ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தஞ்சை பெரிய கோயில் இரவிசங்கர் பரப்புரைக்கு “ஆனந்த விகடன்” கண்டனம்!

தஞ்சை பெரிய கோயில் இரவிசங்கர் பரப்புரைக்கு “ஆனந்த விகடன்” கண்டனம்!
“வரலாற்றுக்கே துரோகம்!” என்ற தலைப்பில், தஞ்சை பெரிய கோவிலில் சிறீ சிறீ இரவிசங்கர் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து - பாராட்டத்தக்கவகையில் ஆசிரியவுரையைத் தீட்டியுள்ளது “ஆனந்த விகடன்” வார ஏடு. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் நாட்டின் பொக்கிஷங்கள். அவற்றையெல்லாம் போற்றிப் பாதுகாக்கத்தான், தேசிய மற்றும் மாநில அளவில் தொல்பொருள் துறைகளை உருவாக்கியிருக்கிறோம். பல்வேறு சட்டங்களையும் உருவாக்கி, அமல்படுத்திவருகிறோம். இத்தகைய சூழலில், ஆயிரமாண்டுப் பழைமைவாய்ந்த தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம்... பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை அமைப்பு’ சார்பில் கோயிலுக்குள் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடானது. ஒரு நபருக்கு 3,500 ரூபாய் அனுமதிக்கட்டணம் வேறு வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், ‘கோயிலின் தொன்மைக்கு ஆபத்து வந்துள்ளது, வணிகரீதியிலான நிகழ்ச்சியைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது’ என்று, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலாக... கடைசி நிமிடத்தில் அதிரடியாக அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் போன்றவை மத வழிபாட்டு இடங்கள் என்பதைத் தாண்டி, நாட்டின் வரலாற்றையே உலகுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் அதிசயங்கள். இவையெல்லாம் உச்சபட்சப் பாதுகாப்பிலிருப்பவை. தஞ்சாவூர்க் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் சிலைக்கே அந்த வளாகத்தில் அனுமதியில்லாததால், சாலையோரத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறான் ராஜாதி ராஜன்.

1997-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். யாகசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் தொல்பொருள் துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கத் துணிந்தது எப்படி?

ஆன்மிக அமைப்புகளுக்கும் பொறுப்பு உணர்வு தேவை. குறிப்பாக, இதே வாழும் கலை அமைப்பு, 2016-ம் ஆண்டு ‘கலாசார விழா’ என்ற பெயரில் டெல்லியின் யமுனை நதிக்கரையில் பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. ‘நிகழ்ச்சியின் காரணமாக நதி தீரத்தில் ஏறக்குறைய 400 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது சரியாவதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்படும். பல கோடிகள் செலவாகும்’ என்று அறிக்கை கொடுத்தது நிபுணர்குழு. ‘வாழும் கலை’ அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இதுபோல வேறெங்கும் தங்களால் பிரச்னை ஏற்படாது என்று உறுதியேற்றிருந்தால், அது ‘வாழும் கலை’க்கே பெருமை சேர்ப்பதாக இருந்திருக்கும். அதைவிடுத்து, அதிகார அமைப்புகளைப் பணிய வைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முயன்றிருப்பது, வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகமே!

இனியாவது, தொல்பொருள் துறையும் இதுபோன்ற அமைப்புகளும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி : Ananda Vikatan

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.