ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்.  மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!

தமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.

மகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது!

எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய்! தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான்! எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.

இன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை! மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும்! இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.

இவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.

இன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது! மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது! எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது!

டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்டிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது! இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2

மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.

தீர்மானம் – 3

33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

புதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு: 
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam 

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.