ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வெளிநாடுகளில் பணி செய்த தமிழர்களை அழைத்து வருவதில் இனப்பாகுபாடு காட்டக்கூடாது! தமிழ்நாடு முதல்வர் தலையிடக் கோரி.. பெ. மணியரசன் அறிக்கை!




வெளிநாடுகளில் பணி செய்த
தமிழர்களை அழைத்து வருவதில்
இனப்பாகுபாடு காட்டக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர் தலையிடக் கோரி..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


பணிக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியப் பணியாளர்களை அழைத்து வர சிறப்பு வானூர்திகளை இந்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில், தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டப்படுவதாக ஒரு செய்தி வருகிறது.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் மலையாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். அந்நாடுகளின் தூதரகங்களில் மலையாள அதிகாரிகள் இருக்கிறார்கள். மலையாளிகளுக்கு அடுத்த எண்ணிக்கையில், அந்நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழ்நாடு திரும்பி வர பதிவு செய்துவிட்டு பல்லாயிரக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாடு வருவதற்கு ஒரு வானூர்தி கூட ஒதுக்கப்படவில்லை என்று அங்கே சிக்கியுள்ள தமிழர்கள் தொலைப்பேசிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கும் பேசுகிறார்கள். எனக்கும் பேசியிருக்கிறார்கள்.

முதல்கட்டமாக ஒதுக்கப்பட்ட 149 வானூர்திகளிலும், இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்பட்ட 176 வானூர்திகளிலும் ஒன்றுகூட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படாதது, தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது.

குவைத் போன்ற பல நாடுகளில் முறையான அனுமதியின்றி வேலை பார்த்ததாக நடவடிக்கைக்கு உட்பட்ட தமிழர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அந்நாடுகள் தயாராக உள்ள நிலையில், இந்திய அரசு அவர்களை அழைத்து வர உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை! அதுபோல், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்தியா திரும்ப பதிவு செய்துவிட்டு ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த நாட்டில் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி சிக்கிக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் இனப்பாகுபாடு காட்டாமல் அழைத்து வர வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு! இந்தியாவுக்கு அழைத்து வருவதில் இனப்பாகுபாடு காட்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்து, தமிழ்நாடு அரசு உரியவாறு விசாரித்து அவர்களுக்கும் நீதி வழங்கி, அவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர இந்திய அரசிடம் வலியுறுத்தி, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.