ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்க மறுப்பதாக செய்திகள் வருகின்றன.

எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித் தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆளுநர் புரோகித்தின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டக்கவிழ்ப்பு மட்டுமின்றி ஆரியத்துவ இந்தியாவில் தமிழர்களுக்கு சட்டத்தின் ஆட்சி மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 2015 திசம்பர் 2 அன்று, அளித்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு செய்வதற்கும், அதனை ஆளுநர் வழியாக செயல்படுத்துவதற்கும் எந்த சட்டத்தடையும் இல்லை என அறிவித்தது. அதனடிப் படையிலேயே, தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் முடிவு செய்தது.

அரசமைப்பு சட்ட உறுப்பு 161-இன் கீழ் கூறப்படும் தண்டனைக் குறைப்பு அதிகாரம், ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் அல்ல - மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்.

அரசமைப்பு உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு துணை செய்யவும், ஆலோசனை வழங்கவும் மாநிலத்தில் ஒரு அமைச்சரவை இருக்கும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன என்பது குறித்து சிக்கல்கள் எழுந்தபோது, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடக் கூறியிருக்கிறது.

குறிப்பாக, ஷாம்சர் சிங் – எதிர் - பஞ்சாப் மாநில அரசு (Shamsher Singh vs State Of Punjab) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.என்.ரே தலைமையில் அமைந்த ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம், பல கோணங்களில் ஆய்வு செய்து தெளிவுபடக் கூறியிருக்கிறது (1974 AIR 2192).

அரசமைப்புச் சட்டம் சார்ந்த விவாதங்களில் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்படும் இத்தீர்ப்பு, “இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரும் இணை அதிகார மையங்களாக செயல்பட அனுமதிக்கவில்லை. பிரித்தானிய அரசமைப்பில் மகாராணிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ தகுநிலைதான் ஒன்றிய அரசைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசாங்கம் என்பது சாரத்தில் மாநில அமைச்சரவையைத்தான் குறிக்கும். ஆளுநர் என்பவர் அமைச்சரவை யின் சுருக்கெழுத்து வடிவம். மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். குறிப்பாக, நிர்வாகம் தொடர்பான செய்திகளில் குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ தனிப்பட்ட விருப்பார்ந்த அதிகாரம் எதுவுமில்லை” என்று உறுதிபடக் கூறுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு ஆலோசனை வழங்க ஓர் அமைச்சரவை இருக்கும் என்று கூறும்போது, (வரைவு அரசமைப்பில் 143) வரைவுக்குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் இதைத் தெளிவுபடக் கூறுகிறார். “ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் (Discretionary power) என்பது தனிநபர் என்ற வகையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக, மாநில அமைச்சரவையின் முடிவைக் குறிப்பது ஆகும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

யு.என். ராவ் – எதிர் - இந்திரா காந்தி என்ற வழக்கிலும், இந்த நிலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால், சஞ்சீவி நாயுடு - எதிர் – சென்னை மாநில அரசு என்ற வழக்கிலும் “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்” என்ற நிலை உறுதியாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

நளினியின் கருணை மனுவை 1999இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தமிழ்நாடு அமைச்சரவையின் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக நிராகரித்தபோது நளினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவ்வழக்கில் 25.11.1999 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)-இன்படி மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் படியே செயல்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்படுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை” என்று தெளிவுற விளக்கமளித்து, “ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்பதிகாரம் ஏதுமில்லை” எனத் தீர்ப்புரைத்தது.

இவ்வாறான சட்ட நிலைமைகள் தெளிவாக இருக்கும்போது, ஆளுநர் புரோகித் 2018 செப்டம்பர் 9 நாளிட்ட தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்து, ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் ஆணையில் கையொப்பமிட முடியாது என்று கூறுவது பச்சையான சட்டப் படுகொலையாகும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, மீனவர் வாழ்வுரிமை ஆகிய எந்தச் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படும் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செயல்படுவதில்லை என்ற இன ஒதுக்கலை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கல் செயல்படுகிறது என்பதையே ஆளுநர் புரோகித்தின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த அடாவடிச் செயல், தமிழர்களின் அடிப்படை உரிமைக்கும் - தங்கள் அமைச்சரவையின் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்று புரிந்து கொண்டு, உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.