ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கொளத்தூர் மணியும், சுபவீயும், பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா? - பெ. மணியரசன்


கொளத்தூர் மணியும், சுபவீயும், பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?
கட்டுரையாளர் : பெ. மணியரசன்

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த வரனே அவசியமுண்டேஎன்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன்என்று பெயர் வைத்து அழைத்தது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்று, தமிழின உணர் வாளர்கள் வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே ஏராளமான மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் காட்சிகளைக் கேரளத் திரைப்பட இயக்குநர்களும் கதை ஆசிரியர்களும் கதாநாயகர்களும் திட்டமிட்டுச் சேர்த்துள்ளார்கள் என்பதை எழுத்தாளர் சாம்ராஜ் உட்பட பலர் வரிசையாகப் பட்டியலிட்டார்கள்.

தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான இனச்சிக்கலாகப் பேசப்பட்ட - இந்த விவாதம், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், தி.மு.க. விற்கும் இடையிலான சிக்கலாக மாறிப் போனது ஏன்?

தி.மு.க. தரப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கலைஞர் கருணாநிதி மட்டும் தலைவரல்லர், தமிழின அழிப்பு வெறியர்களான இராசபட்சே, கோத்தபய கூடத் தலைவர்கள்தாம் போல - என்று கருதும் அளவிற்கு, பிரபாகரன் மீது மிகமிகக் கொச்சையான, குரூரமான, வன்மமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

தி.மு.க. தரப்பினர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து இழிவாகவும், கீழ்த் தரமாகவும் வலைத்தளங்களில் பரப்பிய அவதூறுகளை கண்டிப்பதற்கு மாறாக, அதை இப்போது தேவையில்லை என்று சாதாரணப்படுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி. பேராசிரியர் சுப.வீ. விடுத்த இரண்டாவது அறிக்கையில் (11.05.2020) மேற்படி இழிவுகள் மற்றும் அவதூறுகளுக்கு பின்னால் உள்ள ஞாயங்களை எடுத்துக் கூறுகிறார். விடுதலைப் புலிகள் மீது இராசபட்சேகும்பல் என்னென்ன குற்றச்சாட்டுகள் சொன்னதோ, அவை அனைத்தையும் தி.மு.க. தரப்பினர் அடுக்கினார்கள்.

- முதல் முதலாக 1983இல் சிங்களப்படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றதால்தான் சிங்களர்கள் 1983 சூலை படுகொலை நிகழ்ச்சிகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
- முசுலிம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள், வெளியேற்றினார்கள்.
- சிறீ சபாரத்தினத்தையும் டெலோ போராளிகளையும் கொன்றார்கள்.
- ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவையும் அவருடன் இருந்தோரையும் கொன்றார்கள். இன்னும், இன்னும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் மீதும் குறிப்பாகப் பிரபாகரன் மீதும் தி.மு.க. தரப்பினர் சுமத்தினார்கள்.

சிங்களப்படையாட்கள் 13 பேரை ஈழத்தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதைக் குற்றமாகச் சொல்கிறார்கள்! ஏன் புலிகள் அவர்களைக் கொன்றார்கள்?

1956-இலிருந்து தமிழீழத் தமிழர்களை சிங்களப் படையாட்களும் காவல்துறையினரும் தொடர்ந்து சுட்டுக் கொன்றார்கள். தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொண்டு பின் சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் மக்கள் திரள் போராட்டம் நடத்திய தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களும், அமிர்தலிங்கம் அவர்களும் பட்டியலிட்டுள்ளார்கள்.

தமிழர்களின் சனநாயக உரிமைகளை மட்டுமின்றி, மனித உரிமைகளையும் பறித்த சிங்களக் காடையர்களையும் சிங்களப் படையாட்களையும் எதிர்கொள்வ தற்காக தம்பி பிரபாகரன் அவர்களுக்கு முன்பாகவே தமிழர் தற்காப்பு ஆயுதக் குழுக்கள் உருவாயின. ஆயுதப் போராளி பொன். சிவக்குமரன் சிங்களப் படையாட்களிடம் பிடிபட்டபோது, நச்சுக் குப்பி கடித்து உயிரீகம் செய்தார். எதிரியிடம் சிக்கினால் நச்சுக் குப்பி கடித்து சாக வேண்டும் என்ற போர்முறை கூட தம்பி பிரபாகரனுக்கு முன்பாக ஈழத்தமிழர்களிடம் உருவானதுதான்!

டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் என்ற ஈழத்தமிழர் படை அமைப்புகள் எதற்காக உருவாயின? தமிழர்களை அழிக்கும் சிங்கள இராணுவத்தையும் காவல் துறையினரையும் எதிர்த்துக் கொல்வதற்குத்தானே!

தமிழீழப் பகுதியில் தமிழர்களைத் தாக்கிய சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றது என்ன குற்றம்?

அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடுஎன்று முழங்கிவிட்டு, தில்லி ஏகாதிபத்தியத்தின் திராவிட முகமையாக மாறிப் போன தி.மு.க. போல் புலிகள் செயல்படாதது குற்றமா?

தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி என்று முழங்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றும் உரிமையை நான்தான் வாங்கினேன் என்று மார்தட்டியது போன்ற கருணாநிதியின் சற்சூத்திர சாதனைப் பட்டியல்புலிகளிடம் இல்லைதான்!
இந்திரா காந்தி ஆட்சி, இந்தியாவில் தமிழீழ ஆயுதப் படை அணிகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தபோதே, அந்த அமைப்புகளைத் தனது கையடக்கக் குழுக்களாக வைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. இந்திய அரசு விரும்பும் அளவிற்கு மட்டும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைப்புகளாக அவை செயல்பட வேண்டும் என்பதே இந்திரா காந்தியின் திட்டம். சில அமைப்புகள் அவ்வாறு இந்திய அரசின் கட்டுப் பாட்டிற்குள் போய்விட்டன.

இந்திய அரசுக்கு மட்டுமின்றி, தி.மு.க.விற்கும் வேண்டிய  அமைப்பாக டெலோ மாறிப் போனது. இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் கட்டுப்படாத ஈழ விடுதலை அமைப்பாக செயல்பட்டது புலிகள் அமைப்பு!
இந்தியப் பயிற்சிக்குப் பின் நாடு திரும்பிய டெலோ படையினர் பல தடவை புலிகளைத் தாக்கினர்; படுகொலை செய்தனர். விடுதலைப்புலிகள் முகாம் ஒன்றைத் தாக்கிப் புலி வீரர்கள் பலரைக் கொன்றார்கள். இதற்கான எதிர்வினையாகத்தான் விடுதலைப்புலிகள் டெலோவின் தலைமை முகாமைத் தாக்கி அழித்தனர்.

தி.மு.க. தரப்பினர், “பிரபாகரன் படையினர் டெலோவைத் தாக்கி அழித்தார்கள்; அதன் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொன்றார்கள்என்று ஒருபக்க நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டுவது நேர்மையா?

அமைதிப்படை என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக - ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் படையை ஏவினார் இராசீவ் காந்தி! இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இந்தியப்படை கொன்றது. சிங்களப் படையாட்கள் செய்ததைப் போலவே இந்தியப் படையாட்கள் ஈழத்தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இந்தியப் படையை வரவேற்றது. இந்தியப் படைக்குத் துணையாகச் செயல்பட்டது. விடுதலைப்புலிகளை அடையாளம் காட்டி, அவர்களை இந்தியப் படையாட்கள் சுட்டுக் கொல்ல உதவியது. இதற்கு எதிர்வினையாக சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். முகாமைத் தாக்கி, அதன் தலைவர் பத்மநாபா உள்ளிட்டோரை புலிகள் கொன்றார்கள்.

இந்த வரலாறெல்லாம் என்னைவிடத் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்குக் கூடுதலாகத் தெரியும்; துல்லியமாகத் தெரியும்! பல கருத்தரங்குகளில் பொதுக்கூட்டங்களில் இவற்றையெல்லாம் விலாவாரியாகப் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்குத் தம் சொந்த ஊரில் - சொந்த நிலத்தில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்தவர் தோழர் கொளத்தூர் மணி! பல உதவிகள் செய்தவர். அதற்காகப் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அதிகம் சிறை சென்றிருப்பார் என நினைக்கிறேன்.

2008 நவம்பர் மாதம் சிங்களப்படை மிகக்கடுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வானத்திலிருந்து கொத்துக்குண்டுகள் போட்டுக் கொல்கிறது. புலிகளும் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இதைக் கண்டித்து ஈரோட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) பொதுக்கூட்டம் போட்டது. அதில் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி மற்றும் நான் மூவரும் பேசினோம். மூன்று பேரையும் கோவை நடுவண் சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி! இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறைகளில்தாம் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம்! 32 நாட்கள் மட்டுமே! பிணையில் வெளி வந்தோம்! மற்றொரு வழக்கில், பல மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தவர் தோழர் மணி!

அத்தனையையும் பொக்கென்று போட்டு உடைத்து விட்டார் தோழர் கொளத்தூர் மணி.

பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர் மட்டும் அல்லர்; ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அடையாளம்! சேர, சோழ, பாண்டியர் வீரம் பற்றி நாம் பேசுவது ஆரியப் புராணக்கதைகளைப் போன்றதன்று! தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் என்பதற்குச் சமகாலச் சான்று பிரபாகரன் - புலிப்படைப் போராளிகள் - தமிழீழத் தமிழர்கள்!

அப்படிப்பட்ட பிரபாகரனை, மலையாளத் திரைப்படத்தில் நாயோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியதை ஆதரித்துத் தமிழ்நாட்டுத் தி.மு.க. தரப்பினர் வலைத் தளங்களில் எழுதியதையும், இவர்கள் கட்டுக்கதைகளை கற்பித்துக் கொண்டு பிரபாகரனை இழிவுபடுத்தியதையும் ஒற்றை வரியில் கண்டிக்கத் தோழர் கொளத்தூர் மணிக்கு மனம் பாயவில்லை!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பாரும் (தமிழ்த்தேசியத் தரப்பினரும், தி.மு.க. தரப்பினரும்) தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறி, இரு தரப்பையும் சமப்படுத்துகிறார் தோழர் மணி.

பிரபாகரனால் தான் ஈழத்தமிழர்கள் அழிந்தார்கள், பிரபாகரன் ஒரு வன்முறை அராஜகவாதி என்று தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் அவதூறு செய்தது தோழர் மணியின் மனத்தில் வலியை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே தோழர் மணி வர்ணித்து வந்த கருணாநிதியின் இனத்துரோகங்களை இப்போது, தமிழின இளைஞர்கள் வரிசைப்படுத்தும்போது அவருக்கு வலிக்கிறது. திராவிடப் பாசம், தமிழினத்திற்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறதோ?

திராவிடப் பாசம் மட்டுமல்ல, புதிதாகப் பாரதப் பாசமும் தோழர் மணியைப் பற்றிக் கொண்டுவிட்டது!

“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது, இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது - என்பது ஒரு காரணம்”.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரையும், பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சரையும், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியாகச் செல்ல இருந்த முன்னாள் சுவீடன் பிரதமரையும் உள்ளே நுழைய மறுத்து இலங்கை அரசு போரை நடத்தியதுஎன்றும் தோழர் மணி கூறுகிறார்.
மேற்கத்திய வல்லரசுகள் நடத்தும் இப்போரில் மேற்கத்திய நாடுகள் அனுப்பிய வெளியுறவு அமைச்சர் களை இலங்கை அரசால் எப்படித் தடுக்க முடியும்? தோழர் மணியின் தருக்கத்தில் தன் முரண்பாடு ஏன்? யாருடைய பின்புலத்தில் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட குட்டித் தீவான இலங்கைக்கு இத்துணிச்சல் வந்தது? இந்தியா தந்த துணிச்சல்!
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் மீது தமிழ் ஈழத்தின் மீது தனிப்பட்ட பகை உணர்ச்சி ஏதுமில்லை! இந்நாடுகளின் இராணுவக் கூட்டணியில் சிங்கள இலங்கை இல்லை! இலங்கை இரண்டாகப் பிரியாமல் தடுக்கும் தனி அக்கறை மேற்கத்திய நாடுகளுக்கு இல்லை.

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில், இந்தியத் துணைக் கண்டத்தில் சீன ஆதிக்கத்தைத் தடுக்கும் தேவை மேற்கத்திய வல்லரசுகளுக்கு உண்டு. அதற்கு இந்தியாவின் துணையை அவை நாடுகின்றன.

ஆரிய அதிகாரத் தலைமையில் உள்ள இந்தியா தமிழினத்தைத் தனது வரலாற்றுப் பகை இனமாகப் பார்க்கிறது. இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி இல்லை என்றாலும், தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூடுதலான இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு!

சங்க காலத்திலிருந்து ஆரியத்தை எதிர்த்து வருபவர்கள் தமிழர்கள்; சமற்கிருதத்தைத் தேவமொழி என்று ஏற்காதவர்கள். ஆன்மிகத்திலும் இருபதாம் நூற்றாண்டு அரசியலிலும் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு விடுதலை கோரியவர்கள். இப் பொழுதும அனைத்திந்தியக்கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. எனவே, தமிழர்களைப் பகைவர்கள் போல் பார்ப்பதும், பழிவாங்குவதும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வழக்கம்!
ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகவே வெளிநாட்டுக் கொள்கை இருக்கும். இந்தியாவில் தமிழர்களை சந்தேகப்பட்டியலில் வைத்திருப்போர், அண்டை நாட்டில் தமிழர்கள் தனிநாடு கோருவதை ஆதரிப்பார்களா? அதிலும், “ஆரிய இனத்தைச்சேர்ந்த சிங்களர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்கள் தனி ஈழம் அமைப்பதை ஏற்பார்களா?
நான் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்திலேயே எழுதியதைத் திரும்பச் சொல்கிறேன்: ஒரு வேளை சிங்களர்கள் தனி ஈழத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்திய ஆளும்வர்க்கம் தனி ஈழத்தை ஏற்காது!”.

இந்திய அரசுதான் மேற்கத்திய நாடுகள் உட்பட பல அயல்நாடுகளிடம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிங்களர்களின் போருக்கு ஆதரவு திரட்டித் தந்தது. இந்திய அரசின் வற்புறுத்தலால் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகள் ஈழ விடுதலைப் போரை எதிர்த்தன.

தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு போர் நகர்வையும் இந்திய அரசின் அறிவுரையோடும் ஒப்புதலோடும்தான் சிங்கள அரசு முன்னெடுத்தது.

2008-இல் சிங்கள அரசு தொடங்கிய இறுதிப் போர்க்கு முன்பாக 2008 மார்ச்சு மாதம் இலங்கைப் படைத்தளபதி சரத்பொன்சேகா புதுதில்லி வந்து, அமைதி உடன் படிக்கையை மீறி போர் தொடங்குவதற்கு இந்திய அரசிடம் ஒப்புதலும் உதவியும் பெற்றுச் சென்றார். அப்போது பொன்சேகா மூன்று கோரிக்கைகளை இந்திய அரசிடம் வைத்தார்.

1. வரும் சூன் மாதம் (2008) விடுதலைப்புலிகள் வசம் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற போர் தொடுக்கப் போகிறோம்.

2. அப்போரில் இலங்கைக் கப்பற்படைக்கு - இந்தியா கடல்வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்க வேண்டும்.

3. ஒருவேளை, ஆனையிறவில் இலங்கைப் படை தோற்றதைப் போல் இதில் தோற்றால் - புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டால் உயிர்ச்சேதம் இல்லாமல் எங்கள் படையினரை இந்தியா மீட்டுத் தர வேண்டும்.

கமுக்க உடன்படிக்கையில் வெளியே கசிந்த செய்திகள் இவை! அப்போதே எங்களின் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் (2008) இதழ் ஆசிரியவுரையில் மேற்படி மூன்று கூறுகளையும் வெளியிட்டோம்.

இறுதிப் போரில் ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். அவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால், உலக நாடுகள் தலையிடும் சூழல் உருவாகும். அப்படி ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பையும் இந்தியா ஏற்க வேண்டும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கோரினர். அதற்கு ஒப்புக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளை வரச்சொல்லி - அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வர் செயலலிதாவையும் சந்தித்து வேண்டுகோள் வைக்க ஏற்பாடு செய்தனர்.

2008 சூன் - சூலையில் பெரும் போரைத் தொடுத்தது சிங்கள அரசு. வான் கொத்துக் குண்டு வீச்சில் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கலைஞரோ, செயலலிதாவோ பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்என்று கூறி சிங்கள அரசு நடத்தும் போரை ஞாயப்படுத்தினார் செயலலிதா.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின. ஆனந்த விகடன்இதழ் அப்போது தமிழ்நாட்டில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர், தனி ஈழத்தை ஆதரிப்போர், பிரபாகரனை ஆதரிப்போர் என்று பல வினாக்களைக் கேட்டுக் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள், 06.08.2008 நாளிட்ட ஆனந்த விகடன்இதழில் வந்தன. அதில், தனி ஈழத்தை ஆதரிப்போர் 55.44 விழுக்காட்டினர் என்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறோம் என்று கூறியவர்கள் 54.25 விழுக்காட்டினர்.

விடுதலைப்புலிகளை தி.மு.க. இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியோர், 22.71 விழுக் காட்டினர். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று கூறியோர் 47.48 விழுக் காட்டினர். இப்போது போலவே பட்டும் படாமலேயே தி.மு.க. இருக்கலாம் என்று கூறியோர் 29.79 விழுக் காட்டினர்.

இராசீவ் காந்தி கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்குப் போதிய ஆதரவில்லை என்று கூறியவர்களின் கணிப்பு பொய் ஆனது. கருணாநிதி, செயலலிதா, காங்கிரசார் எல்லோர்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அவர்களுக்கு அடுத்த பேரிடி தினமணிஇதழிலிருந்து வந்து விழுந்தது.
விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் ஒன்றா?” என்ற வினாவைக் கேட்டு தினமணிகருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்கு, “ஆம்என்று விடையளித்தோர் 72.58 விழுக்காட்டினர்.

அதன்பிறகே, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கோர வேண்டும் என்று வலியுறுத்தி காந்தியடிகள் பிறந்த நாளான 02.10.2008 அன்று சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருநாள் உண்ணாப் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்தது. மிகப்பெரிய போராட்டமாக நடந்தது. மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தமிழ்நாட்டில் கணிசமான வாக்குச்சந்தைஇருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். புதிய ஒப்பனைகளுடன் புதிய நாடகங்கள் அரங்கேற்றத் தொடங்கினர்.

முதலமைச்சர் கருணாநிதி 06.10.2008 அன்று மயிலை மாங்கொல்லையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, “இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றால், அதற்குப் பிறகு நாங்கள் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்என்று முழங்கினார்.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்திய அரசு இலங்கையிடம் போர் நிறுத்தம் கோரவில்லை என்றால், தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

கெடு முடிவதற்கு முதல்நாள் மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 26.10.2008 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது; தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள்என்று கலைஞர் வீட்டுவாசலில் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டதும் பிரணாப் விடையளித்ததும் வருமாறு :

கேள்வி 1 : இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் கோர ஒப்புக் கொண்டீர்களா?
பிரணாப் : நாங்கள் போர் நிறுத்தம் கோர மாட்டோம் (We are not for Ceasefire).
கேள்வி 2 : இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமா?
பிரணாப் : இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இராணுவக் கருவிகள் சில கொடுத்துள்ளோம்.
கேள்வி 3 : இலங்கைப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்படுமா?
பிரணாப் : இந்தியாவில் பலநாட்டுப் படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். இலங்கைப் படை வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். இது எப்போதும் உள்ள வழமையான நடவடிக்கை தான்!
பிரணாப் முகர்ஜியின் வாக்குறுதியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டத்தைக் கைவிட்டோம் என்று அறிவித்தார் கருணாநிதி. எனது நம்பிக்கை வீண் போகவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றனஎன்றார் கருணாநிதி!

