ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மூத்த தலைவர் ஆனைமுத்து ஐயா மறைவு பேரிழப்பாகும்! ஐயா பெ. மணியரசன் இரங்கல்!



மூத்த தலைவர் ஆனைமுத்து 
ஐயா  மறைவு பேரிழப்பாகும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், பெரியாரிய சிந்தனை அறிஞருமான ஐயா வே. ஆனைமுத்து அவர்கள், புதுவை மருத்துவமனையில் இன்று (06.04.2021) முற்பகல் 11.45 மணியளவில் காலமான செய்தி, பெரும் துயரம் அளிக்கிறது! 

ஐயா அவர்கள் உடல் நலிவுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின்னர் தாம்பரத்தில் தமது தலைமகன் இல்லத்தில் ஓய்வுபெற்று வந்த காலத்தில், அவரைப் போய் பார்த்து உடல்நலம் விசாரித்து வந்தேன். நலிவுற்றுப் படுக்கையில் இருந்த நிலையிலும், அடையாளம் கண்டு என்னுடன் பேசினார்கள். 

ஆனைமுத்து ஐயா அவர்கள், எடுத்துக்காட்டான இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர். சமூகப் பணியில் பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தொண்டாற்றுவது என்பதே மிகவும் அரிதான செயலாகிவிட்ட இக்காலத்தில், ஐயா அவர்கள் இம்மூன்றுக்கும் இச்சைப் படாமல் செம்மாந்து இலட்சிய வாழ்வு வாழ்ந்து பணியாற்றியவர். இளையோருக்கு அவரது அர்ப்பணிப்பு வாழ்வு முன்னோடிச் செயலாகும்! 

பெரியார் அவர்களின் சிந்தனைகளை முதன் முதலில் தொகுத்து, மூன்று தொகுதிகளாக வழங்கி அவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்த பெருமை, ஐயா ஆனைமுத்து அவர்களையே சேரும். பெரியார் வழியில் நின்று, வர்ணாசிரமம் – ஆரியத்துவா ஆதிக்கம் ஆகியவற்றை விடாப்பிடியாக எதிர்த்து வந்தார். 

இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடுவண் அரசுப் பணிகளில் மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெரும்பாடுபட்டவர் ஐயா ஆனைமுத்து அவர்கள். வடமாநிலங்களில் பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பரப்புரை செய்தவர். அம்மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் உரிமைச் சிந்தனையாளர்கள், ஐயா அவர்களை அழைத்து இப்பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, மண்டல் குழு அமைத்திட ஐயா ஆனைமுத்து அவர்களும், அவர்களுடைய வடநாட்டுத் தோழர்களும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. பின்னர், மண்டல் குழுவின் பரிந்துரைகள் இந்திய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவற்றை செயல்படுத்துவதற்கு ஆனைமுத்து ஐயா அவர்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

மார்க்சிய லெனினியம் நன்கு கற்றவர். சமூக வளர்ச்சியின் இயங்கியல் விதிகளை அறிந்தவர். தமிழ்த்தேசிய இனம் குறித்த சரியான புரிதல் உள்ளவர். தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, போராட்டங்கள் நடத்தியவர். ஐயா அவர்களோடு, நாங்களும் இணைந்து தமிழ்வழிக் கல்விக்கானப் போராட்டங்களில் தளைப்பட்டுள்ளோம். தமிழ்த்தேசிய இனத்திற்கு இறை யாண்மை வேண்டும் என்பதில், உறுதியானவர். இவ்வாறான தமிழ்த்தேசியக் கொள்கைகளை “சிந்தனையாளன்” இதழிலும், பொது வெளியிலும் வலியுறுத்தி வந்தார்கள். 

மொழி – இன – பகுத்தறிவு உணர்வோடு செயல்பட்டு வந்த மூத்த தலைவர் ஐயா ஆனைமுத்து அவர்கள் மறைவு என்பது, தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்! ஐயா அவர்களுடைய சிந்தனைகளும், கொள்கைகளும் இளம் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும்! ஆனைமுத்து ஐயா அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.