நாட்டில் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தோழமை இயக்கங்கள், கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றோடு கலந்து பேசி, விரிவான போராட்டத்திற்குத் திட்டமிடுவது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு முடிவு செய்கிறது.
3. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும்!
கடந்த ஆண்டு(2017), தமிழ்நாட்டில் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, சமூக நீதியை மறுப்பதாகவும், தமிழ்நாட்டு உரிமையை மறுப்பதாகவும் இருந்ததை அனுபவத்தில் பார்த்தோம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கடந்த ஆண்டு - கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி, மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட, “நீட்” தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த அநீதிக்கு தமிழினம், பலிகொடுத்த மாணவிதான் அரியலூர் அனிதா!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், மிக அதிகப்பெண் வாங்கித் தேறியவர்களில் ஐந்து பேர் மட்டுமே, கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள் என்ற அவலம் நெஞ்சைப் பிளக்கும்
செய்தியாகும்!
எனவே, இவ்வாண்டிலிருந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு முழு விலக்குக் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கும் இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு இந்திய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment