"தமிழில் பெயர்ப் பலகைகளை வையுங்கள்!" வணிகர்களிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அரசாணை அளித்துப் பரப்புரை!
"தமிழில் பெயர்ப் பலகைகளை வையுங்கள்!" வணிகர்களிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அரசாணை அளித்துப் பரப்புரை!
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு தமிழ் அறிஞர்கள் - தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 1982 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழில் தங்கள் பெயர் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.
ஐந்து மடங்கு தமிழிலும், அதைவிட சிறிய அளவில் மூன்று மடங்கு அளவில் ஆங்கிலத்திலும், அதைவிட சிறிதாக இரண்டு பங்கு வேறு மொழிகளிலும் இருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 575 (நாள் : 29.7.1982) தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் - ஒரகடத்தில் மிகப்பெருமளவில் வடமாநிலத்தவர்கள் குடியேறியுள்ள நிலையில், பல நிறுவனங்கள் தங்களுடைய பெயர் பலகையில் தமிழைக்கூட போடாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயன்படுத்தி தங்கள் வணிக நிறுவனப் பெயர்களை வைத்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் திட்டமிட்டது. இதனடிப்படையில் இன்று காலை தமிழ்தேசியப் பேரியக்க தென்சென்னை கிளைச் செயலாளர் தோழர் ரமேசு தலைமையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தென் சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் இரமேசு, பிரகாசுபாரதி, முத்துராமலிங்கம், பிரசாந்த், மா.வே. செம்மொழி உள்ளிட்ட தோழர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்று வீதி வீதியாக - கடை கடையாகச் சென்று தமிழில் பெயர் வைக்க கோரும் அரசாணை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வணிகர்களிடம் தமிழில் பெயர்ப் பலகை வைக்கக் கோரும் அரசாணையை அளித்து, தங்கள் பெயர் பலகையை தமிழில் மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பலர் இந்த வேண்டுகோளை ஏற்று தங்கள் நிறுவன பெயர்களை தமிழில் மாற்ற ஒப்புக் கொண்டனர். ஏற்கெனவே, தமிழில் பெயர்ப் பலகை வைத்திருந்த வணிகர்களை தோழர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment