ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன்

உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர்,  தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
இப்பொழுதும் நமது ஊர்ப்புறங்களில் ஒற்றையடிப் பாதைகள் இருக்கின்றன. காடுகளின் வழியாக - வேளாண் நிலங்களின் ஊடாக அந்த ஒற்றையடிப் பாதைகள் போகின்றன.

ஓர் ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலக் குறைவான பாதை என்பதால் அதற்கு ஒற்றையடிப் பாதை என்று பெயர்!

அந்த ஒற்றையடிப் பாதை ஒன்றில் ஒருநாள் அடுத்தடுத்து மூன்று பேர் வெவ்வேறு நேரங்களில் பயணம் சென்றனர். அப்பாதையின் நடுவில் முள்கொத்து ஒன்று கிடந்தது.

முதலில் சென்றவர் முள் கொத்தைக் கவனிக்காமல், அதன் மீது ஏறிச் சென்றார். காலில் முள் குத்தி குருதி வந்தது. அவர் தன் காலில் குத்திய முள்ளை எடுத்து விட்டுப் பயணம் தொடர்ந்தார். அந்த முள் கொத்து அப்படியே பாதை நடுவே கிடந்தது.

அடுத்து, அவ்வழியே வந்தவர் முள்கொத்தைப் பார்த்துவிட்டார். தன் காலில் முள் குத்தாமல் இருக்க ஒதுங்கி நடந்து சென்றார். முள்கொத்து அதே இடத்தில் கிடந்தது.

மூன்றாவதாக வந்தவர் முன்கூட்டியே முள் கொத்தைக் கவனித்து விட்டார். அவர் முள்கொத்தின் அருகே சென்று அதை எடுத்து, அருகில் உள்ள முள்புதர் ஒன்றில் போட்டுவிட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்த மூன்று பேரும் நம் சமூகத்தில் இருக்கின்றனர். நாம் இவர்களில் யார் போல் இருக்க வேண்டும்? சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம்! ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா? செயல்படுகிறோமா? இது அவரவரும் நெஞ்சைத் தொட்டு சொல்லிக் கொள்ள வேண்டிய விடை!

ஒரு திருமண மண்டபத்தில் உணவருந்தியவர்கள் கை கழுவுமிடத்தில் பல குழாய்களில் பலர் கை கழுவிக் கொண்டிருந்தினர். நீர் வழியும் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, கழுவிய நீர் கீழே குழாயில் வடியாமல் தொட்டி நிரம்பிவிட்டது. நிரம்பிய தொட்டி நீர், வெளியில் வடியும் நிலை. அப்போதும் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் சிலர் இலேசாக நீர் திறந்து கழுவிச் சென்றனர். ஒருவர் மட்டும் கையை உள்ளே விட்டு, தொட்டியின் அடைப்பை நீக்கினார். கணநேரத்தில் தொட்டி வற்றிவிட்டது. அவர் தன் கையை, அருகில் இருந்த சோப்பினால் நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டார். அவர் கை நாறவில்லை. அவர் கை புண்ணாகவில்லை. அவர் கை புனிதப்பட்டது!

காவிரி ஆற்று நீரில் சட்டப்படியுள்ள தமிழ்நாட்டின் உரிமையை மறுத்துக் கர்நாடக அரசு வன்மத்துடன் செயல்படுகிறது. தமிழர்களுக்கெதிராக கர்நாடகத்தில் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் அது தமிழர்களுக்கெதிராக வஞ்சகத்துடன் செயல்பட்டு, நமது காவிரி உரிமையை மறுத்து வருகிறது. சட்டப்படி இந்திய அரசால் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் 1991 - இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், 2007 - இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்!

இனப்பாகுபாட்டின் எல்லைக்கே சென்று இந்திய பா.ச.க. ஆட்சியும், உச்ச நீதிமன்றமும் மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு, நடுநிலை தவறிய தீர்ப்பொன்றை 16.02.2018 அன்று வழங்கியது.

“உலக நகரம் பெங்களூர்” என்று உச்ச நீதிமன்றம் வர்ணித்து, அதன் முழுத் தண்ணீர்த் தேவைக்கும் காவிரித் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்காகத் தமிழ்நாட்டின் பங்கு நீரில் இருந்து 4.75 ஆ.மி.க. எடுத்து கர்நாடகத்திற்கு வழங்கியது. ஆனால் பெங்களூரைவிட எல்லா வகையிலும் பெரிய நகரம் சென்னை என்றும் அதன் குடிநீர்த் தேவைக்குக் காவிரி நீர் வேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதத்தை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

கர்நாடகத்தில் காவிரிப் படுகைக்கு வெளியே உள்ள 28 மாவட்டங்களில் வறட்சி ஏற்படுகிறது என்று கூறி, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 10 ஆ.மி.க. தண்ணீரை எடுத்துக் கர்நாடகத்திற்கு வழங்கியது தீபக் மிஸ்ரா ஆயம்! தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன! அவற்றை ஏன் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை?

காவிரித் தீர்ப்பாயம் தமிழ்நாட்டின் பங்கு நீரை மிகவும் குறைத்து 192 ஆ.மி.க. என்று இறுதித் தீர்ப்பில் வழங்கியதிலும் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துத் தமிழ்நாட்டின் பங்கு நீரை 177.25 ஆ.மி.க. ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்றம்!

இந்த்த் தீர்ப்பும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்பிறகு?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இவ்வளவு பாதகங்கள் இருந்தபோதும் - இதனைத் தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்றனவே அது எப்படி? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்த பாதகங்கள் பற்றி வாய்த் திறக்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதும் என்று அறிக்கைப் பந்தயத்தில் இறங்கினவே அது எப்படி?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறிய ஒருதலைச் சார்பானது; தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வந்த 16.02.2018 முற்பகலில் இருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் - காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியவற்றின் சார்பில் ஊடகங்களில் நான் கருத்துகள் கூறி வந்தேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதகங்களைத் திருவாளர்கள் வைகோ, தி. வேல்முருகன் போன்ற கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ, அரசின் ஏற்பிசைவு பெற்ற எதிர்கட்சியான தி.மு.க.வோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கேற்பட்ட இழப்புகளையும் பாதகங்களையும் முதன்மைப்படுத்தி எதிர்க்கவில்லை. “இதையாவது செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டின் ஆட்சி ஆகியவற்றின் “தற்காப்பு ஆற்றல்”, “தன்மான உணர்வு”, “எதிர்காலத் தலை முறையின் மீதான அக்கறை” முதலியவற்றின் “தரத்தை”ப் புரிந்துகொண்ட கர்நாடக அரசும், கர்நாடகக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கத் தொடங்கின.

வரலாறு நெடுகத் தமிழர்களுக்கு எதிராக வடவர்கள் கக்கி வந்த ஆரிய நஞ்சை நெஞ்சில் நிறைத்துக் கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடக் கூறவில்லை; ஏதாவதொரு செயல்திட்டம் (கி ஷிநீலீமீனீமீ) அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளது என்று திசை திருப்பினர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களைச் கூட்டித் தில்லியில் இதனை அறிவித்தனர் (09.03.2018).

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலும் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் (22.02.2018) ஒரு மனமாக நிறைவேற்றிய தீர்மானம் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கிழைத்த அநீதிகளைச் சுட்டிக் காட்டவில்லை. அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு களைப் பற்றிப் பேசவில்லை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தின் பங்கு நீரில் ஐந்து ஆ.மி.க. குறைத்திருந்தால் - கர்நாடகம் இந்நேரம் போர்க்களமாகி இருக்கும்! நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆகியோர் கொடும் பாவிகளை வீதிக்கு வீதி சந்துக்கு சந்து எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழர்களைத் தாக்கியிருப்பார்கள்; தமிழர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடியிருப் பார்கள். தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இவையெல்லாம் நம் மிகைக் கற்பனைகள் அல்ல! 1991 டிசம்பரிலும் 2016-லும் நடந்தவைதான்!

கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் கொலைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிராகச் செய்யுங்கள் என்று நாம் கூறவில்லை.

உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் காவிரியில் சட்டத்திற்குப் புறப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளுக் கெதிராக இழைத்துவரும் அநீதிகளை எதிர்த்து அறவழியில் - சனநாயக முறையில் மாபெரும் மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் எழவில்லையே ஏன்?

போராட்டம் இல்லையென்றாலும் உரிமைக்குரல் உரியவாறு ஒலிக்கவில்லையே, ஏன்? “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள்! ஏன்?

தங்கள் உரிமைக்காக மக்கள் எழுச்சி கொள்ளாததற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. அடைய வேண்டிய இலக்காகப் பதவி நாற்காலிகளை ஆக்கிக்கொண்ட அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைக் காக்கவும் மீட்கவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்ப தில்லை. உரிமை மீட்பு உணர்ச்சியில் மக்கள் தீவிரம் கொள்ளாமல் இந்தத் தலைவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

உரிமை உணர்ச்சி மக்களிடம் பீறிட்டால் - உண்மையான இலட்சியங்களை நோக்கி மக்கள் முன்னேறுவார்கள். தலைமை, தங்கள் கையைவிட்டுப் போய் விடும் என்று அச்சப்பட்டார்கள் தலைவர்கள். இந்த நிலை, கடந்த காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடர்கிறது!

2. மக்களிடையே உரிமைக்கான எழுச்சியின்மை, செயலின்மை ஆகியவற்றிற்குப் பல காரணங்கள் இருக் கின்றன.

முதல் காரணம், முன் முயற்சி எடுக்கத் தயங்குவது! அரசியல் தலைமைகள், மண்ணின் மக்களை - ‘குடிமக்கள்’ என்ற உரிமை உணர்ச்சியற்றவர்களாய் - அரசிடம் இலவசங்களை எதிர்பார்க்கும் ‘பயனாளி’களாய் மாற்றியுள்ளன.

ஊடக வெளிச்சத்தில் பளப்பளப்புக் காட்டும் அடையாளப் போராட்டங்களில் பங்கெடுத்தால் போதும் என்ற மனநிலை மக்களிடம் வளர்ந்தது. காலப்போக்கில் களப் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் மக்களின் ஆர்வம் குறைந்தது.

பணம், பாட்டில், பிரியாணி என்ற முப்பெரும் கவர்ச்சி காட்டி மக்களைக் கூட்டங்களுக்கு அழைக்கும் பழக்கத்தைக் கட்சிகள் உண்டாக்கிவிட்டன.

இந்த முப்பெரும் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத மக்களிடம் எழுச்சி வராதது ஏன்?

1. புகைப்பிடிப்பவர்களிடையே தொடர்ந்து பழகினால் புகைப்பிடிக்காதவரும் அதனால் பாதிக்கப்படு வார்கள் அல்லவா! அதுபோல் தமிழ்நாட்டின் பொது மனநிலை பாதிக்கப்பட்டபோது, நல்லவர்களும் துணிச்சல் இழக்கிறார்கள்; முன்முயற்சி இழக்கிறார்கள்.

2. உரிமை இலட்சியங்கள் - கோரிக்கைகள் பற்றிப் பேசினால், உடனே இந்த நல்லவர்கள் இது சாத்தியமா என்று கேள்வி கேட்பார்கள்.

நமது இலட்சியம் தவிர்க்க முடியாத தேவையா, சரியானதா என்று சிந்திக்காமல் சாத்தியமா என்று சிந்திப்பார்கள். தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள காவிரி உரிமை மீட்பு போன்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது அது சாத்தியமா என்று ஒருவர் சிந்தித்தால் - அவர் முன்முயற்சி எடுக்கத் தயங்குபவர் - என்று தெரிகிறது.

படைவலிமை மிக்க பிரித்தானிய காலனி ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது சாத்தியமா என்று தான் அக்காலத்தில் மக்களில் பலர் பரவலாகக் கேட்டார்கள். அரசியல் தலைமையும் மக்களும் போராடி வெள்ளை அரசை வெளியேற்றினார்கள் அல்லவா!

இந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராடி நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற முடியுமா என்று சிலர் கேட்டார்கள். அந்த கிராம மக்கள் துணிந்து போராடினார்கள். மற்ற கிராமங்களும் மக்களும் பல்வேறு அமைப்பினரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள். இதுவரை ஓ.என். ஜி.சி. அங்கு நுழைய முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் விளைநிலங்களில் கெயில் குழாய்கள் புதைக்கப்படாமல் தடுத்தது, திருவண்ணாமலைப் பகுதியில் கவுத்திமலை - வேடியப்பன் மலை ஆகியவற்றை வடக்கிந்தியப் பெருங்குழுமங்களின் வேட்டையிலிருந்து பாதுகாத்தது, ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு உரிமையை மீட்டது என மக்கள் ஆற்றல் - சாதனை களைப் படைத்துதான் வருகிறது.

“சாத்தியமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் சாத்தியமாகாது!

“இதையாவது கொடு” என்று உரிமை பறித்தவனிடம் கேட்டால் அவன் எதையும் கொடுக்கமாட்டான்!

அப்படித்தான் காவிரி உரிமைப் போராட்டத்தில் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்.

1934 - இல் மேட்டூர் அணை திறந்ததிலிருந்து 1984 வரை ஓர் ஆண்டிற்கு சராசரியாக 361.5 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து வந்தது. அது 1991இல் தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பில் 205 ஆ.மி.க. ஆனது. அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 ஆ.மி.க. ஆனது. அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177.25 ஆ.மி.க. ஆனது. இதுவும் உறுதியில்லை என்னும் வகையில், தீர்ப்பாயம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்போம் என்கிறது நடுவண் அரசு! ஏன் இந்த வீழ்ச்சி?

தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பி ஏமாந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒவ்வொரு தடவையும் இதையாவது கொடு என்று நம் மக்கள் கெஞ்சியது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அது இழைத்துள்ள அநீதியை நாம் விளக்கியுள்ளோம்.

உச்ச நீதிமன்றம் இழைத்துள்ள அநீதியைப் போக்கி - நீதியைப் பெற காவிரி வழக்கிற்கு ஏழு அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் கட்சிகளும் மக்களும் கோர வேண்டும் என்றோம். இதற்கான முன்னெடுத்துக் காட்டாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் முல்லைப் பெரியாறு வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டினோம். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் இதுபோன்ற சரியான கோரிக்கை வைக்கவில்லை. மற்ற விவசாய சங்கங்களும் இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.

எனவே இவ்வளவுதான் தமிழ்நாடு என்று புரிந்து கொண்ட இந்திய அரசின் தலைமை அமைச்சர் மோடி, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் வரும் அனைத்துக் கட்சிக் குழுவைக்கூட சந்திக்க மறுத்து விட்டார். கடைசியில் ‘காவிரி மேலாண்மை வாரியம் என்பது தீர்ப்பில் இல்லை; ஏதோ ஒரு செயல் திட்டம் என்றுதான் உள்ளது. அப்படித்தான் அமைப்போம்’ என்கிறது மோடி அரசு!

கடந்த காலங்களில் அதிகாரம் இல்லாமல் அமைக்கப் பட்ட காவிரி ஆணைக்குழு (Cauvery Authority), காவிரி கண்காணிப்புக் குழு (Cauvery Monitoring Committee) போல் ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்பதாகச் சொல்கிறது.

தமிழர்களே, உழவர்களே இந்தக் கட்டத்திலாவது சிந்தியுங்கள்!

“இதையாவது கொடு” என்று கெஞ்சுவதை விட்டொழியுங்கள்; உரிமைக்குரலை உரத்து முழங்குங்கள்!

தமிழ்நாட்டில் கடலில் போய் வீணாக ஆயிரக்கணக்கான ஆ.மி.க. தண்ணீர் விழுவதாகவும் அதைத் தேக்கிட ஏரி, குளங்களை ஆழப்படுத்தி புதிய நீர்த் தேக்கங்களைக் கட்டினால் கர்நாடகத்திடம் கையேந்திட வேண்டியதில்லை என்றும் சிலர் கதையளக்கிறார்கள். களத்தில் இறங்காமல் திசைமாற்றிவிட சிலர் இப்படி கயிறு திரிக்கிறார்கள்.

தமிழ்நாடு மழை மறைவு மண்டலம்! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுப்பதால், கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெருமழை கொட்டுகிறது. தமிழ்நாட்டில் காவிரி மண்டலத்தில் கடலில் போய்க் கலக்கும் மழை நீர் கடலில் மிகமிகக் குறைவு!

காவிரி, பூம்புகாரில் போய் கலப்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம் ஆகிவிட்டது. அதுவும் அதிகம் போனால் 20 ஆ.மி.க. இருக்கும்! தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது? வைகை கடலுக்கே போவதில்லை. தென்பெண்ணை, பாலாறு, போன்றவற்றில் தண்ணீர் பார்ப்பதே அரிது!

தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்க்காமல் பெய்தால் அதிக அளவாக 950 மில்லி மீட்டர் பெய்யும்! கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர்! கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர்! கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர்! இதில் கணிசமான நீர் அரபிக் கடலில் கலக்கிறது!

நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்குக்கிடையே ஓடலாம். அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படலாம். தமிழ்நாட்டிற்கு மட்டும் காவிரி வராதா? கர்நாடகம் பிச்சை போட வேண்டுமா என்ற உரிமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் வேண்டும்!

