வர்ணாசிரமப் புது வடிவமைப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
வர்ணாசிரமப் புது வடிவமைப்பில்
புதிய வேளாண் சட்டங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
மோகன் பகவத் – மோடி குழுவினர் கூறும் இந்து ராஷ்டிரம் (இந்துத் தேசியம்) என்பது, வர்ணாசிரமத் தேசியம்தான்!
இந்த உண்மையை இப்போது இவர்கள் கொண்டு வந்துள்ள பெருங்குழும வேளாண் வேட்டைச் சட்டங்கள் மூன்றும் தெளிவாகத் தெரிவித்துவிட்டன.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆரியர் வகுத்த நான்கு வர்ணங்கள், பஞ்சமர்கள் என்ற பிரிவும் சூத்திரர்களுக்குள் அடக்கம். இந்த நால் வருணத்தைத் தற்காலத்திற்கேற்ப மூன்று வர்ணங்களாகச் சுருக்கிக் கொண்டனர் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பண்டிதர்கள்! பிராமணர் – வைசியர் – சூத்திரர் என்று வரையறுத்துக் கொண்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தற்காலப் பிராமணர்கள் தங்களைச் சத்திரியர்களாகவும் புத்துருவாக்கம் செய்து கொண்டனர். மதம் – வழிபாடு – பழக்கவழக்கப் பண்பாடு முதலிய ஆன்மிகத் தலைமை – ஆட்சித் தலைமை இரண்டையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; தொழில், வணிகம் முதலியவற்றை ஆரிய வைசியர்களின் முற்றுரிமை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
சத்திரியர்கள் – சூத்திரர்கள் – பஞ்சமர்கள் ஆகியோர் தற்காலத்திற்பே மூளை உழைப்பாளிகளாகவும், உடல் உழைப்பாளிகளாகவும் ஆரிய பிராமண – ஆரிய வைசிய வகுப்பாரின் தலைமைக்குக் கீழ் செயல்பட வேண்டும்.
முசுலிம்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையாய் உள்ள மதத்தினர் ஆரிய பிராமண – ஆரிய வைசிய – ஆரிய இந்துராஷ்டிரத் தலைமைக்குக் கீழ்ப்பட்ட ஒட்டுக் குடிகளாக வாழ வேண்டும் என்பவையே இந்துத்துவா எனப்படும் ஆரியத்துவாவின் வேலைத் திட்டம்!
தமிழ்நாட்டில், பிராமணரல்லாத அனைவரும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்பதே ஆரியத்தின் வரையறுப்பு! பேரரசன் இராசராசன், இராசேந்திரசோழன் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரையறுப்பில் சூத்திர அரசர்களே! தமிழ்நாட்டு வணிகர்கள், நிலவுடைமையாளர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்றே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் குறிப்பிட்டார்கள்! இந்த சூத்திரர்களுக்கு எதிராகத் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள்.
மனுதர்மத்தில், மனு வரையறுத்த நால் வருணம் நான்கும் ஆரிய வர்ணங்களே! பிராமண – சத்திரிய – வைசியர்களுக்கிடையே கலப்பு மணம் செய்து கொண்டு, ஆரிய ஆச்சார அனுட்டானங்களைக் கடைபிடிக்காமல் சீரழிந்தவர்கள் சூத்திரர்கள் என்றார் மனு. இந்த நால் வருண ஆரியர்கள் விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரிய வர்த்தம் என்ற தேசத்தில் வாழ்பவர்கள் என்றார் மனு. விந்திய மலைக்குத் தெற்கே உள்ளவை மிலேச்ச தேசங்கள் என்றார். இந்த மனுதர்ம நூல் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு இன்றும் புனித நூல்!
பிராமணர்களைச் சத்திரியர்களாகவும், சத்திரியர்களை சூத்திரர்களாகவும் மறுகட்டமைப்புச் செய்யும் தற்கால வர்ணாசிரம தருமத்தை முழுமைப்படுத்துவதில் தடங்கல்கள் இருக்கின்றன. அனைவர்க்கும் வாக்குரிமை, அனைவர்க்கும் சொத்துரிமை போன்றவை ஆரிய பிராமண – வைசிய மேலாதிக்கத்திற்குத் தடங்கல்களாக இருக்கின்றன.
இவ்விரு தடங்கல்களைக் களைய – இந்துத்துவா – இந்தியத்தேசியம் என்ற இரு புனைவுகளை ஆரியம் உருவாக்கியது. இந்துத்துவா அடிப்படையிலான இந்தியத்தேசியம் செல்வாக்குப் பெற்றால், இயல்பாக ஆரிய பிராமண – ஆரிய வைசிய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் உளவியலை அனைத்திந்திய அளவில் மக்களிடம் வரவழைத்துவிடலாம் என்பது ஆரியத்தின் தந்திரம்!
பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டக் காலத்திலேயே – காங்கிரசுக் கட்சி – என்ற அரசியல் இயக்கம் தொடங்கிய காலத்திலேயே ஆரியம் தனது ஆதிக்கத்திற்கேற்ப விடுதலை இயக்கத்தை வடிவமைத்தது.
பிரித்தானியப் பீரங்கிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு “இந்தியா” என்று ஆங்கிலேயர் பெயர் கொடுத்தனர். அதே கட்டமைப்பிற்கு ஆரியர்கள் “பாரதம்” என்று புதிய பெயரை சூட்டிக் கொண்டனர். பிராமண ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வேத – உபநிடதப் பழம்பெருமைகளைப் பேசிக் கொண்டு, சமற்கிருத மேன்மை – இந்தியாவின் “பொதுமொழி” இந்தி என்ற திட்டங்களை முன்வைத்து இந்திய விடுதலை இயக்கத்தைப் புனைந்து கொண்டனர்.
“பாரதமாதா பசனை” இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முழக்கமானது. இளம்பருவத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரனாகச் செயல்பட்டு, சிறைப்பட்டபின் வெள்ளை ஏகாதிபத்திய தாசனாகி, மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையான சாவர்க்கர் 1923-இல் வீட்டில் இருந்து கொண்டு, “இந்துத்துவா” கோட்பாட்டை உருவாக்கினார். மராட்டிய சித்பவன பிராமணரான சாவர்க்கர் ஆரிய அரசியல் தலைமைக்கு – கருத்து வடிவம் கொடுத்தார்.
மக்கள் தொகையில் மிகமிகச் சிறுபான்மையாய் உள்ள பிராமணர்கள் மிகமிகப் பெரும்பான்மையாய் உள்ள பிராமணர் அல்லாத வெகுமக்களைத் தங்கள் தலைமையின் கீழ், தங்களுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகத் திரட்டிக் கொள்ள, கடவுள் பக்தியையும் – இந்து மதத்தையும் சூழ்ச்சியாகப் பயன்படுத்திக் கொண்டனர்; இன்றும் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் இருபதாம் நூற்றாண்டில், புதிதாகப் பக்தியைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த வந்துள்ளார்கள் என்று கருதக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர்கள் கடவுளைப் பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிட்டார்கள்; அவர்களுக்கு அன்றும் இன்றும் கடவுள் அச்சம் இல்லை. அவர்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருளாகவே கடவுளைக் கருதுகிறார்கள். வர்ணாசிரம தர்மம், சனாதன தர்மம் என்றெல்லாம் – அதற்கு சூதாகப் பெயர் சூட்டினார்கள்.
அனைவர்க்கும் வாக்குரிமை இருந்தாலும் பெரும்பான்மையாக உள்ள இந்துமத மக்களிடம் இசுலாமிய கிறித்துவ மதங்களின் மீது வெறுப்புணர்வையும் – பகையுணர்வையும் விதைத்து, இந்துமத பக்தியில் தீவிரவாதத்தை விதைத்து, தற்கால சனநாயகத்திலும் அரசியல் – அரசு ஆதிக்கத்தைத் தாங்கள் பெற முடியும் என்பது அவர்களது எண்ணம்!
காங்கிரசுக் கட்சி, இந்துத்துவாத் தலைமை கொண்ட கட்சிதான் என்றாலும், அது மிதவாதக் கட்சி; அதைவிடத் தீவிர இந்துத்துவாக் கட்சி தேவை என்று கருதினார்கள். சனசங்கம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள் (1951). அதுவே இப்போதுள்ள பாரதிய சனதாக் கட்சி!
