ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்கொரோனா முடக்க மீட்புக்கு
மாற்றுப் பாதை

கி. வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வரலாறு காணாத வகையில் நல வாழ்வு நெருக்கடி, பொருளியல் நெருக்கடி சூழலியல் நெருக்கடி ஆகியவை ஒரே நேரத்தில் ஒரு சேர இந்தியாவையும், உலகத்தையும்  உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

இன்னொருபுறம், இதற்குத் தீர்வு காண்பது குறித்து, பல தரப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டிய நரேந்திர மோடி தலைமையமைச்சர் என்ற தனது பதவியை முற்றிலும் தவறாகப் பன்படுத்தி, தனது ஒற்றைத் தலைமையைத் திணிப்பதிலும்,  ஆர்.எஸ்.எஸ்.சின் ஆரிய வெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதிலும் முனைப்பாக இருக்கிறார்.

2020 மார்க்சு 22ஆம் நாள் சுய ஊரடங்கைத் தொடர்ந்து, அன்று மாலை நடத்திய கைத்தட்டல் நிகழ்ச்சியும், இப்போது ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைத்துவிட்டுக் கையில் விளக்கேந்துங்கள் என்று அறிவித்திருப்பதும், வெறும் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை என்றோ, உடனடி சிக்கலிலிருந்து திசைத் திருப்பும் நிகழ்ச்சி என்றோ கடந்து போய்விட முடியாது. அரசியல் அரங்கில் சர்வாதிகாரம மேலோங்க உள்ளதன் முன்னறிவிப்பாகவே இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இச்சூழலில், இனி எந்தத் திசையில் பயணிப்பது என்ற வினாவுக்கு விடை காண வேண்டிய முச்சந்தியில் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்விலிருந்தே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

நாட்டு மக்களுக்கு கடமைப்பட்டுள்ள மக்கள் இயக்கங்கள் இதுகுறித்து தீவிரமாக – உடனடியாகச் சிந்தித்து செயல்திட்டங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரே நேரத்தில் எழுந்துள்ள நலவாழ்வு நெருக்கடி, பொருளியல் நெருக்கடி, சூழலியல் நெருக்கடி ஆகியவை தனித்தனியான நெருக்கடி எழுந்தவை அல்ல. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றினால் இன்னொன்று உருவானவை.

கொரோனா நெருக்கடி தோன்றுவதற்கு சற்று முன்னால் கடந்த சில மாதங்களாக இந்தியாவும் பெரும்பாலான மேற்குலக நாடுகளும் பொருளியல் மந்தத்தில் சிக்கி விட்டன. தொழில் உற்பத்தி முடக்கம், வேலை வாய்ப்பு இழப்பு போன்றவை ஏற்கெனவே அரிக்கத் தொடங்கிவிட்டன.

இதே காலத்தில், உலகம் முழுவதும் புவிவெப்பமாதல் குறித்த சூழலியல் நெருக்கடி உலக சமூகத்தின் முன்னால் தெளிவாக வெளிப்பட்டது. கடந்த 2019 நவம்பர் – திசம்பர் மாதங்கள், கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் புவி காக்கும் போராட்டங்கள் பேரெழுச்சியாக நடைபெற்ற காலங்கள் ஆகும்.

சிறுமி கிரேட்டா துன்பெர்க், “மனிதர்களே, உங்கள் வீடு பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று எழுப்பியக் குரல், உலகையே உலுக்கி எடுத்தது. உலக நாடுகள் அனைத்திலும், அந்தந்த நாட்டு அரசுகள் சூழலியல் நெருக்கடி நிலையை (Climate Emergency) அறிவிக்க வேண்டும் எனக் கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.

இளம் செயல்பாட்டாளர்களின் நேருக்கு நேரான வினாவுக்கு முன்னால், உலக நாட்டுத் தலைவர்கள் தலைகுனிந்து நின்றதை பன்னாட்டு மாநாடுகள் பலவும் கண்டன.

அதே வினா, இன்று கொரோனா வைரஸ் என்ற வடிவில், மக்கள் முன்னால் வந்து நிற்கிறது.

இவை அனைத்திற்கும் தனித்தனியாக விடை காண முயன்றால், மீட்க அரிதான  பேரழிவில் உலகம் சிக்கிக் கொள்ளும்.

இவற்றுக்கான விடை காண்பது, அரசியல் உரிமைகள் குறித்த வினாவிற்கு விடை காண்பதோடு இணைந்திருக்கிறது.

இவ்வாறு, எல்லாவற்றுக்கும் விடை காண வேண்டிய ஒற்றைப் புள்ளியில் நிறுத்தப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை!

எரியும் புவியில் எண்ணெய் ஊற்றும் ஆட்சியாளர்கள் ஒருபுறமும், மக்கள் இயக்கங்கள் மறுபுறமும் என்ற சூழல், கிட்டத்தட்ட உலகமெங்கிலும் இப்போது இருக்கின்றன. இந்த ஆட்சியாளர்களிடையே சில பொதுத்தன்மைகளைப் பார்க்க முடியும். இவர்கள் அனைவருமே இனவெறியர்களாக இருக்கிறார்கள். பெருங்குழும நிறுவனங்களோடு, ஒன்றுகலந்த ஒட்டுண்ணி வலைப்பின்னலில் இருக்கிறார்கள். சனநாயக உரிமைகளைப் பறிப்பதில் முனைப்போடு இருக்கிறார்கள்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், வெள்ளை நிறவெறியை “அமெரிக்கத்தன்மை” என்ற பெயரால் முன்வைக்கிறார் என்றால், இந்தியாவில் நரேந்திர மோடி ஆரிய வெறியை சமற்கிருத மேலாதிக்கத்தை “இந்தியத் தன்மை” என்ற பெயரில் தீவிரமாக முன்வைக்கிறார். பெருங்குழும ஒட்டுண்ணி வலைப்பின்னலில் முக்கியக் கண்ணியாக மோடி இருப்பதை நாடு கண்டு கொண்டிருக்கிறது.

சிக்கல்களுக்கிடையே சில பொதுத்தன்மைகள் இருந்தாலும், அவற்றிற்கான தீர்வுகள் அந்தந்த மண்ணுக்குரிய தனித்தன்மைகளோடு இருப்பதை உணர்ந்தால்தான், மக்கள் இயக்கங்கள் நிலைத்த வெற்றி பெற முடியும்.

தொழில் புரட்சி தோன்றி பெருந்தொகை உற்பத்தி முறை, பெரு வணிகச் சந்தை போன்றவை வந்ததற்குப் பிறகுதான், கொள்ளை நோய் உருவாவது அதிகரித்தது.

கடந்த நூற்றாண்டில், 1918 முதல் 20 வரை உலக நாடுகளை உலுக்கிய ஸ்பேனிஷ் ப்ளு என்ற வைரஸ் தொற்று நோய், முதல் உலகப்போரோடு சேர்ந்து கொண்டதால் தொற்று வேகமாகப் பரவி, ஏறத்தாழ 2 கோடி பேர் உயிரிழந்தனர்.

திறந்தப் பொருளியல், தாராளமயம், உலக வேட்டைமயம் என்று பெருந்தொழில் உற்பத்தியும், பெரு வணிகமும் உச்சத்திற்கு சென்ற போதுதான் பறவைக் காய்ச்சல் (1997), சார்ஸ் (2003), பன்றிக் காய்ச்சல் (2009), எபோலா (2014) என்று குறுகிய கால இடைவெளியில் பெருந்தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் எழுந்து பல்லாயிரக்கணக்கில் மக்களை பலி கொண்டன.

காற்று மூலம் பரவும் நுரையீரல் தொடர்பான தொற்று நோய்கள் ஆண்டுதோறும் ஐம்பது இலட்சம் மக்களை கொன்று வருவதாக உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தொற்று நோய் அல்லாத, சூழல் மாசுபாட்டால் வரும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் விளைவுகள் தனி.

இந்த வைரஸ் தொற்று நோய்களில் பெரும்பாலானவை விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்குத் தொற்றிக் கொண்டவை ஆகும்.

காடுகளை அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து பெருந்தொழில் பெருக்கமும், அவற்றிற்கான கட்டமைப்பு உருவாக்கமும் நிகழ்ந்ததால், காடுகள் என்ற தமது வாழ்விடத்தை இழந்த பழந்தின்னி வவ்வால், எறும்புண்ணி, காட்டுப் பூனை போன்றவை மனிதர்கள் வாழிடத்திற்குள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பழந்தின்னி வவ்வால் பல வைரசுகளின் கொள்ளிடம் ஆகும். இந்த வைரசுகள் வவ்வாலின் உடல் நிலையில், அதற்குத் தீங்கு செய்யாமலேயே அங்கு உறைந்து வாழுகின்றன. மனிதர்கள் உடலில் புகும்போது, அதற்கேற்ற சூழல் கிடைக்கும் போது பல்கிப் பெருகி நுரையீரல் தொடர்பான நோய்களையும், இதயம் மற்றும் குடல் தொடர்பான நோய்களையும் உருவாக்கி விடுகின்றன.

இந்த வைரசுகள் மனித உடலில் புகும்போது, அந்த மனிதர்கள் வாழும் சூழலுக்கேற்ப தனது எதிர்ப்பு ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, உருமாற்றம் (Mutation) அடைந்து, புதிய புதிய தீவிர வகையினங்களாக மாற்றமடைகின்றன.

எடுத்துக்காட்டாக, கொரோனா என்ற வைரஸ்தான் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றில் செயல்பட்ட வைரஸ் ஆகும். ஆயினும், ஒவ்வொரு காய்ச்சலுக்கும் மருந்துத் தாக்கம் ஏற்படும்போது, ஒவ்வொரு நாட்டுச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வீரியம் பெற்று விடுகிறது. இப்போது, கோவிட் – 19 என்ற பெருந்தொற்றுக் கொள்ளை நோயை உருவாக்கி இருக்கிறது.

இன்னொருபுறம், பெரும் பண்ணை உற்பத்தியில் கோழி போன்ற உணவுக்கான பறவைகள் வளர்க்கப்படும்போது, அவை நல்ல எடையோடு விரைவில் பெருக வேண்டும் என்பதற்காக செயற்கையான வேதியியல் தீனிகளைப் போட்டு வளர்க்கப்படுகிறது. நெருக்கமாக வளரும் கோழிகளுக்கு அவ்வப்போது தொற்று நோய்களும் பெருமளவில் ஏற்படுகின்றன.

அதைச் சமாளிக்க பெரும் எண்ணிக்கையில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை (ஆன்ட்டி பயாட்டிக்) போடும்போது, அந்த நுண்ணுயிரிகள் இந்த மருந்துகளை எதிர்த்து சமாளிக்கும் வலிமை பெற்றவையாக (Anti Bacterial Resistant - ABR) வகையின மாற்றம் அடைகின்றன. இந்தக் கோழிகள் வழியாக, மனிதருக்குத் தொற்றும் வைரசுகள் புது வீரியத்தோடு தாக்குகின்றன.

இவ்வாறான பெருவிகித உற்பத்தியானது, மறுபுறம் பெருங்குழுமங்கள் நடத்தும் பெருவிகித மருந்து உற்பத்தியோடு இணைந்தே நடைபெறுகிறது.

பன்னாட்டுச் சந்தையைக் குறிவைத்து நடைபெறும் பெருவிகித மருந்து உற்பத்தி, அந்தந்த சூழலில் வாழும் மனிதருக்குரிய தனித்தனி மரபான மருத்துவத்தைப் புறக்கணித்து, பொத்தாம் பொதுவாக எல்லாச் சூழலுக்குமான மருத்துவமாக இருக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேவையை அலோபதி (ஆங்கில) மருந்துவம் பெருமளவு நிறைவு செய்தது.

மேற்கத்திய அறிவே அறிவியல் என்ற கருத்தியல் மேலாண்மை நிறுவனப் படுவதோடு அத்துடன் இணைந்து, மனித உடல்களின் மீது பெருங்குழும ஆதிக்கம் நிறுவப்பட்டது. இந்த மருந்திற்குப் பழக்கப்பட்ட உடல்கள் பெருமளவுக்கு தற்சார்பை இழக்கத் தொடங்கின.

பெருங்குழும ஆதிக்கத்தோடும் உலகு தழுவிய போர்களோடும் இணைந்துப் பெருங்கவர்ச்சியோடு வந்த திடீர் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அரிக்கத்தொடங்கின. இவற்றின் மோசமான விளைவுகளை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பெருந்தொழில் பெருக்கத்தோடு, இணைந்த தவிர்க்க முடியாத விளைவு காற்று - நீர் - நில மாசுபாடு ஆகும். காற்று மாசுபாடு என்பது, புவி வெப்பமாதலைத் தீவிரப்படுத்தி இந்த மண்ணை வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

பெருந்தொழில் பெருக்கம் மிகப்பெரும்பாலும் தனி முதலாளிகளின் இலாப வேட்டைக்காகவே நடைபெறுகிறது. இப்பெருங்குழுமங்களின் முகவர்களாக செயல்படத் தொடங்கிய ஆட்சியாளர்கள், இன்று இப்பெருங்குழுமங்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி ஒன்றிணைந்துவிட்டார்கள்.

இவ்வாறு நலவாழ்வு நெருக்கடி, பொருளியல் நெருக்கடி, சூழலியல் நெருக்கடி ஆகியவையும் இவற்றோடு ஆட்சியாளர்களின் ஒட்டுண்ணி வலைப்பின்னலும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன. இந்த ஒருங்கிணைந்த நெருக்கடியின் வெளிப்பாடாக கொரோனா நெருக்கடி எழுந்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்ற வினாவின் முன்னால் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

இவை நெருக்கடிள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஒருங்கிணைந்தத் தீர்வைக் கோருகின்றன என்றப் பார்வை இல்லாமல், தனித்தனியான தீர்வை முன்வைத்து வழமையான நிலைமையை (Business as usual) தொடர்ந்து கொண்டு சென்றால், மேலும் மேலும் புதிய நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், மோடி ஆட்சி இந்தப் பாதையையே தேர்ந்தெடுக்கும் என்று தெரிகிறது. உலகின் பெரும்பாலான ஆட்சியாளர்களும் இந்த வழியில்தான் செயல்படுவார்கள்.

கொரோனா தொழில் முடக்கம் ஏற்கெனவே கவ்விய தொழில் மந்தத்தோடு இணைந்து பொருளியல் வீழ்ச்சியாக தீவிரம் பெற்றுள்ளது. இதிலிருந்து உடனடியாக மீள்வதற்கு பெரு நிறுவனங்களுக்கு அரசுக் கருவூலத்தையும் வங்கிகளின் கருவூலத்தையும் வாரி இறைப்பது, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பழைய தொழில் நுட்பங்களையே வளர்ப்பது, அதற்கேற்ப சுற்றுச்சூழல் சட்டத்திட்டங்களைத் தளர்த்துவது என்பதை நோக்கியே ஆட்சியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்.

ஏற்கெனவே நரேந்திர மோடி ஆட்சி, அவசர காலக் கையிருப்பாக இருந்த சேம வங்கியின் சேமிப்பிலிருந்து 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பெற்று, அதை அப்படியே அம்பானி – அதானி – டாடா போன்ற தொழில் குழுமங்களுக்கு வாரி வழங்கியது.

தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்காக என்று சொல்லி, இந்த ஆண்டு (2020) தொடக்கத்தில், ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய்க்கான வரிச் சலுகைகள் பெருங்குழுமங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. பெரும்பாலான சூழல் அழிப்புத் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக் கேட்பிலிருந்தும் சூழலியல் தாக்க அறிக்கையிலிருந்தும் விலக்குகள் அளிக்கப்பட்டு விட்டன.

இப்போது, முழு முடக்கத்திலிருந்து பொருளியலை மீட்பது என்ற பெயரால் மேலும் மேலும் வரிச் சலுகைகளையும் வங்கி நிதியையும் பெருங்குழுமங்களுக்கு மோடி ஆட்சி வழங்கக் கூடும்.

கொரோனா நெருக்கடிக்கு முன்பாகவே தொழில் தேக்கம் ஏற்பட்டு எரி எண்ணெய் விற்பனை மந்தமாகிப் போனதால், திடீரென்று முதன்மை எரி எண்ணெய் உற்பத்தியாளர்களான சவுதி அரேபியாவும், இரசியாவும் பெட்ரோலிய விலையை பீப்பாய் ஒன்றுக்கு 20.40 டாலர் – அதாவது 35 விழுக்காடு குறைத்துவிட்டன.

இச்சூழலில், அரசு அளிக்கும் நிதி உதவியை, இந்தக் குறைந்தவிலை பெட்ரோலியப் பயன்பாட்டுக்கு திருப்பிவிட்டு வழமையான தொழில் உற்பத்தியில் வேகமாக இறங்குவதையே பெருங்குழுமங்கள் விரும்பும். பெட்ரோல், டீசல், எரிவளி நிலக்கரி ஆகிய புதைம எரிபொருள்கள்தான் காற்று மாசுபாட்டிற்கும் புவி வெப்பமாதலுக்கும் அதனால் விளையும் புதிய புதிய நோய்களுக்கும் முதன்மைக் காரணமாகும்.

ஆயினும், உடனடித் தொழில் பெருக்கம் பெருங்குழும இலாபம் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளும் அரசுகள் உடனடியான சந்தை மீட்சியில் மட்டும் கவனம் செலுத்தி, பழைய நிலையை இன்னும் கூடுதலாக்கி விடுவார்கள்.

விரைவான எதிர்காலத்தில் நிறைவான இலாபம் பார்ப்பது என்பதற்கேற்ப எட்டுவழிச் சாலை போன்ற பெருந்திட்டங்கள் அரசு வங்கிகளின் நிதி உதவி பெற்றே தொடர்வண்டித்துறையில் தனியார் மயம் போன்றவை விரைவுபடும். இவை அனைத்திலும் ஆட்சியாளர்களுக்கு பல்லாயிரம் கோடி வெட்டுத்தொகைக் கிடைக்கும்.

மறுபுறம், இந்தப் பொருளியல் தேக்க நிலையில் சிக்கிச் சீர்குலைந்த வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழில்கள், குறு சிறு நடுத்தரத் தொழில்கள் ஆகியவற்றில்  பெரும்பாலானவை திரும்ப எழ முடியுமா என்ற பெரும் சிக்கலில் இருக்கின்றன. ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய தாக்குதல்களில் சிக்கி சிறு நடுத்தரத் தொழில்கள் கணிசமானவை இன்னும் மூடிக் கிடக்கின்றன.

இப்போது கொரோனா முடக்கத்தில் இந்த சிறு நடுத்தரத் தொழில் முனைவோர், வாங்கிய கடனைக் கட்ட முடியாத ஓட்டாண்டிகளாக (Insolvent) மாறும் ஆபத்து எழுந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தொழில் உற்பத்தியில் கணிசமான பங்கையும், வேலை வாய்ப்பில் பெரும் பங்கையும் வகிப்பவை சிறு நடுத்தரத் தொழில்களே ஆகும்.

தாங்கள் வாழ்வதற்கான போட்டியில், உடனடி உத்தியாகக் கருதி இந்த சிறு நடுத்தரத் தொழில் முனைவோர் வெளி மாநிலத் தொழிலாளர்களை பெருமளவு குறை கூலிக்கு அமர்த்திக் கொண்டிருந்தார்கள். இந்த சிறுதொழில் முனைவோர் கொரோனா முடக்கத்தில் விழிபிதுங்கி நிற்கும்போது, இந்த வெளி மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த நிறுவனங்களே தங்க வைத்து உணவளித்து இந்தத் தொழில் முடக்கக் காலத்திற்கு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு விரட்டுகிறது.

ஏற்கெனவே நொந்து நொடித்துப் போயிருக்கிற இந்த சிறுதொழில் முனைவோர், கொரோனா முடக்க காலத்திற்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்றால் எங்கே போவார்கள்? நரேந்திர மோடி அரசு சிறு தொழில் நிறுவனங்களை குத்திக் கொலை செய்யும் கொடும் செயலில் இறங்கியிருக்கிறது.

உண்மையில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் கையில் காசில்லாத சூழலில், பெரு  நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், வாராக் கடன் தள்ளுபடி போன்ற மேலிருந்து கீழ் (Top down) வழங்கல் முறையினால், சந்தையை புத்துயிர் ஊட்ட முடியாது. இந்த நிதியாண்டில் வாரி வழங்கப்பட்ட வரி மற்றும் கடன் சலுகைகளால் பெருந்தொழில் உற்பத்தி வேகம் பெற்றுவிடவில்லை என்பதை கவனத்தில் இது தெளிவாகும்.

நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி ஏப்ரல் – மே – சூன் மாதங்களுக்கு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூபாய் 10,000 வழங்குவது, ரேசன் கடைகளில் மானிய விலையில் இன்றியமையா பொருட்களைத் தாராளமாக வழங்குவது, உடனடி மீட்பாக வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படியான குறைந்தபட்ச இலாப விலை வழங்கி அரசே கொள்முதல் செய்வது, சிறு தொழில் முனைவோருக்கு வட்டித் தள்ளுபடி, நிபந்தனையற்ற குறைந்த வட்டிக் கடன், அந்தக் கடன்களுக்கு மாதத் தவணை வசூலை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினால்தான் பொருளியல் நடவடிக்கைகளை சிக்கலில்லாமல் தொடங்கவே முடியும். சந்தையை உயிர்ப்பிக்க முடியும்.

இவை உடனடியான மீட்புத் திட்டங்கள் மட்டுமே! மேலே சுட்டிக்காட்டியபடி இப்போது ஏற்பட்டிருப்பது நலவாழ்வு நெருக்கடி – பொருளியல் நெருக்கடி – சூழலியல் நெருக்கடி, அவற்றை ஏற்படுத்திய அரசியல் சிக்கல் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்த புது நெருக்கடியாகும்.

வரலாறு இதுவரையிலும் கண்டிராத இந்தப் பெருநெருக்கடியை ஒரு புதிய திசை வழி காட்டுவதற்கான பெருவாய்ப்பாகவும் மக்கள் இயக்கங்கள் பயன்படுத்திக் கொள் முடியும்.

இதையொத்த உலக நெருக்கடிகளின் வரலாற்றுப் படிப்பினைகளை புரிந்து கொள்வது இப்போதைய நெருக்கடிக்கு திசை வழி காட்டப் பயன்படும்.

தொழில் புரட்சிக்குப் பின்னால், தொழில் வள முதலாளிய நாடுகள் 1930களில் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கின. வரலாற்றில், பொருளியல் பெருவீழ்ச்சி (Great Depression) என்று இது அழைக்கப்பட்டது. பெருந்தொழில்களும், பெரும் பண்ணைகளும் முடங்கிப்போய் சந்தை சுருக்கத்தைச் சந்தித்த காலம் அது!

அதுவரை சந்தை என்ற கண்ணுக்குத் தெரியாத கைகள், பொருளியலை முன்னெடுத்துச் செல்லும் என்ற பொருளியல் அறிஞர் அடம்ஸ்மித்தின் சந்தைப் பொருளில் கொள்கையால் அரசுகள் வழிநடத்தப்பட்டன.

இந்தப் பொருளியல் பெருவீழ்ச்சி, சந்தை வாதத்தை சந்தியில் நிறுத்தியது. புதிய பார்வையைக் கோரிய அச்சூழலில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்களின் டீ ரூஸ்வெல்ட் முன்வைத்த புதிய ஒப்பந்தம் (New Deal) என்ற திட்டம் பெருமெடுப்பிலான அரசின் தலையீட்டையும், மக்களுக்கான நலத் திட்டங்களையும் பொருளியல் சீர்திருத்தத்தையும் முன்வைத்தது.

சந்தையின் போக்கிற்கே முற்றிலும் விட்டுவிடாமல், அரசாங்கத்தின் கட்டுத்திட்டங்களுக்கு வழிகாட்டுதலுக்கும் தனியார் பெருங்குழுமங்கள் கட்டுப்பட வேண்டும் என்பதற்கு பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

வேலை பெறும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு, வேலை இல்லா காலத்திற்கு வாழ்வூதியம் வழங்குவது, நலவாழ்வு காப்பீடு போன்ற திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அடிப்படைக் கல்வி கிட்டத்தட்ட கட்டணமின்றியும், பொதுப்பள்ளி முறையும் கிடைத்தன.

நல அரசு (Welfare State) என்ற கோட்பாடு முதலாளிய நாடுகளில் பின்பற்றப்பட்டன.

ஏற்பட்ட பெருவீழ்ச்சி, அது ஏற்படுத்திய வேலையின்மை, எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை போன்றவை மக்களை பொதுவுடைமைக் கட்சிகளின் பின்னால், தள்ளிவிடக் கூடாது என்ற அச்சமும் ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தத்திற்குக் காரணமாக இருந்தது.

ஏனெனில், சோவியத் ஒன்றியத்தில் மக்களின் பொருளியல் வாழ்வுரிமைக்கு உறுதியளித்த பொதுவுடைமைக் கட்சி ஆட்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த காலம் அது!

இந்த நல அரசுக் கோட்பாடு மற்றும் அது சார்ந்த திட்டங்கள், 1980கள் வரை அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் செயலில் இருந்தன.

முழுவீச்சான சந்தைப் பொருளியல் என்பது அதற்குப் பின்னால், வலிமை பெற்றது. பல நலத் திட்டங்கள் கைவிடப்பட்டன.

1970களில் ஏற்பட்ட எரி எண்ணெய் நெருக்கடி சவுதி அரேபியா தலைமையில் எண்ணெய் வள நாடுகளில் கூட்டமைப்பை உருவாக்கி எண்ணெய் உற்பத்தியை தங்கள் இலாபத்தை உறுதி செய்யும் வகையில் திட்டமிட்டுக் கொள்வது என்ற நடைமுறை செயலுக்கு வந்தது.

இந்த எண்ணெய் நெருக்கடி தொழில் உற்பத்தி முதலாளிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடிக்குத் தீர்வாக பிரித்தானிய பிரதமர் மார்க்ரெட் தாட்சரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவரான ரொனால்டு ரீகனும் இன்றைய தாராளமயக் கொள்கை – அரசின் குறுக்கீடுகள் ஏதுமற்ற திறந்த சந்தைப் பொருளியலை முன்வைத்தனர்.

1980களின் இறுதியில் “உலகமயம்” என்ற பெயரிலான நாடுகடந்த வேட்டைப் பொருளியலை டங்கல் திட்டம் தொடங்கி வைத்தது. அதன் விளைவாக, 1991இல் உலக வர்த்தக அமைப்பு நிலை கொண்டது. அதே காலகட்டத்தில், சோவியத் ஒன்றியம், பல தேசங்களாகப் பிரிந்தது. பொதுவுடைமைக் கட்சி ஆட்சியும் அந்நாடுகளில் முடிவுக்கு வந்தது.

இச்சூழலில், இந்தியாவில் காங்கிரசின் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் 1991இல் உலகமய வேட்டைப் பொருளியலில் இந்தியாவும் இணைக்கப்பட்டது. அதைச் செயல்படுத்துவதற்காகவே, அதுவரை உலக வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த முனைவர் மன்மோகன் சிங் இந்திய நிதி அமைச்சராக அமர்த்தப்பட்டார்.

உலகமய வேட்டைப் பொருளியல் பெருங்குழுமங்களின் தங்குதடையற்ற வேட்டையை மட்டும் திறந்துவிடவில்லை. உற்பத்தி முறைமைகளிலுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

ஒரு கூரையின் கீழ் நடந்து கொண்டிருந்த உற்பத்தி நடவடிக்கைகளில் பெரும்பாலானவை வெளி உற்பத்தி முறைக்கு (அவுட்சோர்சிங்) மாற்றப்பட்டன. குறைகூலிக்கு பெருங்குழுமங்களுக்கு வெளி உற்பத்தியை செய்து கொடுக்கும் கடும் உழைப்பு நாடுகளாக பல நாடுகள் மாறின.

இவற்றையொட்டி ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி, புதிய மேல் நடுத்தர வர்க்கப் பிரிவு ஒன்றை உருவாக்கியது. இவை அனைத்தும் கருத்தியல் தளத்தில் – சமூகக் களத்தில் இனவெறி உள்ளிட்ட பிற்போக்கின் எழுச்சியோடு இணைந்து நடந்தது. இந்தப் பிற்போக்குக் கருத்துகளின் பரப்புநர்களாக இந்தப் புதிய மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் பங்காற்றினர்.

“நாகரிகங்களின் மோதல்” (Clash of Civilization) என்ற கோட்பாடு தலை தூக்கியது. தங்கு தடையற்ற முதலாளிய வேட்டையோடு இனவெறியும், நிறவெறியும் தீவிரம் பெற்றன.

ஆரியக் கட்டமைப்பான “பாரதம்” என்ற இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் ஆரியத்துவ இனவெறி மிக விரைவாகத் தீவிரம் பெற்றது. புதிய நடுத்தர வர்க்கமாக எழுந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தனர். இவர்கள் “பாரத மரபு”, “மேற்கத்திய பண்பாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து தற்காப்பு” என்ற பெயரில் ஆரிய வெறியைப் பரவலாக்கினர். “இந்துத்துவம்” என்று பேசி தந்திரமாக தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களையும் இணைத்துக் கொண்டனர். அதற்குத் “தேவையான” எதிரியாக முசுலிம்களைக் கட்டமைத்தனர். முசுலிம் மதத் தலைவர்களின் எதிர்வினையும் அதற்கு உதவும் வகையிலேயே அமைந்தன.

காங்கிரசு அரசின் மறைமுகத் துணையோடு ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் 1992 திசம்பரில் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தது இந்திய அரசியலின் தன்மையையே மாற்றியமைத்தது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒரு எதிர்வகை நகர்வையும் ஏற்படுத்தித் தந்தது. உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்ற நிலையின் மறுபக்கமாக, ஒரு கிராமத்திற்குள் உலகம் சுருங்கிய எதிர்ப்பயணமும் நடந்தது. பெரும் பரப்பில் பல்வேறு தேசிய இனத் தாயகங்கள் கட்டுண்டு கிடக்காமலேயே தங்கள் இறையாண்மை அரசை நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இச்சூழலில், ஒடுக்குண்ட தேசிய இனங்கள் பலவும் விடுதலை பெற்று, இறையாண்மையுள்ள தனித்தனி தேசிய அரசுகள் பிறந்தன. புவிப்பந்தின் முகமே மாற்றம் கண்டது.

இந்தியாவில் ஆரிய பிராமண மேலாதிக்கத்தின் எதிர்வினையாக பிற்போக்கின் மையங்களாக விளங்கிய உத்தரப்பிரதேசம், பீகார், சத்திசுகர், சார்க்கண்ட் உள்ளிட்ட இந்திப் பகுதிகளிலும், வேறு சில மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி எழுச்சி பெற்றனர்.

இந்த சமூக ஆற்றல்கள் அரசியல் அரங்கிலும், தங்களை அதிகாரப்படுத்திக் கொள்ள முன்னேறின. முசுலிம்களை நட்பு ஆற்றலாக அரவணைத்துச் செல்லும் அமைப்புகளாகவும் இவை விளங்கின. ஆயினும், ஒரு தளர்வான ஆரியத்துவ அடையாளத்தையும் கடுமையான இந்தியத்தேசியத்தையும் இவை வலியுறுத்தின.

எனவே, நாட்கள் செல்லச் செல்ல “மனுவாதிகள்” என்று தாங்கள் எதிர்நிலைப்படுத்திய ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சோடு நட்புப் பாராட்டவும் தொடங்கின.

இந்த எழுச்சியின் ஊடாக பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தலையெடுத்த மிகச்சிறு எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தினர் இந்த ஆரியத்துவ சமரசத்தில் பலன்கள் பெற்றனர். கேள்வி முறையின்றி தனியார்மயத்தையும், உலகமய வேட்டையையும் அதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தனர். காலப்போக்கில், கோட்பாட்டு வகையில் ஆரிய மேலாதிக்கத்தை சற்றும் எதிர்க்காத சமூக ஆற்றல்களாக இவை திரிந்து போயின.

இவ்வாறு உலகமய வேட்டைப் பொருளியலும், இனவெறியும் இணைந்து பயணித்தன. இதில் ஏற்பட்ட திடீர் தொழில் வீக்கமும் பணப்புழக்கமும் இந்தப் பாதையைத் தவிர வேறு பாதையில்லை என்ற மயக்கத்தை ஏற்படுத்தின.

ஆனால், பிரிட்டனும் அமெரிக்க வல்லரசும் தொடங்கி வைத்த உலகமய வேட்டைப் பொருளியல் நீண்டநாள் தங்குதடையற்று தனது பயணத்தைத் தொடங்க முடியவில்லை. 2008இல் அமெரிக்காவில் தொடங்கி மேற்குலக நாடுகள் அனைத்தையும் கவ்விய வங்கிகள் திவால் என்ற நிதித்துறை நெருக்கடி உலகமயம் என்பதையே கேள்விக்கு உட்படுத்தியது.  

தங்கு தடையற்ற வெளி உற்பத்தி முறை, பல நாடுகளிலிருந்து, புலம் பெயர் உழைப்பாளர்களின் பெருக்கம், தடையற்ற வணிகம் ஆகியவை அவற்றின் எல்லையைத் தொட்டு முட்டி நிற்கின்றன. அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா, உலகமய நீக்கம் (De globaliazation) எனப் பேசத் தொடங்கினார். ஐரோப்பிய நாடுகள் பலவும் “தேசம் முதலில்” (Nation first) என்று குரல் கொடுக்கத் தொடங்கின.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கு தடையற்று தங்கள் நாடுகளுக்கு வருவதை தடை செய்யக்கூடிய சட்டங்களை அந்நாடுகள் உருவாக்கின.

உலகம் ஒரே சந்தை என்பதிலிருந்து மாறி, நாடுகளிடையே வணிக வரம்புகள் உருவாக்கப்பட்டன. உலக வர்த்தக அமைப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு, மண்டலப் பொருளியல் கூட்டமைப்புகள் சில உருவாகி, இப்போது அவையும் ஒன்றொன்றாக குலைந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது.

ஆயினும், சந்தையே சரி செய்து கொள்ளும் என்பதிலிருந்து பின்வாங்கி, அரசின் நிதியை வாரி வழங்கி திவாலான வங்கி மற்றும் நிதி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் தூக்கி நிறுத்திய மேற்குலக அரசுகள் தனியார் பெருங்குழும வீக்கத்தையே முன்வைத்தன. புதைப்படிம எரிபொருள்களான பெட்ரோல், டீசல்,  நிலக்கரி போன்றவற்றைச் சார்ந்த வளர்ச்சிப் பாதையிலேயே பயணிக்கின்றன. இன்னொருபுறம், எளிய மக்களை வீதியில் வீசின.

2008இல் வங்கிக்கடன் கட்ட முடியாமல், வீடுகளை இழந்த அமெரிக்கர்கள் பொதுக் பூங்காக்களிலும், நடைபாதையிலும் வாழத் தொடங்கினார்கள். அவ்வப்போது அவர்கள் உள்ளூர் சமூக நலக் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

சமூகக் கூடங்களில் கூட்ட நெரிசல் என்று சொல்லி, இந்த கொரோனா காலத்தில் அவர்களில் பலர் மீண்டும் வீதிக்கு விரட்டப்பட்டனர். அமெரிக்காவின் நிவேதா மாகாணத்தில் லாஸ் வேகாஸ் நகரத்தில் மட்டும் 6,500 பேர் கார் பார்க்கிங் திடலில் 6 அடி இடைவெளி விட்டு தரையில் படுத்திருக்கிறார்கள்.

2008 நிதி நெருக்கடி – தொழில் மந்தம் ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கு பழைய வழியையே மேற்கொண்டதன் விளைவாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தொழில் நிறுவனங்கள் அதிகரித்தன. சீனாவின் தொழில் நகரங்களிலும் இந்தியாவில் தில்லியிலும் தூசு மண்டலம் அதிகரித்து, இப்போது கொரோனாவுக்கு நடப்பது போல் நகரமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தக் காற்று மாசுபாடு புதிய விளைவுகளை உருவாக்கி புவி வெப்பத்தை உயர்த்தியதால், கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. நில அரிப்பு அதிகரித்துவிட்டது. பல தீவு நாடுகள் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்துதான் கடந்த ஆண்டில் புவி காக்கும் போராட்டங்களைத் தூண்டியது.

இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று – கோவிட் 19 இதுவரை 50,000 ரை பலிவாங்கியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1 இலட்சம் பேர் பலியாகக் கூடுமென்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கிறார்.

இது சூழலியல் நெருக்கடியையும், கவனத்தில் கொள்ள வேண்டுமென்ற படிப்பினையை அளிக்கிறது. அதனால்தான் பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் இயக்கங்கள் ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தம் போல், சூழலியல் நெருக்கடியையும் கணக்கில் கொண்டு “புதிய பசுமை ஒப்பந்தம்” (New Green Deal) வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்த மக்கள் இயக்கங்கள் முன்வைக்கும் புதிய பசுமை ஒப்பந்தக் கோரிக்கைகளில் சில பெருங்குழும முதலாளிய அமைப்பில் நிறைவேறக்கூடும். ஆயினும், நல வாழ்வு நெருக்கடி, பொருளியல் நெருக்கடி, சூழலியல் நெருக்கடி ஆகியவற்றிற்கு ஒன்றிணைந்த மாற்று திட்டத்தை – பெருங்குழும ஒட்டுண்ணி ஆட்சி முறையில் செயல்படுத்த முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தந்த நாட்டிற்குரிய கட்டமைப்பு மாற்ற (System change) கொள்கைகளை முன்வைத்து, மக்கள் இயக்கங்கள் போராட வேண்டிய நிலை உள்ளது.

ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைச்சகக் கூட்டமைப்பு (IPCC) கூறுவது கவனிக்கத்தக்கது. “வரும் 2020ஆம் ஆண்டுக்குள் காற்று வெளியிலிருந்து 45 விழுக்காடு கார்பனை வெளியேற்றிவிட வேண்டும். 2050க்குள் நூற்றுக்கு நூறு மிகையான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி விட வேண்டும். இந்தக் கடுமையான கரி உமிழ்வுக் கட்டுப்பாடு தொழில்நுட்ப வழியில் சாத்தியமானதே ஆகும். ஆனால், உண்மையில் இதைச் செயல்படுத்த சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் வரலாறு காணாத அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தா வேண்டும்” என்று அந்த அறிக்கைக் கூறுகிறது. மக்கள் இயக்கங்கள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல் – பொருளியல் – சமூகத்தின் வாழ்வியல் – உணவு உள்ளிட்ட நுகர்வுப் பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்து முனைகளிலும் சூழலுக்கு இசைவான மாற்றங்கள் நிகழ வேண்டியிருக்கிறது.

பழைய பாதையில் பொருளியல் மீட்பை செயல்படுத்த விரும்பும் ஆட்சியாளர்கள் மக்கள் உரிமையைப் பறிக்கும் சர்வாதிகாரப் பாதையில் மேலும் விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பிய நாடான அங்கேரியில் நாடாளுமன்றமும், அரசமைப்புச் சட்டமும் முடக்கி வைக்கப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே 30.03.2020 அன்று சட்டமியற்றப்பட்டிருக்கிறது.

சிலி நாடு எங்கும் மக்கள் கூடுமிடங்களில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.

இசுரேலில் நீதிமன்றச் செயல்பாடுகள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கைப்பேசி வழியாக மக்களைக் கண்காணிக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மோடி ஆட்சி ஒரு வழியில் பத்திரிக்கை முன் தணிக்கையை செயல்படுத்த முனைகிறது. மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயரும் தொழிலாளர்கள் இந்த கொரோனா முழு முடக்கத்தின் விளைவாக தேசிய நெடுஞ்சாலையில் பசி பட்டினியோடு பல கிலோ மீட்டர் நடந்தே சென்றதைக் குறிப்பிட்டு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டபோது, அதற்கு பதிலுரை அளித்த இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துசார் மேத்தா, ஊடகங்கள் ஏற்படுத்திய வதந்தியின் விளைவு இது என்று நெஞ்சாரப் பொய்யுரைத்தார்.

உச்ச நீதிமன்றமோ அதைக் கேள்விக்கு உட்படுத்தாமல், அப்படியே ஏற்றுக் கொண்டது. அரசு வழக்குரைஞர் கேட்ட ஆணையை வழங்கவில்லையே தவிர, கொரோனா பரவல் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், அவை குறித்து அரசிடம் கேட்டு, அரசு கூறும் விவரங்களையே வெளியிட வேண்டும் என்பதற்கு இசைந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தப் பக்கச்சாய்வைப் பயன்படுத்திக் கொண்டு, அமித்ஷாவின் உள்துறை வதந்தி பரப்புவோர் மீது இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கும் வழக்குப் பதிவு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

“சுய ஊரடங்கு” என மோடி அறிவித்த அதே இரவில், பல்லாயிரக்கணக்கான மக்களோடு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி இராமர் கோயில் கட்டுமானத்திற்கு விழா நடத்தினார் என்ற செய்தியை பட ஆதாரங்களோடு வெளியிட்ட “தி வயர்” இணைய ஏட்டின் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 505  (2) இன் கீழ் – மக்களிடையே பகைமையைத் தூண்டுவதாக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் கருத்துக் கூறுவோர் மீதும் மாநில அரசுகள் பாய்ந்து வருகின்றன.

கொரோனா பதற்றத்திற்கிடையிலேயே தமது ஆரியத்துவ செயல் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திக் கொண்டுள்ளது.

சம்மு காசுமீரில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்புப் பறிக்கும் ஆணையை நள்ளிரவில் பிறப்பித்ததே இதற்கொரு சான்று!

இப்போது, 2020 ஏப்ரல் 14 வரையிலான முழு முடக்கத்தையும் மோடி அறிவித்தார். இது இந்தியாவின் ஆட்சித் தலைவர் என்ற முறையில் அவரது கடமையாகும். கொரோனா நெருக்கடியின் தீவிரத்தை சீனா – இத்தாலி அனுபவத்திலிருந்து புரிந்து கொண்ட ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் இந்த முழு முடக்கத்திற்கு தாமே முன்வந்து ஒத்துழைப்பு அளித்தனர்.

இந்த முழு முடக்கத்தைச் செயல்படுத்துவதில் கட்சி வேறுபாடு இல்லாமல் மாநில அரசுகளின் பங்கு பணி சிறப்பானது. இதை வைத்து, தன்னுடைய விரல் அசைவுக்கு இந்தியா ஆடுகிறது என்று மிகையாகக் கருதிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அதையே உண்மையில் தொடர விரும்புகிறார். தனது ஒற்றைத் தலைமை, ஆர்.எஸ்.எஸ்.சின் ஆரியத்துவ வெறித்திட்டம் ஆகியவற்றை நாட்டின் மீது திணித்துவிட வேண்டும் என விரும்புகிறார். வரலாறு காணாத பொருளியல் நெருக்கடி வேறு நிலவுகிறது.

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் கருதத்தக்க அளவுக்கு வலுவோடு இல்லை. ஊடகங்களில் பெரும்பாலானவை மோடியின் ஊதுகுழலாக உள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சர்வாதிகார நகர்வுகளில் மோடி அரசு கூர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 0

இச்சூழலில், ஆரியத்துவ மோடி அரசின் சர்வாதிகார நகர்வுகளை எதிர்த்தப் போராட்டத்தையும், சிறு தொழில் – சிறு வணிகம் – சிறு விகித உற்பத்தி – சிறு விகித கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பசுமை மாற்றுத் திட்டங்களையும் ஒன்றிணைத்து மக்கள் இயக்கங்கள் முன்வைக்க வேண்டும்.

