கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!
கரூர் பசுபதீசுவரர் கோயில்
குடமுழுக்கைத் தமிழ்வழியில்
நடத்த வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!
கரூர் பசுபதீசுவரர் கோயில் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.
அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அர்ச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அர்ச்சகர்களுக்கு தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.
எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment