ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” முழக்கம் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று வருகிறது! தோழர் க. அருணபாரதி 2021 தேர்தல் கள ஆய்வு!,!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் 
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” முழக்கம்
தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று வருகிறது!

தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் தாக்கம்!

தோழர் க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் 100 விழுக்காட்டுப் பணிகளும், தனியார் தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காட்டுப் பணியிடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே அமர்த்த சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

கடந்த 1991ஆம் ஆண்டு காஞ்சிபுரம் – அய்யம்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) முதல் மாநாட்டில், தமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை அனைத்தும் தமிழர்களுக்கே எனத் தீர்மானம் இயற்றினோம். தொடர்ந்து, அதற்காகப் பல போராட்டங்களை நடத்தி, தமிழ் மக்களிடையே இதற்கான கருத்துருவாக்கத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முகாமையான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. 

ஐயா பழ. நெடுமாறன் தலைமையிலான அன்றைய தமிழர் தேசிய இயக்கம், எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் (த.தே.பே.), தோழர் தியாகு – சுப.வீ. தலைமையிலான தமிழ் தமிழர் இயக்கம் ஆகியவை இணைந்து உருவான தமிழ்த்தேசியத் தன்னுரிமை முன்னணி சார்பில் இக்கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தினோம். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில் 1994 ஏப்ரல் 19 அன்று, மார்வாடி – குசராத்திகளை வெளியேற்றி வலியுறுத்தி, மார்வாடிக் கடைகள் முன் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு இடங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2005ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அம்மாநாட்டில் பேசியதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு நடந்து வருகிறது. 

2008இல் திருச்சியிலுள்ள இந்திய அரசின் பி.எச்.இ.எல். நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்த மறியல் போராட்டம், 2011இல் தமிழ்நாடெங்கும் மலையாள ஆலூக்காஸ் நகை நிறுவனத்தை வெளியேற்றக் கோரும் போராட்டம், ஆவடி எச்.வி.எப். திண்ணூர்தி தொழிற்சாலையில் தமிழர் புறக்கணிப்புக்கு எதிரான போராட்டம், 2014இல் சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு வடமாநிலத்தவருக்கு எதிரான முற்றுகைப் போராட்டம், 2016இல் திருச்சி தென்னகத் தொடர்வண்டித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை, 2017இல் தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்களின் முன்பு தமிழர்களுக்கே வேலை கேட்டு ஆர்ப்பாட்டம், 2018இல் சென்னையில் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே!” சிறப்பு மாநாடு, 2019இல் திருச்சி பொன்மலை பணிமனையின் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டம், 2019 திசம்பரில் சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு வெளிமாநிலத்தவர்களே வெளியேறுங்கள் என மனிதச்சுவர் போராட்டம், 2020இல் திருச்சி பொன்மலை பணிமனையில் ஒரு வார கால தொடர் மறியல், வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம்.. – என தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றும் முத்திரைப் பதித்தவை! 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழர் உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களும், எழுப்பும் கோரிக்கைகளும் தமிழ்நாட்டு மக்களிடமும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் சான்று பகிர்கின்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து இச்சிக்கல் குறித்த மாதிரி சட்ட வரைவையும் அளித்தோம். நாம் நடத்திய போராட்டங்களிலும் மாநாடுகளிலும் தெளிவான முழக்கங்களை – தெளிவான வரையறுப்புகளோடு முன்வைத்தோம். 

1956ஆம் ஆண்டு தமிழ்நாடு மொழிஇனத் தாயகமாக உருவாக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் குடியேறியோர் அனைவரும் அயலாரே என வரையறுத்தோம். தமிழ்நாட்டு அரசுப் பணி வேலை வாய்ப்புகளில் 100 விழுக்காடும், இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே அளிக்கப்பட வேண்டும் எனக் கோரினோம். இதேபோல், இந்தியாவின் பிற மாநிலங்களில் எங்கெல்லாம் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு வேலை அளிக்கிறார்கள், எப்படியெல்லாம் சட்டங்கள் மற்றும் அரசாணைகள் போட்டிருக்கிறார்கள் என்பதை  2018 “தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கு!” – சென்னை மாநாட்டில் ஆய்வறிக்கையாக வெளியிட்டு, இன்றைக்கும் அதை பரப்புரை செய்து வருகின்றோம். 

இப்போராட்டங்களும், செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களிடையே, அரசியல் கட்சிகளிடையே குறிப்பான தாக்கங்களை ஏற்படுத்தியது. 2019 பொன்மலையில் பயிற்சிப் பழகுநர் வேலையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நாம் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது, #TamilnaduJobsForTamils என்ற குறிச்சொல்லை உருவாக்கியபோது, சமூக வலைத்தளங்களில் அதை முதன்மை முழக்கமாக தமிழ்நாட்டு இளையோர் ஏற்றார்கள். அப்போது, தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இந்த முழக்கம் ஏற்கத்தக்கது என்று தலையங்கம் எழுதினார்கள். 

இப்போது, தேர்தல் அறிக்கையில் தி.மு.க. தமிழ்நாடு வேலைகள் தமிழருக்கே என்ற முழக்கத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வெறும் அறிவிப்பாக இல்லாமல், ஆட்சிக்கு வந்தால் இதற்கான சட்டத்தை முறைப்படி இயற்றி அதனைச் செயல்படுத்தும் உறுதியும் தி.மு.க.வுக்கு வேண்டும். 

தமிழ்நாட்டு வேலைகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்களுக்கே என்ற நம் போர் முழக்கம் அனைத்துத் தளங்களிலும் இன்னும் விரிவடைய அயராது உழைப்போம்! உறுதியாக வெல்வோம்!
 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.