தமிழ் வழிபாடு மற்றும் பூசைக்கு புதிய சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக! - சூலை 3 அன்று பதாகை ஏந்திப் போராட்டம்! ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
தெய்வத் தமிழ்ப் பேரவை
செயற்குழுக் கூட்ட முடிவுகள்
தமிழ் வழிபாடு மற்றும் பூசைக்கு புதிய சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக!
சூலை 3 அன்று பதாகை ஏந்திப் போராட்டம்!
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் காணொலி வழியாக தி.பி. 2052 ஆனி 3 – 17.06.2021 வியாழன் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடந்தது.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் சித்தர் மூங்கிலடியார் பொன்னுசாமி (குருவழி வாரிசு, பதிணென் சித்தர் மடம், பீடம்) அவர்கள், குச்சனூர் கிழார் (வடகுரு இராசயோக ஆதின மடாதிபதி) அவர்கள், குடந்தை இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல்) அவர்கள், திருவில்லிப்புத்தூர் மோகனசுந்தரம் அடிகளார் (தெய்வத்தமிழ் வழிபாட்டு மன்றம்) அவர்கள், சென்னை சிவவடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர்) அவர்கள், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் (தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு) அவர்கள், திருவானைக்கோயில் பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி அவர்கள், புதுச்சேரி வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், விராலிமலை வே.பூ. இராமராசு அவர்கள் ஆகியோர் காணொலிக் கலந்துரை யாடலில் கலந்து கொண்டு கருத்துகள் வழங்கினர்.
சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனத் தலைவர், அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம், மேச்சேரி) அவர்கள், அய்யாவழி பாலபிரஜாபதி அடிகளார் (சாமித்தோப்பு) அவர்கள், திருவாட்டி. கலையரசி நடராசன் (ஆவடி சைவத்தமிழ்ப் பேரவை) அவர்கள், திரு. ஆசீவகம் சுடரொளி அவர்கள், முனைவர் வே. சுப்ரமணிய சிவா அவர்கள் ஆகியோர் கைப்பேசித் தொழில்நுட்பச் சிக்கலால் உரையாற்ற முடியவில்லை. திரு. சுப்பிரமணிய சிவா தமது கருத்துகளை எழுதி புலனத்தின் வழி அனுப்பினார். இக்காணொலி கலந்துரையாடலை திரு. க. அருணபாரதி ஒருங்கிணைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் அறிக்கை
கடந்த 14.02.2021 அன்று திருச்சியில் தெய்வத் தமிழ்ப் பேரவை தொடங்கப்பட்டதிலிருந்து நடந்துள்ள பணிகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் பேசினார்.
தீர்மானங்கள்
காணொலியில் பங்கேற்றோர் கூறிய கருத்துகள், செயற்குழு உறுப்பினர்கள் தொலைப்பேசி வழியாகக் கூறிய கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ் வழிபாடு மற்றும் அர்ச்சனைக்குப் புதிய சட்டம் இயற்றுக!
தமிழ் வழிபாடு மற்றும் அர்ச்சனைக்குப் புதிதாக வலுவான சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசைத் தெய்வத் தமிழ்ப் பேரவைக் கேட்டுக் கொள்கிறது.
கருவறை, வேள்விச்சாலை, கலசக் குடமுழுக்கு அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல், பூசை செய்தல் அன்றாட நடைமுறையாக, இயல்பாகச் செயல்பட வேண்டும். விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே கருவறையில் சமற்கிருத மொழியில் வழிபாடும் அர்ச்சனையும் நடத்த வேண்டும்.
ஆகமக் கோயில்களில் சமற்கிருத அர்ச்சனை – சமற்கிருத வேள்வி, சமற்கிருத வழிக் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் செயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையிலான குழு ஒன்று பரிந்துரை செய்தது. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை.
எனவே, தமிழ் வழிபாடு மற்றும் அர்ச்சனை நடைமுறைகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். அதுவரை, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி தமிழ் வழிபாடு மற்றும் தமிழ் அர்ச்சனை நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் வழிபாடு மற்றும் தமிழ் அர்ச்சனைப் பயிற்சிப் பள்ளிகள்
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு ஆறு இடங்களில் நடத்திய அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் சமற்கிருத அர்ச்சனைப் பாடங்களையும், தமிழ் வழிபாட்டு மந்திரங்களையும் இணைத்தே அனைவருக்கும் கற்றுத் தந்தனர்.
அயல் மொழியாகவும், ஆக்கிரமிப்பு மொழியாகவும், வர்ணசாதி உயர்வு தாழ்வை சாத்திரங்கள் வழியாக வலியுறுத்தும் மொழியாகவும் உள்ள ஆரிய மொழியான சமற்கிருதத்தைத் தமிழுக்கு மேலாகவோ அல்லது தமிழுக்குச் சமமாகவோ தமிழ்நாட்டு ஆன்மிகத்தில் பயன்படுத்துவது தெய்வத்தமிழையும் – உலகின் முதன் மாந்தரான தமிழரையும் இழிவுபடுத்தும் செயலாகும்.
சமற்கிருதத்தில் பூசை செய்வோர் தேவை எனில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதற்கான பயிற்சியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை – தனியே பயிற்சி கொடுத்து உருவாக்கிக் கொள்ளலாம்.
மாவட்டந்தோறும் பயிற்சிப் பள்ளி
தமிழ்வழி கருவறைப் பூசகர் / அர்ச்சகர் பயிற்சிக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியிலிருந்தும் தகுதி உடையோர்க்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். பெண் அர்ச்சகர் பயிற்சியும் கொடுக்க வேண்டும்.
இதற்கான பயிற்சிப் பள்ளிகள் முதல் கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று திறக்கப்பட வேண்டும். அதில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவிகள் அனைத்தும் வழங்க வேண்டும்.
பயிற்சி முடித்தவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பணிபெறும் நிர்வாகக் கட்டமைப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
ஏற்கெனவே பூசகர் / அர்ச்சகர் பயிற்சி பெற்று, பணி வழங்கப்படாமல் துன்பச் சூழலில் உழன்று கொண்டிருப்போருக்கு, உடனடியாகத் திருக்கோயில்களில் தமிழ்நாடு அரசு பணி வழங்க வேண்டும்.
தமிழ் ஓதுவார்கள் – தமிழிசை வாணர்கள்
இயல், இசை, கூத்து மூன்றையும் வளர்த்தவை நம் திருக்கோயில்கள். கருத்தரங்குகள், கூத்து நிகழ்வுகளை விழாக் காலங்களில் நடத்த வேண்டும். ஆனால், அன்றாட நிகழ்வாக இசைக் கலைஞர்களின் ஆன்மிகப் பங்களிப்பு இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் இடம் பெற வேண்டும். இசைக் கலைஞர்களை தேவையான அளவிற்கு அமர்த்த வேண்டும்.
குறுங்காடுகள் வளர்க்க வேண்டும்
நம் முன்னோர்கள் கோயிலைச் சுற்றி குறுங்காடுகளை வளர்த்து, சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாத்தார்கள். ஆனால், மக்களாட்சி மாண்பாளர்கள் குறுங்காடுகளை அழித்தார்கள்.
தமிழ்நாடு அரசு நம் திருக்கோயில்களைச் சுற்றி வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் குறுங்காடுகளை வளர்க்க வேண்டும்.
2. போலிச் சாமியார் சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்!
போலிச் சாமியார் சக்கி வாசுதேவின் ஈசா மையம் தமிழ் அறவோரின் துறவு நிலைக்கும் சிவநெறிக்கும் புறம்பான வகையில் பணம் சுருட்டும் ஆன்மிகப் பெருங்குழும வேட்டை நிறுவனமாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கும் தூய இறைமைக்கும் ஒவ்வாத செயலாகும்.
தமிழர்களின் சிவநெறிக்கு எதிரான நிறுவனமாக ஈசா மையத்தைச் செயல்படுத்தி வருகிறார் சக்கி.
ஈசாத் திடலில் தியான லிங்கம் என்ற கட்டமைப்பை நிறுவிட, கோவை மண்டல ஊரமைப்புத் துறை துணை ஆணையர் அவர்களுக்கு எழுதிய அனுமதி கோரும் மடலில் பின்வருமாறு கூறியுள்ளார் சக்கி :
”2. உத்தேசத்தில் இடம்பெற்றுள்ள தியானலிங்கம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தது அல்ல. இங்கு யோகா விஞ்ஞானப் பூர்வமாக வழங்கப்படுகிறது. யோகாவின் முக்கிய அம்சமான தியானம் இவ்வளாகத்தில் வழங்கப்படுகிறது”.
சக்கியின் சார்பாக “சுவாமி ஏகா” என்பவர் இம்மடலில் கையொப்பமிட்டுள்ளார். இம்மடல் ஈசா மையத்தின் அதிகாரப்படியான கடிதத்தாளில் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் முகப்பில் உள்ள நாள் 09.12.2014.
இவ்வாறு, ஈசா மையமும் தியானலிங்கமும் சிவநெறியை – இந்து மதத்தைச் சேர்ந்தவை அல்ல என்று எழுதிக் கொடுத்த சக்கி, சிவநெறி விழாவான மகா சிவராத்திரிக்கு உள்ளே வரும் பக்தர்களிடம் 5 இலட்சம், 50 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் என நுழைவுக் கட்டணம் வசூலித்துப் பணம் சுருட்டுகிறார்.
ஈசா மையத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை எழுப்பி, யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் வாழ்வுரிமையை – பாதைகளை சிதைத்துவிட்டார் சக்கி என்றும், வன உயிரினங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் வனத்துறை குற்றஞ்சாட்டியது.
அரசின் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தனியார்க்குச் சொந்தமான நிலங்களில் வனத்துறையின் அனுமதி இன்றி கட்டடங்கள் எழுப்புவதும், சாகுபடி செய்வதும் குற்றம். இதுபோன்ற பல குற்றங்களை சக்கியின் ஈசா மையம் செய்துள்ளது என்று 19.01.2012 அன்று போலாம்பட்டி வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் கோவை மாவட்ட வன அலுவலர்க்குப் புகார் எழுதியுள்ளார்.
சக்கியுடன் கூட்டுத் தொழில் செய்யும் அரசியல்வாதிகளால் இவை அனைத்தும் செயலற்ற கடிதங்களாக ஆக்கப்பட்டுவிட்டன.
தமிழ்நாட்டு அதிகாரிகளின் இப்போக்கை சுட்டிக்காட்டி இந்திய அரசின் தலைமைச் கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிக்கை தந்துள்ளது,
மேலும் ஈசா மையம் செல்லும் சிறுவர்களையும் சிறுமிகளையும் மன வசியப்படுத்தி, அங்கேயே தங்க வைத்து, ஈசா பெருங்குழும வணிக வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார் சக்கி. இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, முழு உண்மைகளை அறிந்து சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும். ஈசா மையத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்து முறைப்படியான சிவநெறி வழிபாட்டுத் தலமாக மாற்றியமைக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது.
3. அறநிலையத்துறைக்கு வெளியே உள்ள பூசகர்களுக்கும் பெருந்தொற்று நிதி உதவி
இந்து சமய அறநிலையத்துறைக்கு வெளியே உள்ள திருக்கோயில்களில் பூசகர் பணியாற்றுவோர் ஆன்மிகச் சடங்குகள், பூசைகள் குடும்ப நிகழ்வுகள் நடத்துவோர் இப்பெருந்தொற்று முடக்கக் காலத்தில் வருமானமின்றிப் பெரிதும் துன்புறுகின்றனர்.
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், அவர்களுக்கும் எந்த நிபந்தனையுமின்றி தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.
-----------------------------------------
பதாகை முழக்க ஆர்ப்பாட்டம்
-----------------------------------------
மேற்கண்ட மூன்று தீர்மானங்களையும் தமிழ்நாடு அரசிடம் முன்வைத்து வரும் 03.07.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அங்கங்கே தங்களின் வீடுகள் மற்றும் தங்களின் பகுதிகளில் பெருந்தொற்று முடக்க விதிகளைக் கடைபிடித்து, இடைவெளிவிட்டு நின்று கைகளில் கோரிக்கைத் தட்டிகள் – பதாகைகள் ஏந்தி அரைமணி நேரம் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்வதென்று தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளைத் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உடன் தொடங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தெய்வத் தமிழ்ப் பேரவை
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
Leave a Comment