பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை! - பெ. மணியரசன் அறிக்கை!
பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரர்கள் வெட்டிச் சாய்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடந்து கொண்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக் காரர்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் பேராடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூர், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூர், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த சரக்குந்துகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள்.
ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சை பதைக்க வைக்கிறது. பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதிகளில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஏற்றிச் சென்ற சரக்குந்துகளை மறித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து வரும் செய்திகள் நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனாலும் பனைவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த இலங்கை அரசு கூடப் பனை மரங்களை வெட்டத் தடை விதித்துக் கடும் சட்டம் இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சிறை அடைப்பு எதுவுமின்றி பனைவேட்டையர்கள் தப்பி விடுகிறார்கள்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடிப் பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5½ கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், அதில் இன்று 2½ கோடி பனை மரங்கள்தாம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம்! வேர் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும் மரம் அது! நம்முடைய பழைய இலக்கியங்களைப் பதிய வைத்துப் பாதுகாத்தது பனை ஓலைகள்! ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காப்பது பனை வேர்களே!
கிளைகள் இல்லாத பனைமரம் நுங்கு, பதனீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனம்பழம், பனங்கிழங்கு என்று எத்தனை கிளை வகை உணவுப் பொருட்களைத் தன்னுள் பொதிய வைத்துள்ளது. வீடுகட்ட மிக வலுவான மரம் பனை!
தென்னந்தோப்பு வளர்க்கிறோம். ஆனால், பனந்தோப்பு வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள், ஆர்வலர்கள் அங்கங்கே விதைத்த மரங்கள் என்று பனை மரங்கள் வளர்கின்றன.
அவற்றைத் தொழிற்சாலைக் கொள்ளை நோய் அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு. கூடுதலான பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது,
பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும்; அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment