ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மறுபக்கம் மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்! பெ. மணியரசன்


மறுபக்கம்


மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த 17.11.2019 அன்று பணி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். அவர் இப்பொழுது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 12 நியமன உறுப்பினர்களில் ஒருவராக மோடி ஆட்சியால் அமர்த்தப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராகிட மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார் கோகோய்!

மோகன் பகவத் – மோடி ஆட்சி ரஞ்சன் கோகோய்க்கு வழங்கியுள்ள பரிசளிப்பாக இந்த நியமனத்தைப் புரிந்து கொள்ளலாம். இதன் வழியே, தங்களுக்கு ஆதரவாக – தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கினால், அவருக்கு “வெகுமானம்” உண்டு என இப்போதிருக்கும் நீதிபதிகளுக்கும் “ஆசை”காட்டியுள்ளது மோடி ஆட்சி!

பாபர் மசூதி இருந்த இடம் அப்பள்ளி வாசலை இடித்தவர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது, சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்புரிமைப் பரிவுகளான 370 மற்றும் 35A ஆகியவற்றை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டபோது அவற்றை உடனடியாக விசாரிக்காமல் காலவரம்பற்று தள்ளி வைத்து உதவியது, இரபேல் விமான ஊழல் அம்பலமான போது அதுகுறித்து விசாரிக்கத் தேவையில்லை என ஆணையிட்டது முதலிய “அரசமைப்புச் சட்டப் பணிகள்” பலவற்றைச் செய்தவர் ரஞ்சன்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். அவர்கள் மீது இந்திய ஆட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் தனிப் பொறுப்பும் தன்னாட்சியும் கொண்டவை; உயர் மதிப்புமிக்கவை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைக் காப்பாற்றும் அதிகாரம் படைத்தவை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும். இப்பணியில், இந்திய அரசு நிர்வாகத்துடன் – தேவைப்பட்டால் மோத வேண்டிய கடமையும் – இந்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் இவ்வரு நீதிமன்றங்களுக்கும் உண்டு.

ஆனால், ரஞ்சன் கோகோய் புது விளக்கம் தருகிறார். நேற்று (17.03.2020) அசாம் தலைநகர் குவாகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய தேவையுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதே நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த 12.01.2018 அன்று புதுதில்லியில் சக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேசுவர், மதன் பி. லோகுர், குரியன் சோசப் ஆகியோருடன் இணைந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் செய்தியாளர்களிடம் செவ்வி கொடுக்கும்போது கூறியதை இப்போது நினைவு கூரலாம்.

“உச்ச நீதிமன்ற அதிகாரத்தை இந்திய அரசு ஆக்கிரமிப்பதை உணர்கிறோம். உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள அரசியல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், தங்களின் விருப்பத்திற்குரிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளை உருவாக்குகின்றனர். நாங்கள் வெளிப்படையாக இக்கருத்தை செய்தியாளர்களிடம் சொல்வதற்குக் காரணம், இந்தத் தேசத்திற்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் ஆகும்”.

மேற்கண்ட உச்ச நீதிமன்ற நான்கு நீதிபதிகளும் முதல் முதலாக செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களின் விமர்சனங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் மிக முகாமையானது.

குசராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்சா, சொராபுதீன் இணையரைப் போலி மோதலைச் சித்தரித்துக் கொலை செய்யக் காவல்துறையினரைத் தூண்டினார் என்ற வழக்கில் கைதாகி சிறை சென்று, அவர் பிணையில் வெளியில் இருந்த காலம்! அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா, “சாலை விபத்தில்” கொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட காலத்தில்தான் நான்கு நீதிபதிகளும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

மோகன் பகவத் – மோடி பாசிச ஆட்சியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. இக்காலத்தில் ரஞ்சன் கோகோய் – மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்படுகிறார். அவரும் அதை எதிர்ப்பார்த்திருந்தது போல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் இருக்கிறது. இந்நீதிமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத தன்னாட்சி அதிகாரம். எனவே, உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பின் அரசு மற்றும் தனியார் பதவி எதையும் ஏற்கத் தடை விதித்து, சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு ஈடாக, இந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கூடுதலான சம்பளமும், ஓய்வுக் காலப் பலன்களும் அளிக்கலாம்!

பணியில் இருந்தபோது, 2019 மார்ச்சு மாதம் நடந்த ஒரு வழக்கில், “பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகள் பதவிகள் பெறுவது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான வடு (Scar)” எனப் பேசியவரும் இதே ரஞ்சன் கோகாய்தான்! இப்போது, அவரே நீதித்துறை தன்னாட்சியின் மீது வடுவை ஏற்படுத்தியிருக்கிறார்.

ரஞ்சன் கோகோய் – அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகார் மனு புதையுண்டு போனதும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.