தப்ளிக்கி மாநாடும் தமிழ்நாட்டு மதவாதங்களும் - பெ. மணியரசன்
தப்ளிக்கி மாநாடும்
தமிழ்நாட்டு மதவாதங்களும்
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கொரோனாக் கொள்ளை நோய் இந்தியாவில் இசுலாமியர்களால் கொண்டு வரப்பட்டது, பரப்பப்பட்டது என்று ஆர்.எஸ்.எஸ், - பா.ச.க. பரிவாரங்கள் தீவிரப் பரப்புரை செய்கின்றன.
கடந்த (2020) மார்ச்சு மாதம் தில்லி நிசாமுதீன் பகுதியில் நடந்த இசுலாமிய தப்ளிக்கி பன்னாட்டு மாநாட்டில் பல நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான முசுலிம்கள் வந்து கலந்து கொண்டனர். மாநாடு முடிந்த பின்னும் ஆயிரக்கணக்கானோர் தில்லி நிசாமுதீன் மார்க்கஸ் என்ற தப்ளிக்கியின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சற்றொப்ப 1350 பேர் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியா விலிருந்தும் சீனா உட்பட உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டோர் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் இருக்கும் என்கிறார்கள். ஓராண்டுக்கு மேலாகத் திட்டமிடப்பட்ட உலக மாநாடு அது!
இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலர்க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
முசுலிம்களுக்கு எதிராக வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்திய நாஜிகளுக்கு “அவல்” போல் தப்ளிக்கி மாநாடு அமைந்தது.
சீனாவிலிருந்து பல நாடுகளுக்குப் பரவி, இந்தியாவிலும் கொரோனா நுழைந்துவிட்ட நிலையில் 2020 மார்ச்சு மாதம் தப்ளிக்கி பன்னாட்டு மாநாட்டை அதன் பொறுப்பாளர்கள் நடத்தி இருக்கக் கூடாது. தில்லி ஒன்றியப் பகுதியின் ஆம் ஆத்மி அரசும் அம் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்க வேண்டும்.
தப்ளிக்கி சமாத்
------------------------
தில்லி நிசாமுதின் மார்க்கசைத் தலைமை இடமாகக் கொண்ட தப்ளிக்கி சமாத் இசுலாமியப் பயங்கரவாத அமைப்பு அன்று! ஆனால் இசுலாமிய பழைமை மீட்பு அமைப்பு! அந்த வகையில் இசுலாமிய இறுக்கவாத அமைப்பு!
மத இறுக்கவாதம் என்பது, பழைய கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் - அவற்றைக் கடைபிடிப்பதில் தொளதொளப்பும் இல்லாமல், புதிய கருத்துகள் எதுவும் சேர்ந்து விடாமல் இறுக்கிக் கட்டப்பட்ட மதக்கட்டமைப்பு என்ற பொருள் கொண்டதாகும்.
தப்ளிக்கி சமாத் அமைப்பை தில்லி நிசாமுதின் மார்க்கசத்தில் 1926-ஆம் ஆண்டு மவுலானா முகம்மது இலியாஸ் கந்த்லாவி நிறுவினார். இப்பிரிவு இசுலாத்தில் சன்னி பிரிவில் ஓர் உட்பிரிவு. இதன் முதன் நிலைக் கொள்கைகள் முசுலிம்கள் மதம் மாறக் கூடாது; முசுலிம் கள் மதக் கடமைகளில் தவறக் கூடாது என்பவை.
தப்ளிக்கி சமாத்தில் பெரும்பான்மையாய் உள்ள முசுலிம்கள் வங்கதேசம் மற்றும் பாக்கித்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேற்கத்திய நாடுகளில் கணிசமாக இருக்கிறார்கள். பிரிட்டனில் மொத்தமுள்ள 1350 மசூதிகளில் 600 மசூதிகளில் தப்ளிக்கிகள் இருக்கிறார்களாம். வட அமெரிக்காவில் 50,000 பேர் தப்ளிக்கி முசுலிம்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். உலகத்தில் 150 நாடுகளுக்கு மேல் தப்ளிக்கி முசுலிம்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
தப்ளிக்கி அமைப்பின் தலைவர் பெயர் அமீர். அவர் வாழ்நாள் முழுவதும் தலைவர். அவர் அடுத்த அமீரை அமர்த்துவார். இந்து மதத்தில் மடங்கள், ஆதினங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன.
அடுக்குமுறைத் தலைமைகள், அதற்கான கட்டமைப்புகள் தப்ளிக்கில் இல்லை. தன்னார்வ அடிப்படையில் இதன் உறுப்பினர்கள் கட்டுக்கோப்பாகக் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்கள். அவ்வமைப்பின் உள்ளே உள்ளவர்களுக்கு அந்தந்தப் பொறுப்பாளர் களைத் தெரியும்.
தப்ளிக்கி அமைப்புச் செயல்பாட்டாளர்கள் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அல்லாவுக்காகச் செயல்படுகிறோம் என்ற உணர்வுதான் மேலோங்கி இருக்க வேண்டும்.
நன்கொடை வாங்கக் கூடாது. உறுப்பினர்கள் தன்னார்வ அடிப்படையில் செலவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மத விழாக்களைத் தவிர மற்ற விழாக்கள் வேண்டிய தில்லை. திருமணங்களைக் கூடத் தனி விழாக்களாக நடத்த வேண்டியதில்லை. தப்ளிக்கி மாநாடுகளிலும் கூட்டங்களிலும் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்பது இதன் வழிகாட்டல்.
தப்ளிக்கியின் நடைமுறைகள்
------------------------------------------------
1. நபிகள் நாயகம் போல் உடை உடுத்த வேண்டும்.
2. நாயகத்தைப் போல் தரையில் படுத்துறங்க வேண்டும்.
3. வலதுபக்கம் சாய்ந்து படுக்க வேண்டும்.
4. கழிவறைக்குள் இடது காலை முதலில் வைத்து நுழைய வேண்டும்.
5. கால் சட்டை மாட்டும் போது வலது காலை முதலில் நுழைத்து மாட்ட வேண்டும்.
6. உணவு உண்ணும் போது முள்கரண்டியைப் பயன்படுத்தக்கூடாது. ஆள்காட்டி விரல், நடுவிரல், கட்டை விரல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உண்ணவேண்டும்.
7. ஆண்கள் மேல் உதட்டுக்கு மேல் முடியை மழித்துக் கொள்ள வேண்டும்.
8. தாடி வளர்க்க வேண்டும்.
9. முழுக்கால் சட்டையோ அல்லது வேறு உடையோ உடுத்தும் போது அது கணுக்காலுக்குக் கீழ், தரையைத் தொடும்படி அணியக்கூடாது. அவ்வாறு அணிவது ஆணவத்தின் அடையாளம்!
10. பெண்கள் கண்களைத் தவிர முழுமையாக உடலை மூடிக் கொள்ள வேண்டும்.
தப்ளிக்கியின் அடிப்படைக் கொள்கைகள்
-----------------------------------------------------------------
1. தனது மத நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
2. தொழுகை
3. இசுலாத்தில் அறிவாற்றல் பெறுதல்
4. முசுலிம்களை மதித்தல்
5. நோக்கத்தில் நேர்மையாய் இருத்தல்
6. இசுலாத்திலிருந்து யாரும் மதம் மாற அனுமதிக்கக் கூடாது.
7. அரசியலில் தலையிடக் கூடாது.
8. வன்முறையற்ற வழிமுறைகள்
அரசியலில் தலையிட்டிருந்த தப்ளிக்கி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பல நாடுகளில் குற்றச் சாட்டுகள் உண்டு.
வன்முறையை மறுத்த போதிலும் தப்ளிக்கி உறுப்பினர்கள் 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு, பாரீசில் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், இலண்டன் வெடிகுண்டுத் தாக்குதல்கள் - கார் வெடிகுண்டுகள் போன்றவற்றில் தப்ளிக்கி உறுப்பினர்கள் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.
தப்ளிக்கி பிரிவு தோன்றியதின் பின்னணி
----------------------------------------------------------------
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிராமண வைதிக மத மீட்புக் கருத்துகள் எழுச்சி பெற்றன. அவற்றிற்கான அமைப்புகளும் உருவாயின. 1871-மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் “இந்து மதம்” என்ற புதிய மதப் பெயரை அதிகார முறைப்படி ஆங்கிலேய அரசு அறிவித்தது. பல்வேறு பிரிவுகளாய், உதிரிகளாய்க் கிடந்த சிவ, வைணவ, கிராமத் தெய்வ, குல தெய்வ வழிபாட்டு மக்களை “இந்து” என்ற பெயரில் ஒருங்கிணைத்தமை, ஆரிய - பிராமண ஆதிக்க ஆற்றல்களுக்கு புதிய ஆன்மிக வேகம் அளித்தது.
இந்து மதம் என்ற பெரும் மக்கள் திரளுக்குத் தாங்கள் தாம் ஆதிக்கத் தலைவர்கள் என்ற அக மகிழ்வு ஆரியவாதிகளுக்கு ஏற்பட்டது.
ஏற்கெனவே பல நூற்றாண்டுகளாக மொகலாய முசுலிம் ஆட்சி வட இந்தியா முழுவதும் கோலோச் சியது. அதற்கு முன் அடிக்கடி அயல் நாடுகளிலிருந்து முசுலிம் படையெடுப்புகள் நடந்தன. மொகலாய முசுலிம் ஆட்சி வட இந்தியாவில் நிலைத்த பின் மேற்காசியாவிலிருந்து முசுலிம்கள் ஏராளமாக வந்து இந்தியாவில் குடியேறி னார்கள். வட இந்தியாவின் மண்ணின் மக்களையும் இசுலாம் மதத்திற்கு மாற்றினார்கள். அது மட்டுமல்ல, நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் வரை ஊர்ப் பெயர்களை அரபியில் அல்லது உருதுவில் இசுலாமிய அடையாளத்துடன் மாற்றினார்கள். இவ்வாறு பல துறைகளில் அரபி மயம் - இசுலாமிய ஆட்சியின் துணை கொண்டு அரங்கேறியது.
இசுலாம் அல்லாதவர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்கள் என்ற உளவியல் “இந்துக்களிடம்” ஏற்பட்ட சூழல் அது!
இப்பின்னணியில் தான் இசுலாமியர் அல்லாத வெள்ளைக்கார கிறித்துவர்களின் ஆட்சியில் இந்துக்களும் இசுலாமியர்களும் சமத்துவமாக நடத்தப்படும் நிலை உருவானது. பெரும்பான்மையாய் உள்ள இந்துக்களை அனுசரித்துப் போகும் நிலையும் ஆங்கிலேய ஆட்சிக்கு ஏற்பட்டது. வர்ணாசிரம ஆதிக்கப்படி வரலாற்று வழியில் கூடுதலாகக் கல்வி கற்ற பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சியில் அதிகாரிகளாக இருந்து, செல்வாக்கு செலுத்தும் நிலையும் ஏற்பட்டது.
பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என ஆங்கிலேய ஆட்சியில் பொதுக் கல்வி வளர்ச்சி கண்டது.
ஏற்கெனவே மொகலாய ஆட்சியில் “இந்து” மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாற்றுவது நடந்தது. இப்போது வெள்ளைக்காரக் கிறித்துவ ஆட்சியில் “இந்து” மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாற்றுவது நடக்கிறது.
மேற்கண்ட வெவ்வேறு பின்னணிகளின் சங்கமிப்பில் தான் இந்து மத மீட்பு வாதம் முகாமையாகப் பிராமணப் படிப்பாளிகளால் முன்வைக்கப்பட்டது.
இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருவதற்கான அமைப்புகள் உருவாயின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “சுத்தி” (Shuddhi) இயக்கம், “சங்கட்டன்” (Sanghatan) இயக்கம் போன்றவை தொடங்கப்பட்டன. சுத்தி என்பதன் பொருள் தூய்மை! சங்கட்டன் என்பதன் பொருள் வலுப்படுத்துதல்! இசுலாம், கிறித்துவம் ஆகிய மதங்களுக்கு மாறிய இந்துக்களை மீட்டுக் கொண்டு வருவதே இவ்விரு அமைப்புகளின் முதன்மைச் செயல் திட்டம்!
இப்பின்னணியில்தான் இசுலாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறாதீர் என்ற முழக்கத்துடன் தப்ளிக்கி அமைப்பு தொடங்கப்பட்டது.
இசுலாமிய இறுக்கவாத தப்ளிக்கி 1926-இல் தொடங்கப் பெற்றது; ஆரிய ஆதிக்கவாத ஆர்.எஸ்.எஸ். 1925-இல் தொடங்கப்பட்டது.
ஆரிய ஆதிக்கவாதம், இசுலாமிய இறுக்கவாதம் இரண்டுமே தமிழ்நாட்டிற்குத் தேவையற்றவை! ஏன்? ஆரிய ஆதிக்க வாதத்தைத் தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். “இந்துக்கள்” என்று இன்று அடையாளப்படுத்தப்படும் தமிழர்களுக்கு இசுலாமியர் களோடு இயல்பான நல்லுறவு தொன்று தொட்டு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் முசுலிம்கள்
------------------------------------------
அராபியர் என்றால் முசுலிம்கள் என்று மாறிப் போனது பிற்காலத்தில்! அதாவது அங்கு இசுலாமிய மதம் உருவாக்கப்பட்ட பின்! ஆனால் இசுலாம் உருவாவதற்கு முன்பாகவே அரேபியர் தமிழ்நாட்டுடன் வணிகம் செய்துள்ளனர்; இங்கு வந்து தங்கியுள்ளனர்.
