ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு!


கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு! 

புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையிலுள்ள “கால்ஸ் டிஸ்டிலரீஸ்” - தனியார் மதுபான ஆலையை முற்றுகையிடும் போராட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 14) நடத்தப்படும் என புதுக்கோட்டையில் நேற்று (11.05.2019) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மகளிர் ஆயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :

"தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து, ஆண்டுக்கு ஆண்டு அதன் வணிகத்தைப் பெருக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டபிறகு குடிகாரர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத பெண்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிச் சீரழிகிறார்கள்.

மதுப்பழக்கத்தினால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சிதைந்து விட்டன. பல குடும்பங்களில் குடும்ப வாழ்க்கையே கொடூர வாழ்க்கையாகிவிட்டது. நோயுற்று நடைபிணமாகப் பல ஆண்கள் திரிகிறார்கள்; அற்ப ஆயுளில் சாகிறார்கள்.

பல நாடுகளில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மூட வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள மக்கள் அதுபற்றி முடிவு செய்யட்டும். நம் தமிழ்நாட்டிற்கு மது பொருந்தவில்லை; மக்கள் அழிகிறார்கள்; எனவே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று மகளிர் ஆயம் கோருகிறது.

மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் மக்களுக்கு இலவசங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். இதைவிட அநீதியான, ஒழுக்கக்கேடான ஒரு வாதம் வேறு இருக்க முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதை இது!

இந்த வாதமதாவது உண்மையா? அதுவும் பொய்! கடந்த 2018ஆம் ஆண்டு மது விற்பனை வருமானம் 26,796 கோடி ரூபாய். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மருத்துவக் காப்பீடு, பசுமை இல்லம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட இலவசங்களுக்கு தமிழ்நாடு அரசு செலவிட்ட தொகை 12,274 கோடி ரூபாய் மட்டுமே! ஒழுக்கம் கெடுத்து பணம் வசூலித்து, இலவசங்கள் வழங்குவது ஓட்டு வாங்குவதற்கான மக்கள் விரோத உத்தியாகும்!

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து வரியாகவும், தொழில் நிறுவனங்களின் இலாபமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய் வசூலித்துக் கொண்டு போகிறது. அதில் பாதித் தொகையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கேட்டுப் பெற்றால் இங்கு எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். மக்கள் வாழ்வும் செழிக்கும்; பண்பாடும் வளரும்!


முழு மதுவிலக்கு

1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டில் செயல்படும் மது உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளுக்காக முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டை கால்ஸ் டிஸ்டிலரீஸ் சாராய உற்பத்தி ஆலையை மூட வலியுறுத்தி, மகளிர் ஆயம் சார்பில் அதன் தலைவர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் 14.05.2019 செவ்வாய் காலை 10.30 மணிக்கு மேற்படி ஆலையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராடுவார்கள்.

இந்த கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை நிறுவப்பட்ட பிறகு கல்லாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள குருவாண்டான் தெரு, சங்கன் விடுதி, சொக்கம்பேட்டை, சத்திரப்பட்டி, கண்ணு குடிப்பட்டி, புதுவயல், மருதன்கோன் விடுதி, கரையவிடுதி, கொத்தகப்பட்டி உள்ளிட்ட இருபது கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாமல் பெருந்துயரத்தில் உள்ளார்கள். குடிநீருக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் உண்டாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அன்றாடம் சாராயம் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடியிலிருந்து கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை உறிஞ்சுவதுதான்.

கல்லாக்கோட்டை ஆலை உட்பட தமிழ்நாட்டில் உள்ள எல்லா சாராய உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

கல்லாக்கோட்டை மது ஆலையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்களும் பல்வேறு இயக்கங்களும் ஏற்கெனவே கடுமையாகப் போராடியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.