புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நேற்று (24.12.2018) கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 தனியார் தொழிலகங்கள் தமிழ்நாட்டில் நிறுவிட அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இப்பதினாறு தொழிலகங்களில் தென் கொரியா தொழிலகங்கள் இரண்டின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது.
இத்தொழிலகங்களுக்கான அனுமதியை வழங்கும்போது, அவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களா என்பதையும், அந்நிறுவனத்தின் கடந்த கால வரலாற்றையும் பார்த்து, அதற்கேற்ப தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். ஆபத்தான தொழில் நுட்பம் எனில், அத்தொழிலகங்களுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்க வேண்டும்.
இப்போது வரவுள்ள புதிய தொழிலகங்கள், தமிழ்நாட்டின் மண்ணின் மக்களின் தொழில் – வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் இருக்குமா என்பதும் ஐயமாக உள்ளது.
பன்னாட்டு மற்றும் வெளி மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது போல் தெரிகிறது. அப்படியென்றால், தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்த் தொழில் முனைவோர் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடிய சூழல் உருவாகும்!
இதுவொருபுறம் இருக்க, 34,000 பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிய தகுதி பெற்று 90 இலட்சம் பேருக்கு மேல் வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு தனியார் வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தியும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்த ஆவணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் வழங்கியுள்ளோம். கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கு சட்ட ஏற்பாடு இருப்பதுபோல், தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரி வருகிறது.
அண்மையில், மத்தியப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத், மத்தியப்பிரதேச மக்களுக்கு 70 விழுக்காடு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்குத் தான் தொழில் துறையில் ஊக்கங்களும், சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இவ்வளவு முன்னெடுத்துக்காட்டுகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடு செய்யாதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, புதிதாக உருவாக்கப்படும் 34,000 வேலைகளில் 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதியும், சலுகைகளும் தர வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment