ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! பெ. மணியரசன் அறிக்கை!

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. 

“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது : 

“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.

இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்!

ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு  முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது. 

உச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! 

அடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது. 

1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும்! புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்! 

இந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது. 

அடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது. 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது! 

காவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது. 

கடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் - நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.  

ஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம்! இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்?

அதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட - கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

இவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று  அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்! 

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.