ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப்படி தன்னதிகார அமைப்பு; அதாவது தன்னாட்சி அமைப்பு. ஆனால், அது ஆளும் பா.ச.க.வின் கைத்தடி அமைப்பாக மாறிப்போனது. தமிழ்நாட்டில் பா.ச.க. – அ.தி.மு.க. கூட்டணியின் குற்றேவல் புரியும் அமைப்பாக அது குறுகிப்போனது.

தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் வேண்டுமென்றே திரிபு வேலைகள் செய்தது. காலதாமதம் செய்தது. அ.ம.மு.க.விற்கு உச்ச நீதிமன்றத்தின் ஆணையால்தான் கடைசி நேரத்தில் ஒரே வகைத் தேர்தல் சின்னம் ஒதுக்கியது.

இப்பொழுது கணிப்பொறியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு உழவர் சின்னம் கண்ணுக்குத் தெரியாத அளவில் வேண்டுமென்றே மங்கலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சின்னத்தை வாக்காளர்கள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்த சுயேட்சை வேட்பாளர்ரின் சின்னமாக அக்கட்சியின் பழைய குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் எஸ். காமராஜ் (மன்னார்குடி). இதற்கு அடுத்த பெயராக உள்ள பி. காமராஜ். (கர்ணக்கொல்லை நன்னிலம்) – சுயேட்சை வேட்பாளர்க்கு பிரஷர் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. ஆதரவு வாக்காளர்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகப் பல தொகுதிகளில் பரிசுப் பெட்டிக்கு அடுத்த சின்னமாக வரும் வகையில் பிரஷர் குக்கர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகள்!

நாம் தமிழர் கட்சி வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் அவர்கள், தங்கள் கட்சிச் சின்னம் மற்ற சின்னங்களைப் போல் தெளிவாகத் தெரியும் வகையில் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், கடைசி நேரம்; கால அவகாசம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இது சரியல்ல!

கணிப்பொறி யுகத்தில், அதுவும் மோடியின் “டிஜிட்டல் இந்தியா”வில் மேற்கண்ட குறையைக் களைந்து, கரும்பு உழவர் சின்னத்தைத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட அதிகநேரம தேவைப்படாது.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.