ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மோடியின் உரை : சர்வாதிகாரத்திற்கான முன்னறிவிப்பு. - கி. வெங்கட்ராமன்


மோடியின் உரை : சர்வாதிகாரத்திற்கான முன்னறிவிப்பு.
கட்டுரை - கி. வெங்கட்ராமன்


கொரொனா பதற்றச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நரேந்திர மோடி ஆட்சி, சர்வாதிகாரத்தை நிலைநாட்டப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பாகத்தான் மே 12 - 2020 அன்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இருந்தது.

அந்த உரையில், இரண்டு முக்கிய செய்திகளை மோடி அறிவித்தார்.

ஓன்று, “கொரோனாவை முற்றிலும் உடனடியாகத் தடுத்திட முடியாது. அதோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும். அதேநேரம், கொரோனாவை எதிர்கொள்ள புதிய வடிவத்தில் 2020 மே 18-க்குப் பிறகும் முடக்கம் தொடரும்”. இன்னொன்று, கொரோனாவோடு நாட்டைக் கட்டிப் போட்டுவிட முடியாது. கொரோனாவுக்குப் பிந்தைய புதிய சூழலில், பொருளியல் நடவடிக்கைகளை - அரசியல் செயல்பாடுகளை தொடர வேண்டும்.

புதிய வடிவில் முடக்கம் தொடரும்போது, ஆறடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும், கூட்டம் கூடக் கூடாது என்கிறார். அதன் பொருள் என்ன? தனது ஆட்சியின் எந்த மக்கள் பகை நடவடிக்கைக்கும் எதிராக மக்கள் கூடக் கூடாது - ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்பதாகும்.

இது சர்வாதிகாரத்திற்கும், மாநில உரிமைப் பறிப்புக்குமான முன்னறிவிப்பாகும்! ஆனால், இதனை மறைத்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான உத்தியாக 20 இலட்சம் கோடி இடர் நீக்கத் தொகை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்கான சீர் திருத்த வழிமுறைஎன்பதாக, அவர் அறிவித்துள்ளதை கவனித்தால் இன்னும் தெளிவாகும்.

நிலம், உழைப்பாளர், சட்டம் மற்றும் நிதி வழங்கல் (Land, Labour, Law and Liquidity) ஆகியவை தொடர்பாக விரிவான மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக அவர் அறிவித்தார். நிலம் என்ற சொல்லால் அவர் குறிப்பிட விரும்புகிற உண்மையான செய்தி என்ன?

தற்சார்பான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு புதிய தொழிற்சாலைகள், கட்டமைப்புத் திட்டங்கள் வேண்டும். அது சுற்றுச்சூழலை அழிப்பதாக இருந்தாலும், தொடர வேண்டும். அதற்கேற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் எதுவும் இல்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறார் என்பதுதான்! அதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைகள் விதி 2006-இல் திருத்தங்கள் செய்வது என்ற பெயரால், முற்றிலுமாக அதனைக் கைவிடும் விதிகள் திருத்தத்தை மோடி அரசு ஏற்கெனவே முன்வைத்துவிட்டது.

புதிதாகக் கட்டப்படும் தொழிற்சாலைகள், உருவாக்கப்படும் திட்டங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள தொழிலகங்களின் - திட்டங்களின் விரிவாக்கத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை முன்வைக்க வேண்டிய தில்லை, மக்கள் கருத்து கேட்க வேண்டிய தில்லை, அதிகம் போனால் ஒரு தொகையை தண்டத் தொகையாகக் கட்டிவிட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தொடரலாம் என்று இந்த புதிய விதி அறிவித்திருக்கிறது.

இதைத்தான் நிலம்என்ற சொல்லின் மூலம் மோடி சொல்ல வருகிறார்.
கொரோனாவை ஒட்டி முதல் தவணை முடக்கத்தை மோடி அறிவித்த மறுநாளே சுற்றுச்சூழல் அமைச்சகம் காணொலிக் காட்சி மூலம், சுற்றுச்சூழலுக்கு எதிரான 194 திட்டங்களுக்கு இசைவு வழங்கி விட்டது. இது விதிகளுக்குப் புறம்பானது. சுற்றுச்சூழல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்கள் காணொலியின் மூலம் நடத்தக் கூடாது என்ற தடை விதி நடப்பில் உள்ளது. 