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து முடித்த பின் இலங்கைக் குடியரசுத் தலைவர் இலங்கை நாடாளுமன்றத்தில், “நாம் இந்தியாவுக்கான போரைத்தான் நடத்தினோம்என்று அறிவித்தார். அதற்கு எந்த மறுப்பும் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் சொல்லவில்லை, ஆளுங்கட்சித் தலைவி சோனியா காந்தியும் சொல்லவில்லை!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்தப் போர் இந்தியா நடத்தியதா? மேற்கத்திய நாடுகள் நடத்தியதா? கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகங்களை மறந்துவிட வேண்டுமா?

போர் நடத்திய அறுவர் குழு

இலங்கை அரசு நடத்திய ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழு அடிக்கடி விவாதித்து வழிநடத்தியது. அதில் மூன்று பேர் இலங்கையர், மூன்று பேர் இந்தியர்!

சிங்களத் தரப்பில்,
1. கோத்தபய இராசபட்சே (இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளர்),
2. பசில் இராசபட்சே (நாடாளுமன்ற உறுப்பினர்),
3. லலித் வீரதுங்க (குடியரசுத் தலைவரின் செயலாளர்).

இந்திய அரசுத் தரப்பில்,
1. எம்.கே. நாராயணன் (இந்தியப் பாதுகாப்புத் துறையின் மதியுரைஞர் - மலையாளி).
2. சிவசங்கர மேனன் (வெளியுறவுத்துறைச் செயலாளர் - மலையாளி).
3. விஜய் சிங் (பாதுகாப்புத்துறைச் செயலாளர் - இந்திக் காரர்).
இச்செய்தி ஏற்கெனவே ஊடகங்களில் வெளியானது தான். கோத்தபய இராசபட்சே இந்தியன் டிஃபென்ஸ் ரிவ்வியூ (Indian Defence Review) என்ற இதழுக்கு அளித்த செவ்வியிலும் இந்த அறுவர் குழு இலங்கையின் போர் நடவடிக்கைகளை நிர்வகித்தது பற்றிக் கூறி யுள்ளார்.
அந்த செவ்வியில் கருணாநிதியின் போர் நிறுத்த உண்ணாப் போராட்ட நாடகத்தையும் அம்பலப்படுத்தி விட்டார் கோத்தபய! (கோத்தபய இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர்).

2009 ஏப்ரல் 24ஆம் நாள் விடியும் நேரத்தில், மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதி திடீர் உண்ணாப் போராட்டம் தொடங்கினார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது கோரிக்கை!

உணர்ச்சி வசப்பட்டு திடீரென்று உண்ணாப் போராட்டம் நடத்துகிறார் என்ற அதிர்ச்சிச் செய்தி! ஆனால், இந்த நாடகம் முதல் நாளான ஏப்ரல் 23ஆம் நாள் மாலையே இந்திய அரசுக்குத் தெரிந்தது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் தன்னை அவசரமாகத் தொலைப்பேசியில் அழைத்து இச்செய்தியைக் கூறியதாக கோத்தபய மேற்படி செவ்வியில் கூறியுள்ளார். மறுநாள் கருணாநிதியின் உண்ணாப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில், “தாக்குதல்கள் நிறுத்தப்படும்என்று போலி அறிக்கை வெளியிடுவதற்கான தயாரிப்பில் அப்போதே இறங்கிவிட்டோம் என்கிறார் கோத்தபய!

சிவசங்கர மேனன் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு Choices : Inside the Making of Indian Foreign Policy  (வாய்ப்புகள் : இந்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தின் உட்புறம்).

போரின் இறுதி நாட்களில் நார்வேயும், அமெரிக்காவும் விடுதலைப்புலித் தலைவர்களை வான் வழியே அழைத்துச் சென்று காப்பாற்றி, போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின. ஆனால், அதில் சிங்கள, இந்திய அரசியல்வாதிகளுக்கு உடன்பாடில்லை என்று சிவசங்கர மேனன் குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். ஆனால், இச்செய்தி போரின் இறுதிக் கட்டத்திலும் போர் முடிந்த பின்னும் பரவலாகப் பேசப்பட்ட செய்திதான்!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்திய அரசுதான் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை நடத்திய போரை இயக்கியது என்பதற்கு இந்தச் சான்றுகள் போதுமல்லவா!

கருணாநிதியின் துரோகத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இனப்பகை இந்திய அரசையும் அல்லவா பாதுகாக்கிறீர்கள்!

உங்கள் திராவிடக் கொள்கை மீதும், பெரியாரியத்தின் மீதும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு இருந்தது. அனைத்தையும் தகர்த்து விட்டீர்கள் தோழரே!

இந்தியா நினைத்தாலும் இலங்கை நடத்திய போரை நிறுத்தி இருக்க முடியாது என்று கூறி, ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை போனதை மறைக்க விரும்புகிறீர்களே!

கருணாநிதி வஞ்சகமாக நாடகமாடாமல் இலங்கைப் போர் நிறுத்தத்தை வலியுறுத்திப் போராடியிருந்தால், தனிப்பெரும்பான்மை இல்லாத மன்மோகன் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால், ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காங்கிரசு அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இருக்கும் என்று நான் கருதவில்லை. ஈழத்தமிழர்களுக்காக - நாடகமாடாமல் உண்மையிலேயே கருணாநிதி பதவி விலகியிருந்தாலும், காங்கிரசுக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும் மன்மோகன் ஆட்சி வீழ்ந்துவிடாமல் இந்தி மண்டலக் கட்சிகள் பாதுகாத்திருக்கும். தமிழர்களுக்காக காங்கிரசு ஆட்சி வீழ்வதை, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியோ, மாயாவதியின் பகுசன் சமாஜ் கட்சியோ மற்றும் சில கட்சிகளோ விரும்பி இருக்க மாட்டார்கள்! தங்கள் ஆதரவைக் கொடுத் திருப்பார்கள்!

கலைஞர் கருணாநிதி மன்மோகன் சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டு, தாமும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அன்றைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி மக்கள் பக்கம் நின்ற ஒரு போராளியாகக் காட்சியளித்திருப்பார்.

ஆனால், கருணாநிதி தமிழீழத்தை - ஈழத்தமிழர்களை ஆதரிப்பதுபோல் நாடகமாடி ஏமாற்றினார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

தோழர் கொளத்தூர் மணி இன்னொரு ஆபத்தான தத்துவம் சொல்கிறார். பத்தாண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லைஎன்கிறார்.

பதினோராண்டுகள் கழிந்து போய்விட்டன என்றுகூறி, ஈழத்தமிழர்கள் கருணாவை ஏற்றுக் கொள்வார்களா? இன்னொன்று, ஈழத்தமிழர் இனம் அழிக்கப்பட்டதை,  இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு விடுதலைப் போர் வீழ்த்தப்பட்டதை - அந்த இன அழிப்பிற்கு மறைமுகமாகத் துணைபோனவர்களை பத்தோடு பதினொன்றாக மறந்துவிட தோழர் மணி அவர்களால் முடிகிறது என்பதை நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை!

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று அதை மறந்து விடலாமா? திராவிடத் தத்துவத்தின்படி மறந்து விடலாம்! மறந்து விட்டுத்தானே, திராவிடத் தளபதி கருணாநிதி பா.ச.க. வுடன் 1999-இல் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க.வினரை உட்கார வைத்தார்!

1965 - இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் 400க்கும் மேற் பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்ற காங்கிரசுக்குத்தானே கருணாநிதி 1969 முதல் ஆதரவு தந்தார். 1971 பொதுத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்!
இந்தப் பாதையெல்லாம் திராவிடத் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த பாதைதான்!

வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோது, அவனை ஆதரித்தார்! அவன் 1947 ஆகத்து 15இல் விடைபெற்ற போது அது துக்க நாள் என்றார் பெரியார். சில ஆண்டுகள் காங்கிரசு எதிர்ப்பு. பின்னர் 1954லிருந்து காங்கிரசு ஆதரவு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டே தமிழ்நாடு விடுதலை பற்றியும் அவ்வப்போது பேசிய அந்நாளையக் கலைஞர் அவர்! தி.மு.க. ஒழிப்புதான் முதல் வேலை என்று 1949லிருந்து 1967 பிப்ரவரி வரை செயல்பட்ட பெரியார் இப்படிப் பட்ட அரசியல் சந்தர்ப்பவாத பண்பாட்டிற்குத் தானே அடித்தளம் அமைத்தார்!