பல்வேறு வரலாறு, மரபு போன்றவற்றைக் கொண்டிருக்கிற பல கோடி மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்திற்கு முழுமையும் பொருந்தக் கூடிய ஒற்றை மாற்றை முன்வைக்க முடியாது! அந்தந்த மண்ணின் மரபு அறிவு, தேசிய இன மொழியை அதிகாரப்படுத்துவது, தேசிய இனங்களை நோக்கிய அதிகாரப்பரவல் என்ற மாற்றுகளை முன்வைப்பதுதான் நீண்டகால புதிய பாதையாக அமையும்.

தேசிய இன இறையாண்மை அதிகாரத்தை முதன்மைப்படுத்தாத எந்த மாற்றுப் பொருளியல் திட்டமும் பசுமையான மாற்றுப் பாதையை நிறுவப் பயன்படாது. அந்த நீண்டகால திசை வழியை முன்னெடுத்துக் கொண்டே, உடனடி மாற்றுத் திட்டங்களாக சிறுவிகித உற்பத்தி சார்ந்த பசுமைத் திட்டங்களை உடனடிக் கோரிக்கையாக முன்வைக்கலாம்.

தற்சார்பு வேளாண்மை, பெருங்குழுமம் அல்லாத சனநாயகப் பொருளியல், சூழலியல் பாதுகாப்பு, உழைப்பாளர் உரிமை, மனித உரிமை, மண்ணின் மருத்துவம், மரபு அறிவு, மொழி உரிமை போன்ற முனைகளில் செயல்படும் மக்கள் இயக்கங்கள் உண்மையில் கருத்தியல் ஒத்திசைவுக்கு முயல வேண்டும். அதன் ஊடாக தங்கள் தங்கள் தளங்களில் உடனடிக் கோரிக்கைகளுக்கான இயக்கங்களை நடத்தலாம்.

கொரோனா முடக்கத்தில் விமானப் போக்குவரத்தும் சுற்றுலாத் தொழிலும் அவை சார்ந்த உபசரிப்புத் தொழில்களும், பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன என்பதும் உண்மையே!

அதுபோல், தானியங்கி ஊர்தித் தொழிலும் (ஆட்டோமொபைல்) பெரும் பாதிப்பு அடைந்திருக்கிறது. கட்டுமானத் தொழில், கடந்த சில ஆண்டுகளாகவே நலிவடைந்து இப்போது முற்றிலும் நிலைகுலைந்திருக்கிறது.

இவற்றை மீட்பதற்கான நிதி உதவிகளை வழங்குவதற்கு இத்துறைகளைச் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை மாற்றை நிபந்தனையாக வைத்து நிதியுதவி வழங்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கும்போது அவை வழக்கமான கேசொலின் எரிபொருளிலிருந்து பசுமை எரிபொருள்களுக்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு வழங்கலாம். தற்போது செயல்பாட்டில் உள்ள விமானங்களின் எஞ்சின்களை எந்த மாற்றமும் செய்யாமலேயே நீர்ம பயோ ஐட்ரோ கார்பன் (Drop in fuel) பயன்படுத்தி இயக்கலாம். மூன்றாண்டுகளுக்குள் முற்றிலுமாக மின்சாரத்தில் இயங்கும் விமானங்களாக அவற்றை மாற்றி அமைத்திட முடியும். இவற்றை நிபந்தனையாக விதித்து மீட்பு நிதி வழங்கலாம்.

அதேபோல், மரபுவழிக் கட்டுமானங்களைப் பயன்படுத்தும் விடுதிகளுக்கும், சூழலுக்கு இசைவான பசுமைக் கட்டடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பசுமை நிபந்தனைகளோடு மீட்பு நிதி வழங்க வேண்டும்.

பெரிய வணிக நிறுவனங்களுக்கு அரசு மின்சார உற்பத்தியிலிருந்து மின்சாரம் வழங்கக் கூடாது. பெருவணிக நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டுமென நிபந்தனை விதித்து அனுமதி வழங்க வேண்டும்.

தொழிலகக் கட்டுமானங்கள், குடியிருப்புக் கட்டுமானங்கள், வணிக வளாகக் கட்டுமானங்கள் ஆகிய அனைத்திலும் கதிரவன் மின்சாரத்தை கட்டாய நிபந்தனையாக்க வேண்டும். தானியங்கி ஊர்தித் துறைக்கு ஊக்குவிப்பு வழங்கும்போது தனியார் ஊர்திகளைவிட பொதுப்போக்குவரத்து ஊர்திகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவையும் சூழலுக்கு இசைவான மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமென்பதையும், குறுகிய எதிர்காலத்தில் முற்றிலும் மின்சாரமயமாக்க வேண்டுமென்பதை நிபந்தனையாக்கிப் பிறகு வழங்கலாம்.

தொடர்வண்டிகளை தனியார்களிடம் வழங்குவதைக் கைவிட்டு, அரசுத்துறையிலேயே தொடர வேண்டும். தொடர்வண்டி எஞ்சின்கள் முற்றிலும் மின்சாரமயமாவதை விரைவுபடுத்த வேண்டும்.

வேளாண்மைக்கு முன்னுரிமை அளித்து வேளாண்மை விளைபொருட்களுக்கு இலாப விலை வழங்குதல். பயிர்க்காப்பீடு, இடுபொருள் மானியம், நேரடி வருமானம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதிலும், இயற்கை சார்ந்த தற்சார்பு வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஐந்து – ஆறு கிராமங்களை ஒரு தொகுப்பாக்கி, ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் தேவையான பொது மின்சாரப் பயன்பாட்டிற்கு 3 மெகா வாட் தாண்டாத அளவுக்கு சிறு சிறு கதிரவன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணை மூலம் சிறிய நீர் மின்சார உற்பத்தி நிலையங்கள், நகரக் கழிவுகளிலிருந்தும் குப்பையிலிருந்தும் மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றிற்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

இந்தப் பசுமை மாற்றுத் தொழில்நுட்பம் இலாபகரமானதா என்றும், வேலை வாய்ப்புக் கூடுதலாக வழங்கிவிடுமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

கதிரவன் மின்சாரம், காற்றாலை மின்சாரம், கழிவிலிருந்து மின்சாரம் போன்றவற்றின் தொழில்நுட்பங்கள் நாள் தோறும் வளர்ச்சியடைந்து வருகின்றன. அவற்றின் காரணமாகவே, அவற்றின் உற்பத்திச் செலவு மேலும் மேலும் குறைந்து வருகிறது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவளி ஆகியவற்றைப் பயன்படுத்துவதைவிட பசுமை ஆற்றல் வழிகள் செலவுச் சிக்கனமானவை. உற்பத்திச் செலவை குறைக்கக்கூடியவை என்பது மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று.

பசுமைத் தொழில்நுட்பங்கள் வேலை வாய்ப்பைப் பெருக்குகின்றன என்பதை பல ஆய்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன. செர்மனியும் பல ஐரோப்பிய நாடுகளும் நடைமுறையில் மெய்ப்பித்து வருகின்றன.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவளி ஆகியவற்றைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களைவிட பசுமை எரியாற்றல் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இரு மடங்காக உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, இராபர்ட் பாலின் மற்றும் சௌவிக் சக்ரபர்த்தி ஆகியோரின் ஆய்வுப்படி “வரும் இருபதாண்டுகளில் இந்திய அரசு, அரசு மற்றும் தனியார் துறைகளின் வழியாக 1.5% ஜி.டி.பி. முதலீட்டை பசுமை ஆற்றல் முதலீடாகச் செலுத்தினால், அதன் மூலம் ஒரு கோடியே 20 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதே அளவு முதலீட்டை புதை படிம எரிபொருளுக்குப் பயன்படுத்தினால் 57 இலட்சம் வேலை வாய்ப்புதான் புதிதாக உருவாகும். அதாவது, கதிரவன் மின்னாற்றல், உயிரி எரிபொருள் மின்னாற்றல், தடுப்பணைகள் வழியாக நிறுவப்படும் சிறிய நீர் மின்திட்ட மின்னாற்றல் போன்ற மாற்றுகளில் இருந்து 2 மடங்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்”. (An Egalitarian Green Growth Programme for India - Robert Pollin, Shouvik Chakraborty, September 2015 - Polical Economy Research Institute, University of Massachusetts Amherst).

இந்த மாற்றுப் பசுமை ஆற்றல்களின் வழியாகக் கிடைக்கும் வேலை வாய்ப்பு முற்றிலும் புதிய படிப்பைக் கோரவில்லை என்பதையும் அதே பகுதிகளில் அந்த வேலை வாய்ப்பு உருவாகும் என்பதையும் வேறொரு ஆய்வில் கூறுகின்றனர்.

“புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்கள் உருவாக்கும் வேலை வாய்ப்பு அந்த இடத்திலேயே  உருவாகின்றன.

எடுத்துக்காட்டாக, கதிரவன் ஆற்றல் கட்டமைப்பை நிறுவுவது, மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளிலும் உலோகம் பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களிலும், அதற்குத் தேவையான சுமையுந்துப் பணிகளிலும் வேலை வாய்ப்பு உருவாக்குகின்றன. பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்தும்போது அதன் வழியாக கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவை சார்ந்த தொழில் முனைவோர்க்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இவற்றுக்கு திறன் மேம்பாடு அளித்தால் போதுமானது. முற்றிலும் புதிய திறன்களைப் பெற பயிற்சி மாற்றம் செய்து கொள்ள வேண்டியத் தேவையில்லை.

பசுமை ஆற்றல் தொழில்களில் உருவாகும் வேலை வாய்ப்பில், பெண்களுக்கான வாய்ப்பு கூடுதலாகிறது. புதைப்படிமம் சார்ந்த தொழில்களில் ஏழு ஆண்களுக்கு 1 பெண் வேலை வாய்ப்பு என்ற நிலை இருக்கிறது. பசுமை ஆற்றல் சார்ந்த தொழில்களில் 4 ஆண்களுக்கு 1 பெண் என பெண்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. சிறு விகித உற்பத்தி பசுமைத் தொழில்நுட்பத்தில்  நடக்கும்போது, கிராமப்புற இளையோருக்கு வேலை வாய்ப்பு கூடுகிறது”.
(A Policy Proposal for Green Jobs in India by Rohit Azad, Shouvik Chakraborty, 2019,
Centre for Sustainable Employment, Azim Premji University, Bangalore).

தமிழ்நாடு அரசு இந்திய அரசின் நிதி உதவியை நிறுவனங்களுக்கு வழங்கும்போது, தமிழ்நாட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும், உணவு விடுதிகளிலும் பணியாற்றக் கூடிய வெளி மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கேத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூரில் உள்ளதுபோல் உள் நுழைவு அனுமதிச் சட்டத்தை இந்திய அரசு தமிழ்நாட்டிற்கும் விரிவுபடுத்த வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்ளுக்கு சலுகைகள் வழங்குவது நடைபெற வேண்டும். சிறு தொழில் – சிறு வணிக நிறுவனங்கள் ஆகியவை உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால், செலவு அதிகம் என்று அச்சப்படலாம். அதைத் தவிர்க்க வெளி மாநிலத் தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர் வாங்கும் ஊதியத்திற்கும் உள்ள இடைவெளித் தொகையை மாநில அரசு தொழில் நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு வழங்கலாம். இப்போது, கல்வித் தீர்வை (Education Cess) வசூலிப்பது போல் அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் 1% சிறப்புத் தீர்வை விதித்து வசூலித்தால் போதும். இதற்கான நிதி கிடைத்துவிடும்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் இங்கே நீடித்து விட்டால், இப்போது போல் குறைகூலிக்குப் பணியாற்ற மாட்டார்கள் என்பதையும், தமிழ்நாட்டுப் பண்பாட்டிற்கும் அமைதிக்கும் இடையூறாக மாறிவிடுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, தொழில் முனைவோர் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்களும் தாங்கள் உழைக்க விரும்பவில்லை என்ற அவப்பெயரிலிருந்து மீள வேண்டும். உடலுழைப்புத் தொடங்கி, தங்கள் தங்கள் தகுதிக்கேற்ற எல்லா உழைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முன்வர வேண்டும்.

இப்போது, கொரோனா முடக்கம் காரணமாக - கிட்டத்தட்ட ஒரு மாதமாக, டாஸ்மாக் மதுக்கடைகள் மூடிக் கிடப்பதால், கள்ளச்சராயம் பெருகிவிடவில்லை. குடிப்பழக்கம் உள்ளவர்கள் பதற்றமடைந்து உடல் சீர்கேட்டுக்கோ, சட்டம் ஒழுங்கு சிக்கலுக்கோ இடம் ஏற்படவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மது உற்பத்தி தொழிலகங்களையும் நிரந்தரமாக மூடிவிட வேண்டும். உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைப்பது இதன் மூலம் கூடுதலாகும்.

இதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு எடுத்துச் செல்லும் வருமானத்திலிருந்து பாதியையாவது கேட்டுப் பெறலாம் என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போதைய கொரோனா சூழலைப் பயன்படுத்தியாவது தமிழ்நாடு அரசு இதை வலியுறுத்த வேண்டும்.

இந்த உடனடி மாற்றுக் கோரிக்கைகளை முன்வைத்தும், நிரந்தரமான சிறு உற்பத்தி சார்ந்த – பசுமை மாற்று தமிழின உரிமை திசைவழியை முன்வைத்தும் மக்கள் இயக்கங்கள் தொடர் பரப்புரையும் போராட்டங்களும் மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் ஆரியத்துவ மேலாதிக்கமும், மோடி அரசின் சனநாயக உரிமைப் பறிப்பும் மிகப்பெரிய தடையாக விளங்குகின்றன. சனநாயக மீட்போடு இணைந்துதான் பொருளியல் மீட்புக்கான திட்டங்களின் மீது மக்கள் இயக்கங்கள் மக்களைத் திரட்ட வேண்டும்.

இதை அவசரப் பணியாக மேற்கொண்டு செயல்படவில்லையென்றால், ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆரியவெறி செயல்திட்டங்கள்தான் களத்தில் நிற்கும். சூழலியல் மீட்பு,  மக்கள் உரிமை சார்ந்த பொருளியல் மீட்பு ஆகியவை மிகவும் பின்தங்கிப் போகும். இந்த அவசர அவசியத்தை உணர்ந்து, மக்கள் இயக்கங்கள் தங்கள் செயல்பாட்டைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா நெருக்கடியையே புதிய பாதைக்கான வாய்ப்பாக்குவோம்!
No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.