தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான
அனைத்திந்திய வேலை நிறுத்தம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
அனைத்திந்திய வேலை நிறுத்தம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நரேந்திர மோடி அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை எதிர்த்தும், உழவர் பகைச் சட்டங்களை எதிர்த்தும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 26.11.2020 அன்று நடைபெறும் அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. தமிழகத் தொழிற்சங்க முன்னணி இப்போராட்டத்தில் பங்கேற்கிறது!
நீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில அரைகுறை உரிமைகளை வழங்கிவந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளுக்குள் கொண்டு வருவது என்ற பெயரால் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பல்வேறு விதிகளை, சூதான முறையில் கைவிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மோடி அரசு பிறப்பித்திருக்கிறது.
இதுபோன்ற அடிப்படை மாறுதல்கள் செய்வதற்கு முன்னால் தொழிலாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகள், அரசு ஆகிய முத்தரப்பினர் கூடி முடிவு செய்வதுதான் இதுவரையிலும் பழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறான கூட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறாமலும், இந்த சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்தபோது, அதுகுறித்து தொழிற்சங்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அளித்த பல்வேறு கருத்துகளை முற்றிலும் புறக்கணித்தும், நாடாளுமன்றத்திலும் முறையான விவாதமின்றியும் அவசர அவசரமாக இச்சட்டத் தொகுப்புகளை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
நரேந்திர மோடி அரசு அதனுடைய புதிய உத்தியை, அதாவது அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதை அப்பட்டமாக மீறுவது என்ற மோசடியான உத்தியை இதிலும் செயல்படுத்தியிருக்கிறது.
தொழிலாளர் (Labour) என்பது அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்கும், தேசிய இன மாநில அரசுக்கும் இணை அதிகாரமுள்ள பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால், இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிற சட்டத் தொகுப்புகள் பெரும்பாலான இடங்களில் “தொடர்புடைய அரசு” என்பதை இந்திய அரசு என்பதாகவே குறிப்பிடுகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருந்த அரைகுறை அதிகாரங்களும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டன.
தொழிற்சாலை சட்டம் எட்டுமணி நேர வேலையை உறுதி செய்திருந்த நிலையை புதிய சட்டம் முற்றிலும் மாற்றுகிறது. பத்து மணி நேர வேலையை இயல்பாக்குவது, நிர்வாகங்கள் விரும்பினால் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பது தொழிலாளர் நிலையை 19ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துச் செல்கிறது.
இன்று பெரும்பாலான தொழிலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பரவலாக இருக்கிறது. இந்த முறையில் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமோ, மற்ற பலன்களோ தரத் தவறினால் அதற்கான இறுதிப் பொறுப்பு முதன்மை நிர்வாகத்திற்கு (Principal Employer) இருந்தது.
ஆனால், மோடி அரசின் புதிய சட்டம் இந்த சட்டப் பாதுகாப்பை நீக்கி விட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஊதியத்தையோ வருங்கால வைப்பு நிதியையோ பணிக்கொடையையோ (கிராஜூட்டி) கொடுக்காமல் போனாலோ, நிலுவை வைத்தாலோ இனி முதன்மை நிர்வாகத்திடம் இதைக் கோர முடியாது.
“வரையறுத்த காலத்திற்கான பணி“ (Fixed Term Employment) என்ற பெயரால் எல்லா வேலைகளுக்கும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே பணிக்காலமுள்ள தொழிலாளர்களை பரவலாக்குவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. அடிபட்டால் முதலுதவி செய்வது, எந்திரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளி, உணவு இடைவேளை இவற்றை வரையறுக்கும் எல்லா நல விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட எந்தப் பாதுகாப்புமற்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.
அமர்த்து துரத்து என்பது எல்லா நிலையிலும் நிலைப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியிலிருந்து பல தொழில்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு விட்டது.
மறுபுறம், 100 தொழிலாளர்களும் அதற்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுவரை பொருந்தி வந்த தொழில் உறவுச் சட்டங்கள், இனி 300 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்று மாற்றம் செய்திருப்பதன் வழியாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்படாத காட்டாட்சியில் விடப்படுகிறது.
இதுவரை ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) என்பது சட்டப் பாதுகாப்பையாவது வழங்கி வந்தது. அதையும் மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழ் அடிமட்ட ஊதியம் (Floor Wages) என்ற புதிய வகையினத்தை நரேந்திர மோடியின் சட்டம் புகுத்துகிறது.
தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை கடுமையான கட்டுத்திட்டங்களுக்கு உள்ளாக்கி நடைமுறையில் தொழிற்சங்கம் சேரும் உரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தொழிலகத்திற்குள் தீர்க்க முடியாத சிக்கல்களை சமரசப் பேச்சின் மூலம் தீர்ப்பதற்கான தொழிலாளர் அதிகாரிகள் பொறியமைவு ஏற்கெனவே எந்த சட்ட வலுவும் இல்லாமல் இருக்கிறது. இப்போது, அது இன்னும் மேலும் சிதைக்கப்பட்டு தொழில் நிர்வாகங்களை எல்லா விதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்து விடுகிறது.
கட்டடத் தொழிலாளர்கள், தானி ஓட்டுநர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர் தொடர்பாக இருந்துவந்த நலவாரியங்கள் பெரும்பாலானவை செயலற்றதாக மாற்றப்படுகின்றன.
தொழிலாளர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் என்றால், மறுபுறம் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் நோக்கோடு ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், விளைபொருள் விலைபெறும் சட்டம், தனியார் கொள்முதலுக்கு வழிவகுக்கும் சட்டம் போன்றவற்றின் மூலமாக பெருந்தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது.
இவை அனைத்தையும் கண்டித்து உழைப்பாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்திந்திய தொழிற்சங்க அமைப்புகளும், தற்சார்பான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வரும் 26.11.2020 இந்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இந்தப் பொதுவேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி பங்கேற்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளர்களும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiya
Leave a Comment