ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா?

சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 12.3.2021 அன்று இணையத்தளத்தில் ஒரு விவாதக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு “நீங்கள் எந்தப் பக்கம்? தேர்தல் வாக்களிப்பா? புறக்கணிப்பா?” என்பதாகும்.

“தமிழ்த்தேசியப் பேரியக்கமும் வேறு சில இயக்கங்களும் கடைபிடிக்கும் தேர்தல் புறக்கணிப்பு தவறு, அப்புறக்கணிப்பால் மோசமான கட்சிகள் பயன் அடைவதைத் தவிர வேறு ஒரு பயனையும் பெற இயலாது” என்று கூறி சுப.வீ. தமது கட்டுரையை முடித்துள்ளார். இது பற்றி என்னிடம் முதல் நாள் (11.3.2021) தொலைபேசியில் சில வினாக்கள் கேட்டார்.

இந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியில், உங்கள் “லட்சியம் எது என்று கேட்டேன். அதற்கு இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியம் என்றார்” என்று சுப.வீ. குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு திருத்தம்; “எங்கள் இலட்சியம் இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசம்” என்றேன். தமிழ்த் தேசியம் என்று கூறவில்லை. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது கருத்தியல் வடிவம். தமிழ்த்தேசம் என்பது தாயகம் என்ற பருண்மை வடிவம்.

தேர்தலைப் புறக்கணித்த பின், உங்கள் குறிக்கோளை அடைய மாற்று வழி என்ன வைத்துள்ளீர்கள் என்று என்னிடம் கேட்டார் சுப.வீ. அதற்கு “இலட்சியத்தை நோக்கிய கட்டமைக்கப்பட்ட வெகுமக்கள் போராட்டங்கள்” என்றேன். இது பற்றி சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

இக்காலத்தில், தன்னெழுச்சியாக கட்சி சார்பற்று நடந்த வெகுமக்கள் எழுச்சியும் போராட்டமும் கலைஞர் கருணாநிதி, செயலலிதா போன்ற வலிமையான ஆளுமைகளின்  ஆட்சிகளால் மீட்க முடியாத சல்லிக் கட்டு உரிமையை மீட்டது; ஸ்டெர்லைட்  ஆலையை மூடியது, ஐட்ரோ கார்பன் எடுப்பதைத் தடுத்தது; காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக ஆட்சியாளர்களை அறிவிக்க வைத்தது. மீத்தேன் எடுப்பதைத் தடைசெய்து  அன்றைய முதல்வர் செயலலிதா ஆணை பிறப்பித்தது கூட நம்மாழ்வார் தொடங்கி வைத்து விரிவடைந்த மக்கள் திரள் போராட்டங்களால்தான்!

வெகுமக்கள் எழுச்சி சாதிக்கும் என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள். சரியான அமைப்பினால் வழிகாட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட வெகு மக்கள் எழுச்சியும் போராட்டமும். தமிழ்த்தேச இறையாண்மையை மீட்கும். தேர்தல் வழிமுறை மூலமோ, தேர்தல் கட்சிகள் மூலமோ தமிழ்த்தேச இறையாண்மையை மீட்க முடியாது என்ற எனது நிலைபாட்டைச் சுருக்கமாகத் தொலைபேசியில் குறிப்பிட்டேன், அதன் சுருக்கத்தை சுப.வீ வெளியிட்டுள்ளார். அதில் குறையொன்றுமில்லை.

ஆனால் தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு இலட்சியத்தை சுப.வீ ஏற்கிறாரா, மறுக்கிறாரா? என்பது குறித்து அவர் தமது திறனாய்வுக் கட்டுரையில் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.

சுப.வீயின் தலைவர்களான அண்ணாவும் கலைஞரும் முழங்கிய “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” இலட்சியம் பற்றி நான் கேட்கவில்லை. கலைஞர் கருணாநிதி 1970-களின் தொடக்கத்தில் “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று முழங்கி, மாநாடெல்லாம் போட்டாரே அந்த முழக்கத்திற்காவது மறுஉயிர் கொடுத்து, அதை முதன்மைப்படுத்தி இந்தத் தேர்தலை(2021) சுப.வீயின் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்திப்பார் என்று கூட சுப.வீயால் சொல்ல முடியவில்லை.

பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பின் அல்ல, வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே திராவிட நாட்டு விடுதலைக் கோரிக்கையை “ஒத்திவைத்தது” தி.மு.க.(1964) “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று பின்னர் அண்ணா சொன்னார். 1967-இல் முதலமைச்சர் ஆன பின்னும் “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது; ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார். “காஞ்சி” இதழில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது; முதலைமைச்சர் என்ற பட்டம்; என் தலையில் முள் கிரீடம் போல் இருக்கிறது, நான் சூழ்நிலையின் கைதி என்று எழுதினார். 

கலைஞரின் தலைமையிலான தி.மு.க. 1971-இல் இந்திரா காங்கிரசுடன் மக்களவை – தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டிற்குமான தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டது. 1977 மக்களவைத் தேர்தலில் மொரார்சி தேசாயின் சனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருந்தது தி.மு.க. மொரார்சி தலைமை அமைச்சரானார். அடுத்து 1980-இல் இந்திரா காந்தியின் காங்கிரசுடன் மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 

1996-97-இல் தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோரை தலைமையமைச்சராக கொண்ட கூட்டணியில் தி.மு.க. உறுப்பு வகித்து அமைச்சர் பதவிகளை பெற்றது. வாஜ்பாயி (1999-2004), மன்மோகன்சிங் (2004-2014) ஆட்சிகளில் நடுவண் அரசின் அமைச்சர்களாகத் தி.மு.க.வினர் வீற்றிருந்தனர்.

இக்காலத்தில் மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கைகளில் எத்தனை உரிமைகளை மீட்டார்கள்? மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை 1976-இல் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி  இதுபோன்ற மாநில உரிமைகள் பல நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பறிக்கப்பட்டன. இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கூட்டணி அரசில் இருந்த தி.மு.க.வால் தடுக்க முடிந்ததா? பறித்தவற்றில் ஒன்றிரண்டை மீட்க முடிந்ததா? ஒரே ஒரு உரிமையைப் புதிதாகக் கலைஞர் மாநில அரசுக்குப் பெற்றார். இந்திய விடுதலை நாளில், மாநிலங்களில் ஆளுநர்கள் இந்திய அரசுக் கொடியை ஏற்றி வந்தனர். அதை மாநில முதலமைச்சரே ஏற்றும் “உரிமையை” “வாதாடிப்” பெற்றார். மாநில சுயாட்சியில் அவர் மீட்ட புதிய உரிமை இது! “சற்சூத்திரராக” தன்னை தில்லி எசமானர்களிடம் காட்டிக் கொண்டார்.

இந்தப் பின்னணியில் தான் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தலைமையை ஏற்றபின் இதுவரை “மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்தவில்லை. இந்தத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கையிலும் அந்த முழக்கத்தை மு.க.ஸ்டாலின் முதன்மைப் படுத்த வில்லை. தலைவரை மீறி சுப.வீயால் தமிழினத்திற்கான – தமிழ்த்தேசத்திற்கான இறையாண்மை மீட்பு போன்ற இலட்சித்தை அல்ல – மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற கோரிக்கையைக் கூட முதன்மைப்படுத்த முடியாது.

======================================

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

======================================

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் 6.4.2021 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை 13.3.2021 அன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முகப்புரைப் பகுதியில் “அ.தி.மு.க. அரசு நம் அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரமான மாநில உரிமைகள் அனைத்தையும் தாரைவார்த்து விட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சொற்றொடரின் வழியாக தி.மு.க. இரண்டு வகையில் தில்லிக்கான தனது எசமான விசுவாசத்தைக் காட்டிக்கொள்கிறது.

ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத “கூட்டாட்சி” என்ற சொல்லையும் கருத்தையும் அச்சட்டத்தின் மீது ஏற்றிப் புகழ்கிறது தி.மு.க.! இந்தியாவை “ஒன்றியம்” என்று அரசமைப்புச் சட்டம் கூறிக் கொண்டாலும் அதில் ஒற்றையாட்சித் தன்மையே மிகுந்துள்ளது, என்பதை தி.மு.க.வின் சிந்தனையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற கு.ச.ஆனந்தன் அவர்கள் தமது “மாநில சுயாட்சி” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு, கொஞ்ச நஞ்சம் இருந்த மாநில உரிமைகளையும் காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சிகள் பறித்துவிட்டன என்பதை மூடி மறைத்து, அ.இ.அ.தி.மு.க அரசு தாரைவார்த்து விட்டது என்கிறது. அவ்வாறு மாநில உரிமைகளைப் பறித்த போதும் அதற்குப் பின்னும் காங்கிரசு, பா.ச.க. கூட்டணியில் தி.மு.க. இருந்தது. மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதில் முதன்மையான கட்சி அ.இ.அ.தி.மு.க-வா, தி.மு.க-வா என்று வேண்டுமானால் பட்டிமன்றம் நடத்தலாம்! மற்றபடி தில்லிக்கு கங்காணி வேலை பார்ப்பதில் இவ்விரு கழகங்களிடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை.

===============================================

மாநிலத் தன்னாட்சி

===============================================

அடுத்து, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “மாநில சுயாட்சி” என்ற தலைப்பு வருகிறது.

“மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு ஈடுபாட்டோடு மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் எதிர்எதிரான இரண்டு முகாம்களில் இருந்து கொள்ள வேண்டும் என்பது தி.மு.க.வின் நிரந்தர உத்தி! இந்தத் தந்திரத்தில் தமிழர்களின் பகைமுகாமில் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது போல் பாசங்கு செய்வது தி.மு.க.வின் உத்தி! அதற்கான எடுத்தக்காட்டுகளை அடுக்கினால் கட்டுரை நீளும்.

இப்பொழுது கூட பா.ச.க. ஆட்சியின் இந்துத்துவா அதாவது ஆரியத்துவா பாசிசத்தை அடையாளப்படுத்தாமல் – மக்களின் முதல் எதிரி பா.ச.க. என்பதைச் சொல்லாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான் மாநில அரசின் வணிக வரிவசூல் உரிமையைப் பறித்து சரக்கு சேவை வரி நடுவண் அரசு வசூலிக்கும் புதிய சட்டத்தை அணியப்படுத்தினார்கள். அவர்களின் கூட்டணி ஆட்சிதான் நீட் தேர்வுத் திட்டத்தை உருவாக்கியது. இப்போது பா.ச.க ஆட்சி மாநிலக் காவல்துறையின் அதிகாரத்தைப் பறித்து நடுவண் அரசின் அதிகாரத்தில் சேர்த்துக் கொண்ட தேசியபுலானய்வு முகமைச் சட்டத்தை (NIA) தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்!

இந்திய அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்குத் துணை போகும் கட்சி அ.தி.மு.க. என்பதில் எந்த ஐயமும் எங்களுக்கு கிடையாது. செல்லாத நாணயத்தின் இரண்டு பக்கங்களே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்! 

“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம் பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”  என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

அடுத்து புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் தனியே கல்விக் கொள்கைச் சட்டம் இயற்றப்படும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இவைப் போன்ற இன்னுஞ் சில உரிமை மீட்புக் கோரிக்கைகளை – மதச்சார்பின்மைக் கோரிக்கைகளை பொது வேலைத் திட்டமாக வைத்தல்லவா தி.மு.க. தனது தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாக்கி இருக்க வேண்டும். ஏன் அப்படி கூட்டணி அமைக்கவில்லை? தேர்தல் அறிக்கையில் ஊர் மெச்ச ஒப்புக்குக் கோரிக்கைகள் வைக்கிறது தி.மு.க!

பா.ச.க.வின் “இந்துத்துவா பாசிசத்தை” எதிர்க்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும் – இதற்காக தி.மு.க. கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று வேறு சிலர் கருத்துகள் கூறுகின்றனர்.

பா.ச.க. பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைத்திருப்பதாகத் தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டறிக்கையோ, கூட்டுப் பிரகடனமோ வெளியிட்டுள்ளனவா? இல்லை! பா.ச.க. அரசு மாநில உரிமைகளைப் பறிப்பதைப் பற்றி பெயர் சுட்டிக் கண்டனம் செய்யவில்லை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பா.ச.க.வை வீழ்த்த வேண்டிய தேவையை தி.மு.க. தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டவில்லை.

