ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்
கல்வி மட்டுமே இருக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


மிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு வேலைகளைத் தமிழ்வழியில் கற்றவர்களுக்கு வழங்கும் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அமைச்சர் செயகுமார் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், ஒரு வேலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள படிப்பைத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. ஆனால் ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. இந்த நிபந்தனையை இப்போது முன்மொழிந்துள்ள சட்டத்திருத்தம் முன் வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, இளங்கலைப் பட்டத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள வேலைக்கு இளங்கலைப் படிப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளைத் தமிழ்வழியில் எழுதியிருக்கத் தேவையில்லை. அவற்றை ஆங்கில வழியிலேயே படித்திருக்கலாம்.
இந்தத் துவாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை உட்பட ஆங்கில வழியிலேயே படித்தவர்கள், வேலைவாய்ப்பிற்காகத் திறந்தவெளி பல்கலைக் கழகமொன்றில், ஏதாவதொரு இளங்கலைப் படிப்பைத் தனியே படித்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அதிகாரிகள் சிலர் அதற்குத் துணை போயிருக்கிறார்கள்.
இதைத் தடுக்கும் வகையில் இளங்கலைத் தகுதி உள்ள வேலைக்கு, இளங்கலை மட்டுமின்றி 10-ஆம் வகுப்பு, 11, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் நிபந்தனை போடுகிறது. 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட வேலைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வையும் தமிழ் வழியில் எழுதியிருக்க வேண்டும் என்று இப்போது புதிய திருத்தத்தில் நிபந்தனை போட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கது! ஆனால் தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை கடந்த 2013லிருந்து அனுமதித்து வருகிறது. அடுத்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தேர்வெழுதலாம், ஆங்கிலத்தில் எழுதலாம், வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளுக்குள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வாணையத்தில்(TNPSC) விதி வைத்துள்ளார்கள்.
இந்த இரண்டையும் நீக்கி அரசுப்பணிகளில் தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகள் மட்டுமே இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வெழுதுவோர் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் கற்றிருக்க நிபந்தனை போட்டும் செயல்படுத்தினால் மட்டுமே தமிழ்வழிக் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு அரசு இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.