“நல்லது நடக்க வேண்டும்; அதற்காக நாம் போராடி சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது” என்று சிலர் நினைக்கிறார்கள். இது தன்னலவாதமில்லையா? கோழைத்தனம் இல்லையா? நாம் ஒரு மறியலுக்கோ, முற்றுகைக்கோ அழைத்தால் சிலரிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன?

கைது இருக்குமா? கைது செய்தால் மாலையில் விட்டுவிடுவார்களா?

இப்போது மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கலந்த கொண்டதற்காக ஆண்டுக் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் சிறையில் கிடப்போர் யார்? குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது? போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது! அதைத் தாங்கி வெளிவரும் ஆற்றல் அந்த ஒருங்கிணைப்பாளர்க்கு இருக்கிறது!

பத்து நாள் - பதினைந்து நாள் சிறையிலிருந்தால் எதிர்காலமே இருண்டு விடுமா? குடும்பமே நாசமாகி விடுமா? உள்மனத்தில் சிறை பற்றி ஏன் இந்த பீதி? தமிழினத்தின் உரிமைக்காக சிறை செல்வது பெருமை இல்லையா?

நமக்காக யாரோ ஒரு கதாநாயகன் வந்து தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவார் என்பதைக் காட்டிலும் ஏமாளித்தனம் - கோழைத்தனம் வேறு உண்டா? 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன! ஏன்? உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் மக்கள் எழுச்சி இல்லாததால்! மக்களிடமும் விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது, தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கும் வசதியாய்ப் போய்விட்டது!

கடவுள் அவதாரங்களே போராடித்தான் நீதியை வெல்லச் செய்தன! அறிவுரை கூறி அல்ல! துரியோதனனிடம் கண்ணன் அறிவுரை எடுபட்டதா? இல்லை! குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டித் தான் கண்ணனால் ‘நீதி’யை வென்றெடுக்க முடிந்தது. தன் மனைவி சீதையை அனுப்பிவிடச் சொல்லி இராவணனிடம் அனுமனை அனுப்பிய இராமன் முயற்சி வென்றதா? இல்லை! இராமாவதாரம் போரிட்டுத்தான் தன் மனைவியை மீட்க முடிந்தது.

சிலுவையில் அறையப் போவது அறிவிக்கப்பட்ட பின்னும், ஏசு மன்னனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை! நபிகள் நாயகம் படைதிரட்டிச் சென்றுதான் மெக்காவை மீட்க முடிந்தது!

இவற்றையெல்லாம் படிப்போம்; இவற்றையெல்லாம் போற்றுவோம்; வழிபடுவோம் ஆனால் நாம் நம் கால உரிமைகளுக்காக - சனநாயகப் போராட்டங்களில் பங்கு பெறக் கூடாது; போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பொன்மொழிகளை உருவாக்கிக் கொள்வோம் என்றால் என்ன பொருள்?

அரசாங்கம் போட்ட சட்டத்தையும், திட்டத்தையும் நம்மால் மாற்றிவிட முடியுமா என்று கூறி தனது பல வீனத்தை மறைத்துக் கொள்வது என்ன ஞாயம்? மக்கள் போராட்டங்கள் எத்தனையோ சட்டங்களை மாற்றியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றச் செய்துள்ளன. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடந்த உழவர்கள் எழுச்சி யினால்தான், வேளாண் பணிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் நிலை உருவானது.

அரசியலுக்கு வராத நிலையில், அன்னா அசாரேவும், கெஜ்ரிவாலும் மக்களைத் திரட்டிப் போராடியதால்தான் ஆட்சியாளர்களின் ஊழல்களை விசாரித்துத் தண்டிப்பதற்கான லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.

இப்படிப்பட்ட அவ நம்பிக்கையாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி காவிரி உரிமை மீட்க, பயிர்க்காப்பீட்டுத் தொகை பெற்றிட, ஓ.என்.ஜி.சியை விரட்டியடிக்க நடக்கும் போராட்டங்களில் நம் உழவர்களும் இளையோரும் திரளாகப் பங்கு கொள்கின்றனர்.

நம் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் இதுவரை சனநாயகப் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள், இனி ஊக்கத்தோடு கலந்து கொள்ளுங்கள்! வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் பின் தங்கிவிடக் கூடாது. நம் முன்னோர்கள் போர்க்குணத்தின் சின்னமாய் விளங்கியவர்கள்!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,  மார்ச் 16 - 31, 2018

கண்ணோட்டம் இணைய இதழ்

ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.