இனிமேல் பா.ச.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற அறிவிப்பும் தி.மு.க. தரப்பிலிருந்து இல்லை!

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் கவனத்தைப் போல் கங்காணி அதிகாரத்தைக்  கைப்பற்றிக் கொள்ளும் தன்னல நோக்கமே தி.மு.க.வின் தேர்தல் உத்தியில் பளிச்சிடுகிறது.

================================================

சுப.வீ.யாவது சொன்னாரா?

================================================

பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தை – வீழ்த்திட, தி.மு.க.வை ஆதரிப்பது தேவை அல்லவா என்று சுப.வீ.யாவது வெளிப்படையாக மேற்படிக் கட்டுரையில் சொன்னாரா? இல்லை!

தி.மு.க. எவ்வழி, அவ்வழியே சுப.வீ. வழி! பா.ச.க. பாசிசம் என்ற பகைமை ஆற்றலை பளிச்சென்று வெளிப்படுத்தாமல் அதற்கு அஞ்சி பதுங்கிக் கொள்வது தி.மு.க.வின் உத்தி! அதனால் அது தனது தேர்தல் அறிக்கையில் கூட பா.ச.கவின் ஆரியத்துவா பாசிசத்தை வெளிப்படுத்தவில்லை! இக்கட்டுரையில் அதே பாணிதான் சுப.வீ பாணி!

“சோதனைக்காக, தோழர்கள் மணியரசன், தியாகு போன்ற நபர்களிடம் பா.ச.க அல்லது அ.தி.மு.க பற்றி ஒரு வினா எழுப்புங்கள், உடனே அவர்கள் காங்கிரசு, தி.மு.க. இரண்டையும் கொண்டு வந்து சேர்த்துதான் விடை சொல்வார்கள்! கேட்ட கேள்விக்கு நேரடியாக விடை சொல்லமாட்டார்கள்” என்று சுப.வீ. கூறுகிறார்.

சுப.வீயின் மனச் சான்றுக்குத் தெரிகிறது, அ.தி.மு.கவுக்குள்ள அதே குறைகள் தி.மு.க.வுக்கும் இருக்கிறது. எனவே, “குறைப்பற்றி பேசி, சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் அதிகக் குறையுள்ள கட்சி, குறைந்த குறையுள்ள கட்சி என்று பேசுகிறார்.

“உள்ளதில் நல்லது என்னும் விதிப்படி, யார் ஓரளவு ஏற்புடையவர்களோ அவர்களுக்கே நாம் வாக்களிப்போம். யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் அந்தச் சுமாரானவருக்கு வாக்குகள் குறையும். அதன் மூலம் அவரை விட மோசமானவருக்குத் தானே பயன் கிடைக்கும்” என்று கேட்கிறார் சுப.வீ!

அவரின் மதிப்பீட்டில், தி.மு.க.சுமாரான கட்சிதான், குறைகள் உள்ள கட்சிதான்! சொக்கத் தங்கம் அன்று! திராவிடத் தமிழர் உரிமை மீட்புப் பாசறை அன்று!

அதெல்லாம் போகட்டும், இன்றைய பா.ச.க. பாசிசத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி அதை முறியடிக்க வாரீர் என்று வாக்காளர்களைத் தி.மு.க.வும் அழைக்கவில்லை; சுப.வீயும் இக்கட்டுரையில் அழைக்கவில்லை!

இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளாகவும், தமிழினத்தின், தமிழ் மொழியின், உரிமைப் பறிப்புக் கட்சிகளாகவும் செயல்படும் காங்கிரசு மற்றும் பா.ச.கவுடன் பதவி, பணம், ஊழல் ஒய்யார வாழ்வு முதலிய தன்னல நோக்கங்களுக்காக் கூட்டணி சேர்ந்தும் சேராமலும் ஒத்துழைத்து இன இரண்டகம் செய்யும் கட்சிகள் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கதின் வரையறுப்பு.

இவை ஒரு புறமிருக்க இப்போது கூட மோகன்பகவத் – மோடி ஆட்சியின் ஆரியத்துவா பாசிசத்தை அம்பலப்படுத்தி, அதை எதிர்த்திட வறையறுக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு அழைப்பு விடாத கட்சி தி.மு.க! 

=========================================

தேர்தல் பற்றிய வரையறுப்பு

=========================================

அடுத்து மிக முகாமையான ஒரு வினாவை சுப.வீ எழுப்பியுள்ளார். 1980களின் இறுதிப் பகுதியில் நாங்கள் தேர்தலில் பங்கெடுக்கும் தேவை பற்றி – சுப.வீயிடம் தருக்கம் செய்தததையும் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சிக்கலில் அவர் சொல்லியிருப்பது உண்மை! நாங்கள் பிறவி மேதைகள் அல்லர். முயன்று தவறிக் கற்றுக் கொள்ளும் விடாமுயற்சியாளர்கள். அதில் முன்னேறிச் செல்வோம்! இந்த முயற்சிப் போக்கில் எங்களிடம் எந்தத் தன்னலமும் இல்லை. மக்கள் நலன் – இன நலன் மட்டுமே எங்களுக்குத் தலைமையானது! 

அப்பொழுது நாங்கள் பொதுவுடைமைக் கொள்கையை முதன்மைப் படுத்தி, அதன் வழியில் புரட்சிகரப் பாதையில் செல்லத் தீர்மானித்து தனி அமைப்பை உருவாக்கினோம்.

இந்தியாவின் முதன்மை முரண்பாடு இன முரண்பாடு; ஆரிய-இந்தி இனம் மற்ற இனங்களை ஒடுக்குகின்றது. ஆரியம் தனது முதல் பகையாகத் தமிழினத்தைக் கருதுகிறது. இந்த ஒடுக்கு முறையிலிருந்து விடுபடத் தமிழ்த் தேசம் இறையாண்மை பெற வேண்டும்; இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள மற்ற இனங்களுக்கும் இறையாண்மை வேண்டும் என்பதே வளர்ச்சி அடைந்த எங்களின் புதிய முடிவு!

இந்த இலட்சியத்திற்கு இரண்டகம் செய்யாமல் எங்களால் இயன்ற வகைகளில் செயல்பட்டு வருகிறோம். பதவி,பணம்,விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியர்களின் பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்த்து வருகிறோம். இவ்வாறான சிந்தனை வளர்ச்சிப் போக்கில், ஆதிக்க இனம் நடத்தும் தேர்தல் பற்றி புதிய முடிவுகளுக்கு வந்தோம்.

இந்திய அரசு ஆரிய – இந்தி இன மேலாதிக்க அரசு. இதன் தலைமை அடுக்குகள் பிராமணர்கள் – ஆரிய வைசிய மார்வாரி – குசராத்தி மற்றும் வடநாட்டுப் பெருமுதலாளிகள்! இதன் வெகு மக்கள் ஆதரவு ஆற்றல்கள் இந்தி பேசும் இனத்தவர்கள்! இவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள்.

இந்தியா என்பது ஒரு தேசமன்று; பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் பிணைப்பு! பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்தது இத்தியா! இந்தியாவை உருவாக்கிய உண்மையான தந்தைமார் இராப்ர்ட் கிளைவு போன்றோரே!

இப்படிப்பட்ட பீரங்கிப் பிணைப்பில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டார்கள். இன்றும் பிரிட்டனை விட, பிரான்சை விட அதிக மக்கள் தொகை கொண்டது தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய இனம்!

இந்திய நாடாளுமன்றம் என்பது சனநாயகத் திரைச் சீலையால் மூடப்பட்ட இன ஒடுக்கு முறையின் ஒய்யாரமேடை. ஓர் இன எதேச்சாதிகாரம் கொண்டது. மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543 பேர்! தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் 39 பேர். புதுவையைச் சேர்த்தால் 40 பேர்! ஆனால் இந்திக்காரர்கள் எண்ணிக்கை சற்றொப்ப 250 பேர்! அவர்களுக்குப் பத்து மாநிலங்கள் இருக்கின்றன.

இந்திக்காரர்களுக்கு நடுவண் ஆட்சியும், மாநில ஆட்சியும் ஒன்றுதான். செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்களைப் போன்ற தேசிய இனங்களுக்கு இப்போதுள்ள இந்திய ஆட்சியானது ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் மறுவடிவம்தான்!

அதில் வைஸ்ராய் என்பவர்க்கும் இலண்டன் நாடாளுமன்றத்திற்கும் ஏகபோக அதிகாரம். அவர்களுக்குக் கட்டுப்பட்டவைதான் அப்போதிருந்த மாநில ஆட்சிகள்! இப்போது தலைமை அமைச்சர்க்கும் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்பட்டவைதான் மாநில ஆட்சிகள். நாடாளுமன்றத்தில் நம்மவர் நாற்பது பேரும் ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் அவர்களின் முன் மொழிவுகள் செயலுக்கு வராது. பயன்படாத சிறுபான்மை!

=========================================

காந்தியின் தேர்தல் புறக்கணிப்பு

========================================

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்று கற்பனைச் செய்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதே மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம். அதன் அடிப்படையில் வெகுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் சட்டமன்றம் அமைச்சரவை ஆகியவை 1920-இல் உருவாக்கப்பட்டன. ஆளுநர்க்கு அதிகாரம், சட்டமன்றத்திற்கும் சில அதிகாரங்கள் – இறுதி அதிகாரம் ஆளுநர்க்கு!

இது இரட்டையாட்சி இதில் பங்கெடுக்க மாட்டோம் என்று காந்தியும் காங்கிரசும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்தியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் என்று கருதப்படும், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) 1935-இல் செயலுக்கு வந்தது. அதனடிப்படையில் ஆங்கிலேய ஆட்சி 1937-இல் நடத்திய பொதுத் தேர்தலில் ஒரு நிபந்தனையோடு வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரசு!

காங்கிரசின் தலைமை பதவி விலகச் சொல்லும் போது பதவி விலக ஒப்புக் கொண்டு, கையொப்பமிட்டுக் கடிதம் தந்தால்தான் வேட்பாளராக நிற்க அனுமதி என்றது. அந்த நிபந்தனையை ஏற்றுத் தேர்தலில் நின்று மாநிலங்களின் ஆட்சியை பிடித்தது காங்கிரசு! ஆனால் 1939-இல் இந்திய விடுதலையை முன் நிபந்தனையாக்கி, அனைத்து முதலைமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச் சொன்னது காங்கிரசுத் தலைமை. அனைவரும் விலகினார்கள்.

காங்கிரசு மிதவாதக் கட்சிதான், ஆனால் இந்திய விடுதலையில் உறுதியாக நின்றது. 1947 ஆகத்து 15-இல் இந்திய விடுதலையை அது பெற்றது.

===============================

தமிழீழத்தில்

===============================

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைக்கு ஆயுதப் போர் நடத்தினார்கள். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால் அவர்களும் தேவை என்று கருதிய போது தேர்தலைப் பயன்படுத்தினார்கள். கி.பி.2000-இல் வெளிநாடுகள் தலையீட்டில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே வெளிநாடுகளில் அமைதிப் பேச்சு நடந்து வந்தது. அதில், பங்கேற்ற சிங்கள அரசுப் பிரதிநிதிகள், “துப்பாக்கி முனையில் மக்களை விடுதலைபுலிகள் அச்சுறுத்தி தனி ஈழம் கேட்க வைத்துள்ளார்கள். அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தமிழர்களிடையே ஆதரவில்லை” என்றார்கள்.

அது பொய்க் குற்றச்சாட்டு என்று மெய்ப்பிப்பதற்காகவும், தமிழர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறார்கள் என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புதிய உத்தியைக் கையாண்டார். ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களைக் கொண்டு சம்பந்தர் தலைமையில், தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற அமைப்பை 2001-இல் உருவாக்கினார். 

தமிழ்த்தேசியக் கூட்டணி தமிழீழ விடுதலைப் புலிகளையும் தனி ஈழக் கோரிக்கையையும் வெளிப்படையாக ஆதரித்தது. அக்கூட்டணி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு, கிழக்கு மாகணங்களில் 22 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்ப் பகுதியில் 90 விழுக்காடு வெற்றி!

தமிழீழ விடுதலையைத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் – அவர்களின் பிரதிநிதியே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற உண்மை உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டது.

அதே வேளை, தமிழீழ விடுதலையைத் தேர்தல் மூலம் அடைவது என்ற நிலைபாட்டை ஒருபோதும் பிரபாகரன் எடுக்கவில்லை.

அயலாரால் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் அல்லது இனங்களின் விடுதலைக்குத் தேர்தலைப் புறக்கணிக்கலாம் அல்லது பயன்படுத்தவேண்டிய தருணங்களில் பயன்படுத்தலாம்; அதே வேளை தேர்தல் பங்கெடுப்பை நிரந்தரப் பாதையாக வகுத்துக் கொண்டு தேச விடுதலையைப் பெற முடியாது என்பதைக் காந்தியடிகளும் பிரபாகரன் அவர்களும் இருவேறு முனைகளில் இருந்து வழிகாட்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கூட்டணித் தந்திரம் பற்றி வெளிநாட்டு உவமைகள் பலவற்றை சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் கூறுவது வழக்கம். கம்யூனிஸ்ட் சோவியத்து ஒன்றியம், ஏகாதிபத்திய பிரித்தானிய – வட அமெரிக்க – பிரான்சு நாடுகளுடன் சேர்ந்து பாசிச இட்லரின் செர்மானியப் படையை எதிர்த்துப் போரிட்டது போன்றதுதான் இந்தியாவில், பெரிய எதிரிக்கு எதிராகப் பல்வேறு சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேர்வது என்பார்கள். நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் கையாளும் கூட்டணி உத்தியை ஒரு நாட்டிற்குள் நடக்க வேண்டிய சனநாயக மீட்பு, இன இறையாண்மை மீட்பு போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மலை ஏறுபவன் உயிர்வளிக் குடுவை (ஆக்சிஜன் குடுவை) கொண்டு செல்கிறான் – அவன் வீரன்! மாடி ஏறுபவன் உயிர்வளி குடுவை கொண்டு சென்றால், அவன் நோயாளி!

===================================

படிப்பினைகள் 

===================================

தமிழ்நாட்டில் அண்ணாவும், காசுமீரில் சேக் அப்துல்லாவும், மிஜோரமில் லால்டெங்காவும் ஆண்டைகள் நடத்தும் தேர்தலில் வென்று இன உரிமை பெறுவோம் என்று அறிவித்துத் தேர்தலில் பங்கெடுத்தார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் இனவிடுதலைக்கு எழுச்சிபெற்ற மக்களை இவர்களின் உத்தி சீரழித்ததுதான் மிச்சம்!

மேலே கண்ட அனைத்துப் படிப்பினைகளையும் தமிழ்தேசியப் பேரியக்கம் உள்வாங்கிக் கொள்கிறது.

தேர்தலில் பங்கெடுப்போரை நாங்கள் தடுப்பதில்லை. அதே வேளை நாங்கள் தேர்தலில் பங்கெடுப்பதில்லை.  தேர்தல் திருவிழாக் காலந் தவிர மற்ற காலம் முழுவதும் நம் மக்கள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக மொழி, இன, தாயகப் பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறான வெகுமக்கள் போராட்டங்கள் தமிழ்த் தேசிய உள்ளடக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு!

==============================================

அரசிடம் கோரிக்கை வைக்கலாமா?

==============================================

தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் தேர்தலில் அமையும் அரசிடம் தானே கோரிக்கை வைக்கிறீர்கள், இதன் முரண்பாடில்லையா என்று தொலைபேசி உரையாடலில் சுப.வீ. கேட்டார்.

“வெள்ளையனே வெளியேறு” என்று தீர்மானம் போட்ட காந்தி வெள்ளை அரசிடம் தான் கோரிக்கைகள் எழுப்பினார். தமிழீழ விடுதலைப் போர் நடத்திய புலிகளின் தலைமை சிங்கள அரசுடன் தான் இடைக்காலக் கோரிக்களுக்காகப் பேச்சு நடத்தியது; இலட்சியத்தை விட்டு அந்தந்த அரசுகளுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்து விடவில்லை.

ஒருவர் வாக்களிக்காத கட்சி ஆட்சிக்கு வ்ந்துவிட்டால் அவர் அந்த ஆட்சியிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்ற அடுத்த நிலைக்கு சுப.வீ.போன்றவர்கள் போய்விட வேண்டாம். வாக்களித்தவர்-வாக்களிக்காதவர் அனைவர்க்கும் பொதுவானது அரசு  என்று தான் அவர்களின் சட்டம் கூறுகிறது.  

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.