ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - வள்ளலார் பெருவிழா” 2019 பிப்ரவரி 9 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.

“வள்ளலார் வழி தமிழர் இறைநெறி”என்ற தலைப்பில் திரு. இறைநெறி இமயவன் அவர்களும், “வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்” என்ற தலைப்பில் மருத்துவர் தி. தெட்சிணாமூர்த்திஅவர்களும் சிறப்புரையாற்றினர்.

தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் நெறி பரப்பி வரும் காட்டுமன்னார்கோயில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் திரு. சிவ.சிவ. ரெங்கநாதன் அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருதும், திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை படைத்து வரும் அரியலூர் மாணவி செல்வி கு. பத்மபிரியா அவர்களுக்கு “இளம் சாதனையாளர்” விருதும், நாட்டியக்கலைக்குத் தொண்டாற்றி வரும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை திரு. சக்தி இரா. நடராஜன் அவர்களுக்கு “நாட்டியாஞ்சலி செம்மல்” விருதும் வழங்கப்பட்டது.

பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் இரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா, ரோட். ச. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் “மல்லர் கம்பம்” வீர விளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா. அறன் திருவருட்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருட்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவில், த.தே.பே. தோழர் சிவ. அருளமுதன் நன்றி கூறினார்.

இந்த “வள்ளலார் பெருவிழா”வில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள்
அமைக்க வேண்டும்!

“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்வைத்துப் பரப்பிய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் ஆவார். மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார் ஆவார்.

வள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதை உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் “வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள்” அமைக்க வேண்டும் என “வள்ளலார் பெருவிழா”வின் வழியாக தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது”.

தீர்மானத்தை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நிறைவேற்றினர்.

நிகழ்வில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.