தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும்! அமைச்சர் பாண்டியரசன் கருத்துக்கு எதிர்வினை! பெ. மணியரசன் அறிக்கை!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை
முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும்!
அமைச்சர் பாண்டியரசன் கருத்துக்கு எதிர்வினை!
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
வருகின்ற 2020 பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து, 22.01.2020 அன்று தஞ்சை – காவேரி திருமண மண்டபத்தில் முழுநாள் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டை வரவேற்றும் வாழ்த்தியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு மேற்படி குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட கோரிக்கையும் வைத்துள்ளார்கள். மேனாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. வி.வி. சாமிநாதன் அவர்கள் தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பெருமக்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட கேட்டுக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கைக்கு செய்தியாளர்களிடம் எதிர்வினையாற்றிய தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ம.பா. பாண்டியராசன் அவர்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு சமற்கிருதத்திலும் நடக்கும் – தமிழிலும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.
சமற்கிருதத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, தமிழ்வழியில் மட்டும் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதுதான் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் கோரிக்கையாகும். இது தமிழ்க் கூறும் நல்லுலகில் உள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தமிழர் ஆன்மிக மரபு போற்றும் பெருமக்கள் அனைவரின் கோரிக்கையும் ஆகும்!
காலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி மற்றும் திருமால் நெறி கோயில்களில் தமிழில்தான் கருவறை அர்ச்சனைகளும், வழிபாடுகளும் நடந்திருக்கின்றன. இந்த மரபை இடைமறித்து மாற்றி சமற்கிருதத்தை ஒரு சாரார் திருக்கோயில்களில் திணித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பை நீக்கித் தமிழ் வழிபாட்டு அர்ச்சனையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கோரிக்கை!
இந்தக் கோரிக்கை, தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்கு இசைவானதே! தமிழில் கருவறையில் அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லி வழிபாடு நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையிட்டிருக்கிறது. அதற்கான தமிழ் அர்ச்சனை மந்திரங்களையும் நூலாக வெளியிட்டிருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சான்றிதழும் வழங்கியிருக்கிறது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் (2015) இந்து சமயம் ஒற்றைத் தெய்வ வழிபாட்டை, ஒற்றை மொழி வழிபாட்டைக் கொண்டதல்ல, பல்வேறு வகையறா (Denomination) கோயில்களும், வழிபாடுகளும் இருக்கின்றன. அந்தந்த வகையறாக் கோயிலின் மரபுப்படி அர்ச்சகர்களை அமர்த்திக் கொள்ளவும், அர்ச்சனை மொழியைத் தேர்வு செய்து கொள்ளவும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்கள்.
எனவே, தமிழ்நாடு அரசு தனது அரசாணைகளுக்கு இசையவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்பவும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை சிறிதும் சமற்கிருதக் கலப்பின்றி தமிழ்வழியில் நடத்திட முடிவெடுத்து செயல்படுத்திட வேண்டுமென்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
பேச : 9486927540, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/ thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
Leave a Comment