ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? - கி. வெங்கட்ராமன் அறிக்கை!



ஏழு தமிழர் விடுதலையில் 
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் இராசிவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அநீதியான முறையில் சிறையில் வாடுவதை சுட்டிக்காட்டி இவர்கள் விடுதலைக்கு உடனடியான ஒப்புதல் தருமாறு குடியரசுத் தலைவரை கோரியதை தவறு என்று கருதவில்லை.

அதே நேரம் கூடிய விரைவில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திமோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்ததித்து உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழ்நாடு அரசு தண்டணை இடைநிறுத்த விதிகள் - 1982 (The Tamilnadu Suspension of Sentence Rules - 1982) பிரிவு 40 - இன் கீழ் உள்ள சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி ஏழு தமிழர்களுக்கும் காலவரையற்ற சிறை விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலைத்தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

ஆயினும் திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன். சீமான், பஞ்சாப் மனித உரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் செக்மோகன்சிங் உள்ளிட்டோர். அரசமைப்பு சட்ட உறுப்பு 161 ன் கீழ் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது. கூட்டாட்சி முறைக்கு எதிரான ஆளுநரின் முடிவை ஏற்பதாக அமைந்து விடும் என்று திறனாய்வு செய்கின்றனர். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக நடந்து கொண்ட விதமும், செய்த முடிவும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பது மட்டுமின்றி அப்பட்டமான தமிழினப் பகைச் செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) ன் படி மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். இச்சிக்கலில் ஆளுநருக்கு தனிப்பட்ட எந்த விருப்பதிகாரமும் கிடையாது.
இதனை மாருரா – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தி விட்டது. (1981, 1 SCCB, 107). “ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனித்த அதிகாரம் படைத்தவர் அல்ல” என்று அத்தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது.

அதன் பிறகு வந்த அரசமைப்புச் சட்ட ஆயங்களும் இதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. 

இந்த நிலையில் ஆளுநர் புரோகித் முதலில் இரண்டாண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தியதும், அடுத்து இராசிவ் காந்தி கொலை தொடர்பான பல்நோக்கு விசாரணைக்குழுவின் முடிவுக்கு காத்திருப்பதாக சாக்குப் போக்கு சொல்லியதும், இறுதியில் இதன் மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறி குடியரசுத் தலைவருக்கு இந்த கோப்பை அனுப்பியதும் அரசமைப்புச் சட்ட கவிழ்ப்பாகும். ஏழு தமிழர் விடுதலை தொடர்பான இந்திய அரசின் தமிழினப் பகை முடிவு தான் ஆளுநர் வழியாக வெளிப்பட்டிருக்கிறது. 

ஆளுநரின் முடிவு கூட்டாட்சிக்கு முறைக்கு எதிரானது என்ற திறனாய்வு சரியானதுதான் என்றாலும் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர் விடுதலை பரிந்துரைத்து ஆளநருக்கு அனுப்பிவைப்பது உரிய பலன் தராது என்றே கருதுகிறோம்.
அதே இந்திய அரசு, அதே ஆளுநர் என்ற நிலையில் மீண்டும் காலதாமதம் மீண்டும் இதே முடிவு என்ற ஆபத்து நிகழவாய்ப்பு உண்டு.

குடியரசுத் தலைவர் வழியாகவும் ஏழு தமிழர் விடுதலை கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியதுதான். ஆயினும் இருக்கிற சட்ட நிலைமையின் படி இந்திய அரசை வலியுறுத்துவது செய்ய வேண்டிய பணிதான்.

ஏற்ககெனவே 2014 இல் அன்றைய முதலமைச்சர் செயலலிதா குற்றவியல் சட்ட விதி 432 ன் கீழ் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக அறிவித்து அதனை 435 (1) ன் கீழ் இந்திய அரசின் கருத்து கேட்டு அனுப்பிய போது அன்றைய காங்கிரசு ஆட்சி அச்சிக்கலை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு கொண்டு சென்றது. அதில் 02.12.2015 அன்று வந்த தீர்ப்பு குற்றவியல் சட்டப்படியான மாநில அரசின் அதிகாரங்களையே பறிப்பதாக அமைந்து விட்டது. ஆயினும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161ன் படியான மாநில அரசின் தண்டனை குறைப்பு அதிகாரம் கட்டற்றது என்று மட்டும் உறுதி செய்தது. ஆளுநர் புரோகித்தின் செயல் இதையும் தட்டிப்பறிப்பதாக அமைந்தது. 

ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் சிலர் இராசிவ் காந்தி கொலை வழக்கில் இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களும் இருப்பதால் குற்றவியல் சட்டம் 435 (1) ன் கீழ் பொருந்தும் இந்திய அரசின் அதிகாரம் 161 க்கும் பொருந்தும் என உள் நோக்கத்தோடு கூறுகிறார்கள்.

ஆனால் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டி குறைத்த உச்ச நீதிமன்ற அரசரமைப்பு ஆயம் (இந்திய ஒன்றிய அரசு – எதிர் – முருகன் என்கிற சிறிகரன் மற்றும் பிறர் வழக்கு) கூட உறுப்பு 161ன் கீழ் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, எந்த நேரத்திலும் செயல்பட கூடியது என்று கூறியது மட்டும்மல்ல “ஆளுநர், அதாவது அவர் தொடர்புடைய அவரது அமைச்சரவை, இந்திய குடியரசுத் தலைவரை விட உயரதிகாரம் படைத்தது அல்ல என்றாலும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161 இதற்கு விதிவிலக்கானது. குடியரசுத் தலைவரின் அதிகாரமும் மாநில ஆளுநரின் அதிகாரமும் தண்டனைக் குறைப்பு குறித்த செய்தியில் ஒன்றுக்கொன்று இணையானவை, ஒன்றுக்கொன்று சமமானவை” எனக் கூறியது.

“மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லையில் எந்த சட்டத்தின் படி தண்டிக்கப்பட்ட எந்த நபரின் தண்டனையையும் குறைக்கவோ, நிறுத்தி வைக்கவோ, மீட்சி வழங்வோ, மன்னிப்பு வழங்கவோ மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு” என்பது தான் உறுப்பு 161.

இதில் குறிப்பிடப்படும் “மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லை” என்பது மாநில எல்லையைக்குறிக்கிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை.

சட்ட நிலைகள் தெளிவாக இருந்தாலும் ஆளுநர் புரோகித் இது தனது அதிகாரத்திற்கு உட்டபட்டது அல்ல என்று கூறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பது தான்தோன்றிதனமான சட்ட கவிழ்ப்பாகும். இது நடந்து ஓராண்டு கூட ஆக வில்லை. 
இந்த நிலையில் 161 ன் கீழ் தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் இதே நிலை ஏற்படும் ஆபத்து உண்டு.

மேலும் சில நண்பர்கள் ஆளுநரின் சட்ட கவிழ்ப்பை சுட்டி காட்டி நீதி மன்றத்தை அணுகலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். சட்டப்படி இது சரிதான் என்றாலும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டால் உறுப்பு 161, 163 (1) ஆகியவற்றையும் அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி நிச்சயமற்ற நிலையை உருவாக்கிவிடும் ஆபத்து உண்டு என உணர முடியும்.

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்திய தலைமைச்சரை சந்தித்து வலியுறுத்திவிட்டு தமிழ்நாடு தண்டனை இடை நிறுத்த விதிகள் பிரிவு 40- ஐ பயன்படுத்தி பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், இரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களுக்கு காலவரையற்ற நீடித்த விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலை தருவதே தமிழ்நாடு அரசின் முன் உள்ள கடமை என வலியுறுத்துகிறோம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.