இவ்விதிகள் இருப்பதற்கான காரணம் - சுற்றுச் சூழலுக்கு எதிரான தொழிலகங்களோ, திட்டங்களோ வந்தால் அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் காணொலிக் காட்சி வழியாகத் தங்கள் கருத்தை முழுமையாகச் சொல்லிவிட முடியாது என்பதாலும், எளிய மக்கள் சார்பான சிறு அமைப்புகள் மற்றும் அறிவியலாளர்கள் காணொலிக் காட்சி மட்டும்தான் வாய்ப்பு என்றால் முழுமையாகத் தங்கள் கருத்துகளை சொல்ல முடியாது என்பதாலும் இத்தடை விதி இருக்கிறது. அவ்விதிகளை அப்படியே வைத்துக் கொண்டே, அவற்றை மீறுவது என்பதுதான் மோடியின் புதிய பாணி!

அடுத்து, உழைப்பாளர் (Labour) என்ற சொல்லால் அவர் தெரிவிக்க விரும்புவது - தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பதுதான்! இது ஏற்கெனவே தொடங்கி விட்டது. பா.ச.க. ஆளும் உத்தரப்பிரதேசம் தொடங்கி காங்கிரசு ஆளும் இராசஸ்தான் வரை பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலை சட்டம், தொழிற்தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் முழுமையாகவும் பகுதியாகவும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. கேள்விமுறையற்ற வேலை நேரம், குறைகூலி ஆகியவை தீவிரப்படப் போகின்றன.

மிக நீண்டகாலம் போராடி ஈகம் செய்து, தொழிலாளர்கள் பெற்ற கொஞ்சநஞ்ச உரிமைகளும் முற்றிலும் துடைத்தழிக்கப்படுகிறது. அதைத்தான் லேபர்என்ற தனது அறிவிப்பின் மூலம் மோடி சொல்ல வருகிறார்.

அடுத்து, சட்டம் (Law) என்பதன் மூலம், சட்டங்கள் குறைந்த இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று அறிவிக்கிறார். நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பான கட்டுப்பாடுகள் ஏதுமற்ற நாடாக இந்தியாவை மாற்றுவது என்பதுதான் அது. இத்திசையில், தொழில் தொடங்கு வதை எளிதாக்கும் (Ease of doing Business) என்ற பெயரால், கடந்த சில ஆண்டுகளாகவே மோடி ஆட்சி செயல்படுவதை அறிவோம்.

நிலம், உழைப்பாளர், சட்டம் ஆகியவை குறித்து மோடி அறிவித்திருப்பதை இணைத்துப் புரிந்து கொண் டால், தற்சார்பான இந்தியா என அவர் எதைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பே மேக் இன் இந்தியாஎன்ற முழக்கத்தின் வழியாக மோடி அதைத் தொடங்கி விட்டார். அதற்கு முன்னால் இருந்த இந்தியத் தயாரிப்பு” (Made in India) என்பது வேறு - இது இந்தியாவில் தயாரிப்பு! அதாவது, உலகம் முழுவதுமுள்ள பெருங்குழுமங்களுக்குக் குறைகூலிக்கு ஆள் வழங்குகிற - உழைப்பு மையமாக (Sweatshop) இந்தியாவை மாற்றுவது என்று பொருள்! அதே உரையில், மக்கள் தொகை உள்ளடக்கம் (Demography) என்று மோடி கூறியதை கவனித்தால், இது இன்னும் தெளிவாகும்.

இந்தியத் தொழில்நுட்பத்தையும், இந்திய உழைப்பையும், இந்தியச் சந்தையையும் முதன்மையாகச் சார்ந்திருந்தால் அதுதான் உண்மையான இந்தியத் தற்சார்பு”! ஆனால், தற்சார்பு என்ற சொல்லின் பொருளையே தலைகீழாக மாற்றி, பிறநாட்டு பெருங்குழுமங்களுக்கு உழைத்துக் கொடுக்கும் வெளிப்பணியையே (Outsourcing) தற்சார்பு என முற்றிலும் முரணான பொருளில் மோடி குறிப்பிடுகிறார். ஆரியத்துவபாணியே அதுதான்! இறைப்பற்று, ஆன்மிகம், ஒழுக்கம் என உச்சரித்துக் கொண்டே, அவை ஒவ்வொன்றுக்கும் எதிராக நடந்து கொள்வது என்பதுதான் அது!
சனநாயகம் என உச்சரித்துக் கொண்டே, சனநாயகப் பதாகையைப் பிடித்துக் கொண்டே, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் மோடி இறங்கியிருக்கிறார்.

புதிய வடிவில் கொரோனா முடக்கம் தொடரும். எனது அடக்குமுறை தொடரும். ஆனால், கூட்டம் கூடாதீர்கள். எதிர்ப்புக் காட்டாதீர்கள்என்பதுதான் மோடி கூறுவதின் உண்மையான பொருள்!

இந்தக் கொரோனா தொற்று குறித்த அறிவிப்புகளிலேயே மிகப்பெரும்பாலான அறிவிப்புகள், இந்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்திலிருந்து வருவதில்லை. பெரும்பாலான அறிவிக்கைகள் அமித்சாவின் உள்துறை அமைச்சகத்தின் வழியாகத்தான் வருகிறது. நலவாழ்வு தொடர்பான சிக்கலை சட்டம் ஒழுங்குச் சிக்கலாக மோடி அரசு கையாள்வதன் உண்மையான நோக்கம், தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதுதான்!

தனது தலைமையிலான ஒற்றை ஆட்சியை நிறுவு வதில், மிக வேகமாக நடைபோட்டு வருகிறார். கூட்டுறவுக் கூட்டாட்சி (Cooperative Federalism) என்று வாயால் உச்சரித்துக் கொண்டே, மாநில உரிமைகளை முற்றிலும் பறித்து, கூட்டாட்சியைக் கவிழ்த்து ஒற்றையாட்சியாய் மாற்றுவதை நடைமுறையில் செய்து வருகிறார்.

தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டிட இந்திரா காந்தி, 1975இல் அவசரநிலை அறிவித்தபோது, அரசமைப்புச் சட்டத்தில் அதற்குரிய பிரிவுகளைப் பயன்படுத்தியே அவசரநிலையை அறிவித்தார்; சட்டத்தின் ஆட்சியை முடக்கினார். நரேந்திர மோடியோ, அதற்கு மேல் ஒருபடி சென்று, அரசமைப்புச் சட்டத்தையோ, பிற சட்டங்களையோ திருத்தாமலும் மாற்றாமலும் அப்படியே வைத்துக் கொண்டு அறிவிப்புகளின் வழியாகவும், ஆணைகளின் வழியாகவும் சில விதித்திருத்தங்கள் வழியாகவும் சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் செய்கிறார்.

எடுத்துக்காட்டாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் நீராற்றல் துறையின் கீழ்ப்படிந்த நிறுவனமாக பணி விதிகள் திருத்தத்தின் வழியாகவே அறிவித்துச் சென்றார். ஆறுகள், நீர் ஆகியவை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்று சொல்லும் அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை. தண்ணீர் பகர்வு தகராறு குறித்த 1956 சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை! காவிரி மேலாண்மை ஆணையத்தை அறிவித்த அரசிதழ் அறிவிக்கையிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவற்றை அப்படியே வைத்துக் கொண்டு, பணிப் பகிர்வு விதிகளில் திருத்தம் என்ற பெயரால் - காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தையும், தற்சார்பையும் பறித்து, தனது கையடக்கமான நிறுவனமாக மாற்றிக் கொண்டார். அதன் மூலம், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை முற்றிலும் மறுக்கும் அநீதியில் இறங்கியிருக்கிறார்.

அதேபோல், மாநிலங்களின் மின்சார அதிகாரத்தையும் தமிழ்நாட்டு வேளாண்மைக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தையும் பறிக்கும் வகையிலும், மின்சார வழங்கலை முற்றிலும் தனியார்மயமாக்கி கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும் முறையிலும் மின்சார விதிகளில் திருத்தங்கள் செய்து அறிவித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்புக்கு எதிராக கட்டிப்புரண்டு கொண்டிருக்கிற மாநில அரசுகளுக்கு, குறிப்பாக - தமிழ்நாட்டுக்கு எந்த இடர் நீக்க நிதியையும் வழங்காமல் அப்பட்டமான இனப்பாகுபாட்டை மோடி அரசு செயல்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 12,263 கோடி ரூபாய் கூட வழங்கவில்லை!

ஆனால், ஆண்டுதோறும் ஏறத்தாழ் 3 இலட்சம் கோடி ரூபாய் வரி வகையிலும், பிற வகையிலும் இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து அள்ளிச் செல்கிறது.

அடுத்து, நிதி வழங்கல் (Liquidity) என்ற மோடி அறிவிப்பின் பின்னணியை உற்று நோக்கினால் அவரது உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே, மோடி ஆட்சிக்கு நெருக்கமான ஒட்டுறவு முதலாளிகள் (Crony Capitalists) அதானி, அம்பானி, அகர்வால், டாட்டா போன்றவர்கள் ஏறத்தாழ 8 இலட்சம் கோடி வரித் தள்ளுபடியும், வாராக் கடன் தள்ளுபடியும் பெற்று விட்டார்கள். அதையே இன்னும் வேகமாக செய்வதைத்தான் Liquidity என்பதன் மூலமாக மோடி சொல்ல வருகிறார்.

அவரது ஆணைக்கு இணங்க அடுத்தடுத்த நாட்களில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த வற்றை கவனித்தாலே, இதை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

சட்டத்தை வைத்துக் கொண்டே, அதில் எந்த மாற்றமும் செய்யாமல் சட்டத்தை மீறுகிறாரோ, அதேபோலவே புதிய உதவி அறிவிப்புஎன்ற பெயரால் பழைய பட்ஜெட் கணக்குகளையே இப்போது புதிதாக அறிவிப்பது போல் மக்களிடம் தெரிவிக்கும் அறம் கொன்ற நெஞ்சழுத்தம் ஆரியத்துவ மோடியைத் தவிர வேறு எவருக்கும் இருக்க முடியாது!

நிர்மலா சீத்தாராமன் அறிவித்த 20 இலட்சம் கோடி இடர் நீக்க அறிவிப்பில், புதிதாக எதுவுமில்லை என்பதை பல்வேறு பொருளியல் ஆய்வாளர்களும், ஆய்வு நிறுவனங்களும் தெளிவுபடுத்திவிட்டன. அதிகம் போனால் 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்தான் புதிய இடர் நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றவையெல்லாம், ஏற்கெனவே, நிதிநிலை அறிக்கை யிலும், பல்வேறு அறிவிப்புகளிலும் வெளியானவைதான்.

ஆனால், நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் விவாதித்து இறுதி செய்து அறிவிக்க வேண்டிய பல கொள்கை அறிவிப்புகளை, அதுவும் கொரோனா சிக்கலுக்குத் தொடர்பில்லாத கொள்கை அறிவிப்புகளை நிர்மலா சீத்தாரமன் வழியாக மோடி அறிவித்தார்.

விமானம், விமான நிலையம், தொடர்வண்டித்துறை, வங்கிகள், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கும், கொரோனா தொடர்பான 20 இலட்சம் கோடி ரூபாய் திட்டத்திற்கும் என்ன தொடர்பு? இந்த முடக்கக் காலத்தை தனது தன்னிச்சையான அறிவிப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார், மோடி!

பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி மட்டுமல்ல, படைப்பிரிவே தனியார் வசமாக்கப்படப் போகிறது. படையாட்களில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேரைக் குறைப்பது என முடிவெடுத்திருக்கிற இந்தியப் பாதுகாப்புத்துறை, போர்புரிவது உள்ளிட்ட அந்தப் படைப்பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்தக் கூலிக்கு படை வீரர்களை அமர்த்துவது என்ற செயல் பாட்டில் இறங்கிவிட்டது.

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றத் துணைக் குழுக்களைக் கூட்டாமலேயே இவ்வளவு பெரிய முடிவுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்தியப்படை தனியார்மயமாவது மட்டுமின்றி, ஆரியமயமாகப்போகிறது. மோடிக்கு நெருக்கமான யோகா குரு இராம்தேவ் நடத்தும் பதஞ்சலி பீட அறக்கட்டளை பராக்கிரம சுரக்ஷா பிரைவேட் லிமிடெட்என்ற பெயரால், ஆள் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி விட்டது.

படிப்பறிவு இல்லாதவர்களிலிருந்து, பல்வேறு கல்வித் தகுதி பெற்றவர்கள் வரை அந்நிறுவனத்திடம் பயிற்சி பெறுவார்கள் என்றும், அவர்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து (செக்கியூரிட்டி) இராணுவப் படைப்பிரிவில் பணியாற்று வது வரை தகுதிப்படுத்தப் படுவார்கள் என்று இராம்தேவ் அறிவித்திருக்கிறார்.

மறுபுறம், இந்திய இராணுவத் தலைமையகம் மூன்றாண்டுகளுக்கான தற்காலிகப் படைப்பணி (Tour   to Job) என்று அறிவித்திருக்கிறது. இவர்கள் அத்தக்கூலிப் படையாட்கள். இவர்கள் பணி முடிந்த பிறகு, ஓய்வூதியமோ, பிறசலுகைகளோகிடையாது. ஆனால், அரசுத்துறைப் பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, இராம்தேவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அணியப்படுத்தி அனுப்பும் ஆரியத்துவ அத்தக்கூலி படையாட்களால் இந்திய இராணுவம் நிரப்பப்படும் என்று பொருள்!

இவர்களில் பலர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரால், மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவார்கள்.

தோல் இருக்க சுளை விழுங்குவது போல், அரசமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, சட்டத்தின் ஆட்சியற்ற இந்தியாவை உருவாக்க நினைக்கிறார் நரேந்திர மோடி. உரிமை ஏதுமற்ற பொம்மை அமைப்புகளாக மாநில அரசுகளை தாழ்த்த விரும்புகிறார் மோடி. இதை அனுமதிக்கப் போகிறோமா என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வி!


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2020 இதழில் வெளியான கட்டுரை

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.