ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது? பெ. மணியரசன் அறிக்கை!


முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர்
தொழிற்சாலையில் தமிழர்களுக்கு
எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


திருப்பெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12.02.2020 அன்று தொடங்கி வைத்துப் பேசும் போது, ஆசியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஆற்றலாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

பொதுக்கல்வித் தகுதியும் தொழிற்கல்வித் தகுதியும் பெற்றவர்களில் உரிய வேலையில்லாமல் தவிப்போர் விகிதம் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கிறது என்ற உண்மையையும் முதலமைச்சர் சேர்த்துப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு உரிய வேலையில்லாமல் வறுமையில் வாடுவார் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் 2019 சூன் மாதம், புதிதாக பொறுப்பேற் செகன் மோகன் ரெட்டி அரசு, தனியார் துறையில் தெலுங்கர்களுக்கு 75 விழுக்காடு வேலை தர வேண்டுமெனத் தனிச் சட்டம் இயற்றினார்.

இன்னொரு பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 100 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அமர்த்திய சரோஜினி மகிசி அம்மையார் குழு, 1988லேயே பரிந்துரை வழங்கியது. அதை செயல்படுத்த 1994லிருந்து கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன்படி, கர்நாடகத்திலுள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்கே பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தது. 2019இல், காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தனியார் நிறுவனங்கள் கன்னடர்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்ட விதிகளைத் திருத்தி வெளியிட்டார் (Karnataka Industrial Employment (Standing Orders), Rules, 1961).

இப்போது, இதை முறைப்படுத்தும் வகையில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 75 விழுக்காடு கட்டாயம் வேலை வழங்க வேண்டுமென தனிச் சட்டம் இயற்றப்படவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை தரவில்லை என்று கண்டித்தும், வேலை தரக் கோரியும் இன்று (13.02.2020) கர்நாடகம் முழுவதும் வெற்றிகரமாக முழு அடைப்பு நடக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குக் குறிப்பிட்ட விகிதம் வேலை தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் சட்டமோ அல்லது அரசு ஆணையோ போடப்படவில்லை!

திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி வரை டயர் தொழிற்சாலைகள் இருப்பதாக முதலமைச்சர் அவ்விழாவில் பேசினார். இந்தத் தொழிற்சாலைகளில் தமிழர்கள் எத்தனை விழுக்காட்டினர் வேலை பார்க்கிறார்கள் என்ற கணக்கை முதலமைச்சர் எடுத்தாரா?

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பெரும்புதூர் வட்டாரங்களில் குவிந்துள்ள பெருந்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். இவற்றில் மொத்தத் தொழிலாளிகள் மற்றும் அலுவலர்களில் பெரும்பான்மையோர் வெளி மாநிலத்தவர்களே!

சியட் தொழிற்சாலையில் பணி புரிவோரில் 40 விழுக்காட்டினர் பெண்கள் என்ற கணக்கை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் சொன்னார். புதிதாகத் தொடங்கப்படும் தனியார் தொழிற்சாலைகளில் 60 விழுக்காட்டு வேலைகள் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வழங்கிட நிபந்தனை விதிப்போம் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். அந்த எண்ணிக்கையாவது சியட்டில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் பேச்சில் குறிப்பிட்டிருந்தால் இளைஞர்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்.

மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறைப் பணிகளில் மண்ணின் மக்களுக்கு – முறையே 100 விழுக்காடு, 80 விழுக்காடு வழங்க வேண்டும் என்று கர்நாடகம், குசராத் மற்றும் பல மாநிலங்களில் சட்டங்களும் அரசு ஆணைகளும் இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டிலும் சட்டமியற்றி செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.