ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
“தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழி பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களை பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என்றும் பெற்றோர்கள் உறுதிமொழி அளித்துக் கையொப்பம் இட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் தாய் மற்றும் தந்தை பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றும், அவற்றை தமது பெற்றோர்களிடம் இருந்து மாணவ, மாணவிகள் பெற்று வந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டளை இட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டப் புறம்பானது ஆகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளின்படி, தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் இந்தியக் குடிமக்களின் விருப்பம் சார்ந்தது. யாரையும் வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதனை உறுதி செய்திருக்கின்றன.

இந்த நிலையில், வாக்களிப்போம் என்று வாக்காளர்களை உறுதிப் பத்திரம் அளிக்குமாறு வலியுறுத்துவது தேர்தல் ஆணையமே செய்யும் சட்டமீறலாகும்!

வாக்களிக்கும் வயது 18 என்று சட்டம் கூறும் நிலையில், வாக்களிக்க வலியுறுத்தும் ஆவணத்தில் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு, 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளை ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்டமீறலாகும்.

இன்றைக்கு இந்த சட்டமீறல் அனுமதிக்கப்படுமானால், நாளைக்கு ஆளுங்கட்சிக்கு வாக்களிக்குமாறு, மறைமுகமாக வலியுறுத்துவதற்கு வழி ஏற்படும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனவே தேர்தல் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பான இந்த உறுதிமொழி பத்திர சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தலையிட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உறுதிமொழிப் பத்திரத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.