சேர நாடும் (இன்றைய கேரளமும்) சேர்ந்திருந்த தமிழ்நாடு பெருமளவு கடல் சூழ்ந்த நாடு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில் உற்பத்தி, வணிகம் இரண்டிலும் சிறந்து விளங்கிய இனம் தமிழினம்! ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வந்து வணிகம் செய்தவர்களைச் சோனகர்கள் என்று தமிழர்கள் அழைத்ததாகத் தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.
“சோனகர்” என்ற பெயரில் இப்போதும் ஊர்கள், நகர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. திருச்செந்தூர் அருகேச் “சோனகன் விளை” என்ற ஊர் உள்ளது. காயல் பட்டணத்தில் சோனகன் என்ற பகுதி இருக்கிறது.
“வந்தாரை வாழ வைக்கும் தமிழினம்” என்று நம்மிடையே ஒரு மரபுத் தொடர் இருக்கிறது. அது தற்பெருமைக்குச் சொல்லப்பட்டதன்று, வரலாற்று வழியில் சொல்லப்பட்டது.
அரேபியாவில் இசுலாம் மதம் உருவான பின்னரும் சோனகர்கள் தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வந்து தங்கியுள்ளார்கள். பின்னர் சமண, புத்த நெறிகளில் இருந்தும், சைவ, வைணவ நெறிகளிலிருந்தும் பலர் முசுலிம் மதத்திற்கு மாறியுள்ளார்கள்; மாற்றப் பட்டுள்ளார்கள். தமிழ் இனத்தில் இருந்து இசுலாமியர் களாக மாறியவர்கள் மரக்காயர், இராவுத்தர், லெப்பை என்ற பிரிவுகளில் இருக்கின்றனர்.
முசுலிம் சான்றோர்கள், படைவீரர்கள் தமிழர்களின் சிவ, வைணவ, கிராமப்புற தெய்வங்களோடு இணைக்கப்பட்டு இன்றும் வழிபாட்டுத் தெய்வங்களாக இருக்கின்றனர். எங்கள் மாமா வகையறாவின் குல தெய்வம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டைக்கு அருகில் உள்ள கல்லுக்காரன் பட்டியில் உள்ளது. அக்கோயிலில் தலைமைத் தெய்வம் சப்பாணி கருப்பு! சப்பாணி கருப்புக் கோயிலில் பட்டாணித் தெய்வம் இன்றும் வழிபடப்படுகிறது.
கொங்கு வேளாளரில் காகம் பிரிவினர் தங்கள் குல தெய்வத்துடன் சேர்த்து இராவுத்தர் சாமியையும் கும்பிடுவதாகக் கூறுகின்றனர். அதே போல் வன்னியர்களின் திரவுபதி வழிபாட்டில் முத்தாலம்மன் இராவுத்தரும் வழிபடப் படுவதாகக் கூறுகிறார்கள்.
அருணகிரி நாதர் “மாமயில் ஏறும் இராவுத்தனே” என்று முருகனை அழைத்து வழிபடுகிறார்.
வள்ளலாரின் பாக்கள் அருட்பா அல்ல, அவை மருட்பா என்ற பெரும் விவாதம் கிளம்பிய போது, வள்ளலார் எழுதியவை அருட்பா என்று ஊர் ஊராய் பேசியவர் செய்கு தம்பி பாவலர். குணங்குடி மஸ்தான் தமிழ் சித்தர் மரபில் நின்று இலக்கியம் படைத்தார். பீர்முகமது அப்பா என்ற இசுலாமிய அறிஞரின் தமிழ்ப் படைப்புகள் மிகச்சிறந்த தமிழ் இலக்கியங்கள்.
நாகூர் தர்காவுக்கு இன்றும் இந்துக்கள் போய் வழிபட்டுக் கொண்டுள்ளார்கள். தர்காக்களில் வழிபட வருவோர்க்கு திருநீறு கொடுக்கிறார்கள்.
ஆனால் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கம், பழைய உறவு இன்று இல்லை. இரண்டு மதங்களிலும் மதத் தன்முனைப்பும், தீவிரப் போக்கும் வளர்ந்துள்ளன.
இந்து மதத்தைப் பொறுத்தவரை, மதத் தீவிரவாதம் தமிழ்நாட்டிலிருந்து தோன்றவில்லை. வடநாட்டிலிருந்து இங்கு வந்த ஆரிய மேலாதிக்கவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., இந்து முன்னணி, பா.ச.க. போன்றவையே தமிழ்நாட்டில் இந்துத் தீவிரவாதத்தை விதைத்தன.
ஆனால் இசுலாமியத் தீவிரவாதத்தை உலகத்தின் பல பகுதிகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் விதைக்கின்றன. வெளிநாட்டு அமைப்புகள் இங்கு வந்து தீவிரவாதத்தை விதைக்கின்றன என்பதைவிட இங்குள்ள முசுலிம்களில் ஒரு சாரார் விரும்பி அத்தீவிரவாதங்களை இறக்குமதி செய்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
தொழுகை, பள்ளி, பெருநாள் என்று தூய தமிழில் தங்களின் வழிபாட்டுப் பெயர்களை வைத்திருந்த முசுலிம் முன்னோர்கள் இன்று இல்லை. தம்பி துரை, அல்லா பிச்சை, சந்தனம் பீர், செல்லம்மாள், நாச்சியார் என்று தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டிய முசுலிம்கள் மிகவும் அருகிவிட்டார்கள். இன்றும் இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளில் முசுலிம்களின் பெயர்கள் அந்தந்த நாட்டு மொழி மரபை ஏற்றுக் கொண்டதாகவே இருக்கின்றன. துருக்கி முசுலிம்களின் நடை உடைகள் ஐரோப்பியச் சாயலில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் இந்து மதத்தில், ஆரியத்துவா ஆதிக்கவாதிகள் தமிழர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்கள் வழிபாடு அனைத்தையும் ஆரிய வைதிக - சமற்கிருத பாணிக்கு மாற்றுகிறார்கள். இன்னொரு பக்கம், இசுலாமிய இறுக்கவாதிகளும், தீவிரவாதிகளும் தமிழ் முசுலிம்களின் பெயர்கள் பழக்க வழக்கம், நடை உடை ஒப்பனை அனைத்தையும் அரேபிய வடிவத்திற்கு மாற்றுகிறார்கள். இடையில் கிறித்துவத்திலும் அல்லேலுயா தீவிர பிரிவுகள் நடை உடை வழிபாடு பெயர் சூட்டல் அனைத்தும் அசல் செருசேலம் பாணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இவ்வாறாகத் தமிழ்நாட்டில் மதம் என்பது ஆன்மிகத் தத்துவம், வழிபாடு என்ற அடிப்படைகளுக்கு அப்பால் அயல் இன அடையாளங்கள், அயல் மொழித் திணிப்புகள் - தமிழ் மறுப்பு, தமிழர் மரபு மறுப்பு என்று தீவிர வடிவம் கொண்டுள்ளன. இம்மதங்களில் உள்ள தமிழர்கள் தம் தம் மதத்தைத் தமிழ் மரபோடு இயைந்து செயல்பட வைக்கும் சீர்திருத்தக் கருத்துகளை விதைக்க வேண்டும்; தமிழர் மரபுச் சீர்திருத்த எழுச்சியை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் இந்து மறுப்பைப் பேசின. இசுலாத்திலும் கிறித்துவத்திலும் புகுந்த தமிழர் மரபு மறுப்பு, தமிழ் மறுப்பு இறுக்க வாதத்தையும், அயல் இன அடையாளத் திணிப்பையும் எதிர்க்காமல், கண்டு கொள்ளாமல் விட்டன! இந்து மதத்தில் உள்ள ஆரிய வர்ணாசிரம சாதி ஆதிக்கத்தைத் திராவிட இயக்கங்கள் எதிர்த்துப் போராடியது மிகச் சரி! இன்றும் அப்போராட்டத்தைப் புதிய வடிவில் தொடர வேண்டும். ஆனால் இந்து மத மறுப்பு - மற்ற மத அரவணைப்பு என்ற திராவிட இயக்கத்தின் பழைய பார்வை சரியன்று!
தமிழ்த்தேசியர்கள், எந்த மதத்தின் இறுக்க வாதத்தையும் தீவிர வாதத்தையும் ஏற்கக்கூடாது! எல்லா மதத்தினர்க்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றி அதன் படியான வழிபாடு நடத்தும் உரிமை - அடிப்படை உரிமை! தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் தாயகம் இவற்றை மறுத்து, அயல் இன அடையாளங்களையும், அயல் மொழி - அயல் இன ஆதிக்கங்களையும் எந்த மதம் திணித்தாலும் அத்திணிப்புகளை அந்தந்த மதத்தில் உள்ள தமிழர்கள் எதிர்க்க வேண்டும். தமிழ்த்தேசியம் சார்ந்த மதச்சீர்திருத்தம் அந்தந்த மதத்தில் உள்ள முற்போக்காளர்களால், தமிழ்த்தேசியர்களால் தொடங்கப்பட வேண்டும்.
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மே இதழில் வெளியானது. கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர்).
Leave a Comment