1970களின் தொடக்கத்தில் தந்தை செல்வா அவர்கள், சென்னையில் பெரியாரை சந்தித்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரியபோது, “நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்என்று விடை கூறி, ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்தவர் பெரியார்.

வரலாற்றில், ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலையடைய காலனி நாடுகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தில், ஒரு காலனி நாடு இன்னொரு காலனி நாட்டை ஆதரிப்பதுதான் வலிமையாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல், ஒதுங்கிக் கொள்வதற்காக - தந்திரமாக ஓர் அடிமை இன்னொரு அடிமையின் விடுதலையை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு ஆதரவு தர மறுத்துள்ளார்.

கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள். பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும் அவர்களைத் திராவிடத் தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ்த்தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது! எனவே, பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இதோ சுப.வீ. அவர்களுடைய ஒப்புதல் கூற்று : புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப்பட்டது”. (சுப.வீ. அறிக்கை, 11.05.2020).

மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறை கூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம்என்று தோழர் கொளத்தூர் மணி தனது கட்டுரையில் கூறுகிறார்.

பா.ச.க. பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான கொள்கைத் திட்டம் - வேலைத் திட்டம் எதையாவது தி.மு.க. வெளியிட்டிருக்கிறதா? பீகாரின் பிராமண பிரசாந்த் கிசோர் ஏற்கெனவே மோடிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர். இப்போது மு.க. ஸ்டாலினுக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார். பிரசாந்த் கிசோர் கலைத்திட்டத்தில் (Curriculam) பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள் இல்லையே! எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை இதுவரை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. கடைபிடிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார் என்பதற்காக, காங்கிரசோடு தொடர்பை துண்டித்துக் கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்நேரத்தில், பா.ச.க. ஆட்சிக்கு எதிராக சோனியா காந்தி புதுதில்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை (14.01.2020) தி.மு.க. புறக்கணித்தது. இதுதான் பா.ச.க. எதிர்ப்புக் கூட்டணியா?

காங்கிரசைக் கைவிட்டு பா.ச.க.வோடு தி.மு.க. கூட்டணி சேராது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? கருணாநிதி அவர்களே 1999லிருந்து ஐந்தாண்டுகள் பா.ச.க. கூட்டணியில்தானே இருந்தார்! எதிரும் புதிருமானவர்கள் காலப்போக்கில் சேர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இதே கட்டுரையில் தோழர் மணி கூறுகிறார். அவர் வாதப்படி தி.மு.க. பா.ச.க.வோடு சேர்ந்தாலும் பெரிய தவறு ஒன்றுமில்லை!

தோழர் கொளத்தூர் மணி கட்சி பா.ச.க. மதவாத பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து, அதை பரிசீலித்து ஏற்குமாறு மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்துவதை பாசிச எதிர்ப்பு உத்தியின் கீழ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தோழர் மணி பரிந்துரைப்பது முற்றிலும் முரண்பாடானது!

தோழர் கொளத்தூர் மணி - பேராசிரியர் சுப.வீ. ஆகிய இருவரும் ஈழவிடுதலைக்காக மிகக்கடுமையாகப் போராடியவர்கள்! மிக அதிகமாக ஈகம் செய்தவர்கள்! என்ன செய்வது? அவர்கள் தேர்ந்தெடுத்தப் பாதை அவர்களை இனத்துரோக முகாமுக்குள் கொண்டு போய் சேர்த்துவிட்டது!

நேற்று ஒருவன் புரட்சியாளனாக இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் புரட்சியாளனாக இருக்கிறான் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நடைமுறையில் இன்றும் புரட்சியாளனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும்” - மா சே துங்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2020 இதழில் வெளியான கட்டுரை

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.