ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம்! காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம்! காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் - தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கில் நேற்று (03.05.2018) தீபக் மிஸ்ரா ஆயம் நடத்திய விசாரணையும் கூறிய முடிவுகளும் அந்த ஆயத்தின் மீது கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டது.

கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை அமைச்சரும் மற்ற நடுவண் அமைச்சர்களும் போய்விட்டதால் அமைச்சரவையைக் கூட்டி – அதில் காவிரிக்கான செயல் திட்டத்தை வைத்து ஒப்புதல் கேட்க வாய்ப்பில்லை, எனவே மேலும் இரண்டு வாரம் தள்ளி காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தீபக் மிஸ்ரா ஆயத்தின் முன் கூறினார்.

கே.கே. வேணுகோபாலின் இந்தப் பொய்க் கூற்றை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா, நரேந்திர மோடி அரசைக் கண்டிப்பதுபோல் பாவனை காட்டினார். இவ்வாறு வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் கூறிய நாளுக்கு முதல் நாள்தான் (02.05.2018) புதுதில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூடி சுரங்கம், புகையிலை, மருத்துவமனை உள்ளிட்ட ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது.

அதற்கு முன் 2018 ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையில், தீபக் மிஸ்ரா ஆயம் 03.05.2018க்குள் “செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்பிறகு, 11.04.2018 அன்றும், 25.04.2018 அன்றும், கடைசியாக 02.05.2018 அன்றும் என மூன்று முறை நடுவண் அமைச்சரவை கூடியுள்ளது. அமைச்சரவைக் கூடுவதற்கே நேரமில்லை என்று நரேந்திர மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவது எவ்வளவு பெரிய பொய்!

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்புடன் – அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற ஒற்றை முழக்கம் தமிழ்நாடு முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோரிக்கையலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன் உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்திடம் கோரினார் தீபக் மிஸ்ரா! சற்று நேரத்தில், அதைக் குறைத்து 2 டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடகம் நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று முதலில் கட்டளையிட்டார் தீபக் மிஸ்ரா. கர்நாடக அரசு அவ்வாறு திறந்துவிட மறுத்துவிட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு கட்டளையிட்டார். அதையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகு, நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு அடுத்தடுத்து 4 வாய்தாக்களில் தீபக் மிஸ்ரா கட்டளையிட்டார். அதையும் செயல்படுத்த முடியாது என்று சித்தராமையா மறுத்துவிட்டார்.

இதற்காக முதலமைச்சர் சித்தராமையா மீதோ, கர்நாடகத் தலைமைச் செயலாளர் மீதோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீபக் மிஸ்ரா ஆயம் பதிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஆயம் கட்டளையிட்டபடி 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாசன அமைச்சர் எம்.பி. பாட்டிலும் நேற்றே (03.05.2018) கூறி விட்டார்கள். இந்த நீதிமன்ற அவமதிப்புக்கு தீபக் மிஸ்ரா ஆயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அடுத்து, பெயரை மட்டும் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று வைத்துக் கொண்டு, காவிரித் தீர்ப்பாயம் கூறிய அதன் கட்டமைப்பு மற்றும் அதன் அதிகாரங்களையெல்லாம் பறித்து, அதிகாரமற்ற ஒரு “செயல் திட்டத்தை”க் கொண்டு வர இந்திய அரசு முயல்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கு துணை போகும் என்று கருதக் கூடிய நிலையில்தான் அதன் விசாரணை முறை உள்ளது.

நடுவண் அரசின் நீர்வளத்துறை 29.03.2018 நாளிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கேட்கும் மனுவில், காவிரித் தீர்ப்பாயம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமில்லாத உதவாக்கரை வாரியமாக மாற்றியமைக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்திடம் அது விளக்கங்கள் கேட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு :

1. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பாயம் சொல்லியதில் தொழில்நுட்பத் துறை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதை ஆட்சித்துறை அதிகாரிகளையும், தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் கொண்டதாக மாற்றி அமைக்கலாமா?

2. காவிரித் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியுள்ளவற்றை மாற்றி அமைக்கலாமா?

3. இதில் தொடர்புடைய மாநிலங்கள் கூறக் கூடிய மாற்றுக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மாற்றி அமைக்கலாமா?

4. இந்த புதிய “செயல் திட்டத்தை” உருவாக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறையின் விளக்கம் கேட்கும் மனுவின் சாரம் இதுதான்!

இதன் பொருள், காவிரித் தீர்ப்பாயம் கூறிய “காவிரி மேலாண்மை வாரியம்” என்பதை சாரத்தில் கொன்றுவிட்டு, அதிகாரமில்லாத ஒரு செயல்திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில், அல்லது வேறொரு பெயரில் கொண்டு வரவே இந்திய அரசு விரும்புகிறது என்பதாகும்! 
நேற்று (03.04.2018) நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், காவிரி செயல் திட்டம் தயாராகிவிட்டது, நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியது மேற்கண்ட சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான்!

எனவே, கர்நாடகத்தின் இனவெறிச் செயலுக்கும் நடுவண் அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறைக்கும் துணை போகக் கூடிய நிலையில், தீபக் மிஸ்ரா ஆயம் செயல்படும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே வேண்டும் என்று கோரிக்கையைத் துல்லியமாக்கி, கடுமையாகப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு, இந்திய அரசினுடைய நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அளவிற்கு ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும்! இந்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலையை குறிப்பிட்ட காலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.