தீவிரவாத இந்துத்துவாக் கட்சியான பாரதிய சனதாக் கட்சி, தேர்தல் வழியில், இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியபோது (2019), பா.ச.க.விற்கு மக்களவையில் தனிப்பெரும்பான்மை கிடைத்தது.
ஆனாலும் தொடர்ந்து இந்துத்துவா தீவிரவாதம் பா.ச.க.வுக்கு வெற்றி தரும் என்பது உறுதி இல்லை. இந்துமதம் பன்முகத்தன்மை கொண்டது; பல்வேறு தெய்வங்கள்; பல்வேறு வழிபாட்டு முறைகள் கொண்டது.
இவற்றை ஒருமைப்படுத்துவதற்காக “ஜெய் ஸ்ரீராம்; ஜெய் ஸ்ரீஹனுமான்” முழக்கத்தை ஆரியம் அணியப்படுத்தியது. அம்முழக்கம் வடநாட்டில் எடுபட்டதுபோல் தென்னாட்டில் எடுபடவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் எடுபடவில்லை. இந்து மதத்தின் பன்மைத்தன்மை பா.ச.க.வின் பக்தி வழிப் பாசிசத்திற்கு இடையூறாக இருக்கின்றது.
படையைக் கொண்டு பாசிசத்தை நிறுவிவிடலாம் என்றால், இந்தியாவில் வரலாற்றுப் பெருமையுடன் பல்வேறு இனங்கள் – மொழிகள் இருப்பது அடுத்த பெரும் தடையாக உள்ளது. எவ்வளவுதான் திணித்தாலும், இந்தியையும் சமற்கிருதத்தையும் ஏற்றுக் கொண்டு, தங்கள் தாய்மொழிகளைக் கைவிடும் நிலை இந்தியாவில் இல்லை. தங்கள் தங்கள் இனப்பெருமிதங்களைக் கைவிடும் நிலையும் இல்லை.
ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே மதம், பாரதீயன் என்ற ஒரே இனம், ஒரே தலைமை – என்ற ஆரிய பிராமணர்கள் மற்றும் வைசியர்களின் இலட்சியம் நிறைவேறுவதில் பெருந்தடங்கலாக இருப்பவை பல்வேறு இனங்கள் – பல்வேறு மொழிகள்!
இந்த இனங்களும் மொழிகளும் தங்களின் ஆணிவேரைக் கொண்டுள்ள இடங்கள் கிராமங்கள்! கிராமங்களின் அடித்தளம் உழவர்கள் – உழவுத் தொழிலாளர்கள். இவர்களின் தாய்மடி வேளாண் நிலங்கள்!
இவர்களுக்கு மண்ணோடு பிணைக்கப்பட்ட வாழ்வு! மரபுப் பெருமை, வரலாற்றுக் பெருமை, தாய்மொழிப் பிணைப்பு, சமூகப் பாசம் அனைத்தும் இவர்களுக்கு அதிகம். இவற்றை முன்வைத்தும், இவற்றிற்கு இடையே எழும் சமூகச் சிக்கல்களை முன்வைத்தும் மாநில அளவில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இவை பா.ச.க. பாசிசத்திற்கு அறைகூவலாக (சவாலாக) உள்ளன. இந்த மாநிலக் கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி ஆரியத்துவ பா.ச.க.வுக்கு இருக்கிறது.
தொழில் மற்றும் வணிகத்துறையை எடுத்துக் கொண்டால், மாநிலங்களில் சிறு, நடுத்தர முதலாளிகளும் வணிகர்களும் ஏராளம்! வடநாட்டு ஆரிய வைசியப் பெரு வணிகர்கள் மற்றும் பெரு முதலாளிகளுடன் போட்டி போடும் அளவிற்கு சிலர் வளர்ந்திருக்கிறார்கள்.
மாநிலங்களைச் சேர்ந்த இந்த முதலாளிகளும், வணிகர்களும் அனைத்திந்திய அளவிலும் ஏகபோகம் செலுத்தும் ஆரிய வைசியப் பெருமுதலாளிகளுககு இடையூறாக உள்ளனர். இந்த மாநில முதலாளிகளையும் வணிகர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்!
மாநில அரசியல் கட்சிகள், மாநில முதலாளிகள், மாநில வணிகர்கள் ஆகியோரை அப்புறப்படுத்த வேண்டுமானால் அதற்கான முதல் தேவை கிராமப்புறங்களின் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும்.
கிராமப்புறங்களின் கட்டமைப்பை அடியோடு மாற்ற வேண்டுமானால், உழவர்களையும் உழவுத் தொழிலாளர்களையும் வேளாண் நிலங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதை நேரடியாக, உடனடியாகச் செய்தால் பெரும்புரட்சி வெடிக்கும்!
இந்த வெளியேற்றத்திற்கான முதல்கட்ட ஏற்பாடுதான் பெரும்பெரும் ஏகபோகக் குழுமங்கள் உருவாக்கும் ஒப்பந்தப் பண்ணைகள்; அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவை மனித குலத்திற்கு இன்றியமையாப் பொருட்கள் இல்லை என்ற பட்டியல் நீக்கம்! இவற்றை ஏகபோக நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திரட்டி பெரும் பெரும் கிடங்குகளில் பதுக்கிக் கொள்ளலாம். அது பதுக்கல் அல்ல; சேமிப்பு என்ற சட்ட ஏற்பாடுகள்!
நெல், கோதுமை, கரும்பு போன்ற விளைபொருட்களுக்கு இனிமேல் அரசின் குறைந்த அளவு ஆதரவு விலை இல்லை; இப்போதைக்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆதரவு விலையை அறிவித்துவிட்டுப் பின்னர் நிறுத்திக் கொள்வார்கள்.
அதேபோல் நெல், கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் நேரடிக் கொள்முதலும் நிறுத்தப்படும். அதானி, அம்பானி போன்ற பெரும்பெரும் ஆரிய வைசிய முதலாளிகள் வேளாண் ஒப்பந்தப் பண்ணை நடத்துவார்கள்; வேளாண் விளைபொருள் வணிகமும் நடத்துவார்கள்.
உணவுப் பொருட்களை சேமிப்பதற்கும், இடப்பெயர்வு செய்வதற்கும் கௌதம் அதானி “அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்” (அதானி வேளாண் சரக்குச் சேமிப்பு நிறுவனம்) வைத்துள்ளார்.
இந்த அதானியின் நிறுவனங்கள் இந்தியாவில் இப்போது 22 இடங்களில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பானி பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்ட விற்பனையில் இறங்கியுள்ளார்.
அதானி, அம்பானி, மார்வாரி மற்றும் குசராத்தி சேட்டுகள் ஆரிய வைசியர்கள்! ஏற்கெனவே இவர்கள் இந்தியா முழுவதும் தொழிலிலும் வணிகத்திலும் பேராதிக்கம் செலுத்துகிறார்கள். தலைமை அமைச்சர் மோடியும் அவர்களைச் சேர்ந்தவரே!
ஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் ஆரியத்தின் வர்ணாசிரமக் கொள்கைக்கேற்ற பொருளியல் கொள்கையைக் கடைபிடிக்கின்றன. வேளாண்மை, தொழிற்சாலைகள், வணிகம் முதலியவற்றில் அங்கெல்லாம் ஏகபோகப் பெருங்குழுமங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறு ஆதிக்கம் செலுத்துவோரின் மக்கள் தொகை விகிதம் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைவு! சொந்த நிலமற்றோர், மிகமிக அதிகம்!
அந்நாடுகளில் பண்ணை முதலாளிகள் குடும்பத்தினர், அப்பண்ணைகளில் வேலை செய்வோர் குடும்பத்தினர் ஆகியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டிற்குள்தான் இருக்கும் என்கின்றனர். எல்லாம் எந்திரமயம்!
அவை போன்ற பெருங்குழுமங்கள் இந்தியாவில் 5,000 ஏக்கர் – 10,000 ஏக்கர் பண்ணைகள், 50 – 100 கிராமங்களை ஒரு மண்டலமாக்கி அமைப்பார்கள். அவை ஒப்பந்தப் பண்ணைகளாக முதலில் வரும். தனியார் ஏகபோகப் பண்ணையிடம் ஒப்பந்தம் செய்து, சாகுபடி செய்த உழவர்கள் காலப்போக்கில் நொடித்துப் போவர். பண்ணையிடம் தங்கள் நிலத்தை விற்று விடுவார்கள். நிலத்தைவிட்டும், சொந்த ஊரை விட்டும் வெளியேறுவார்கள். இவ்வாறு வெளியேறுவோர் உளவியலில் தற்சார்பும், தன் இனப் பெருமிதமும், தன் மொழிப் பற்றும் சிதைந்து போகும்.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகள், உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு வழிகாட்டும் நாடுகள் என்ற படிமம் இந்தியாவில் ஏற்கெனவே “நன்கு” கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, வட அமெரிக்கா பாணியில், ஐரோப்பிய பாணியில் வேளாண் பண்ணைகள் வந்தால் நல்லதுதானே என்று வரவேற்க ஆரியப் பிராமண – வைசியரல்லாத படிப்பாளிகள் இங்கு பலர் இருக்கிறார்கள்.
கிராமங்கள் வடநாட்டு வைசிய முதலாளிகளின் பண்ணைகளின் காலனிகளாக மாறும்! பண்ணைகளில் தானியங்கி எந்திரங்கள் மூலம் வேளாண்மை நடைபெறும். தொழிலாளிகள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். தேவைப்படும் தொழிலாளிகளையும் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்வார்கள். பண்ணை அதிகாரிகள் – ஊழியர்கள் தமிழ் தெரியாத வடநாட்டினராக இருப்பர். ஒப்பந்தப் பண்ணையில் சேர்ந்து வேளாண்மை செய்யும் உழவர்கள், தங்கள் நிலங்களில் வேலை செய்வதற்குரிய தொழிலாளிகளை பண்ணை நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. அந்தத் தொழிலாளிகள் “தொழில் திறன்மிக்கவர்கள்” என்று அந்த விதி கூறுகிறது.
வடநாட்டிலோ நிலத்தையும் உழவுத் தொழிலையும் இழந்த மக்கள் பிழைப்புத் தேடி அயல் மாநிலங்களுக்கு அதிகமாகப் புலம் பெயர்வார்கள்.
வடமாநிலங்களிலிருந்து புலம் பெயர்வோர் தங்கள் தாயகத்தை – இனமரபை இழப்பர். அவர்கள் தமிழ்நாட்டில் குவிவதால், தமிழ்நாடு தனது இனக்கட்டுக்கோப்பையும், தமிழ் மொழி ஆளுமையையும் இழக்கும்.
அடுத்த இனத்தை வேட்டையாடுவது, அடிமைகளை வைத்துக் கொள்வது, தன்னல நுகர்வு வெறிக்கு மற்ற இனத்தாரைப் பலியிடுவது, மிகை நுகர்வு போன்ற “பண்புகள்” ஐரோப்பியர்களுக்கும் இந்திய ஆரியர்களுக்கும் பொதுவானவை! எனவே, இருதரப்பாரின் பொருளியல் கொள்கை பொருந்திப் போவதில் வியப்பில்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வினரின் புதிய வர்ணாசிரம – ஆரிய பிராமண – ஆரிய வைசிய வேட்டைக்கு எதிராக பஞ்சாப் தொடங்கி வடநாட்டிலேயே மாபெரும் மக்கள் எழுச்சி கிளம்பியதுதான் மோகன் பகவத் – மோடி குழுவினர்க்குப் பேரிடி விழுந்ததுபோல் இருக்கிறது.
பஞ்சாப் உழவர்களை உசுப்பிவிட்டது – அவர்களது வீரமரபுமிக்க – சீக்கிய இனம் குறித்த பெருமித உளவியலே! தன்மான உணர்வே! உலகம் முழுவதும் சீக்கியர்கள் போராடுகிறார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களும் தமிழினத்தை அழிக்க, தமிழ் மொழியை சிதைக்க – தமிழர்களை அடிமைகள் ஆக்க வந்தவை.
உண்மையை உள்ளது உள்ளபடி உணர்ந்து போராடுவோம்! பேரரசுகள் கொண்டு ஆண்ட இனம் தமிழினம்! வீர வரலாறு படைத்தவர்கள் தமிழர்கள்! மூன்று சட்டங்களையும் முறியடிப்போம்; நம் வேளாண்மை காப்போம்; இனம் காப்போம்; மொழி காப்போம்; தாயகம் காப்போம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment