ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா? - பெ. மணியரசன் கேள்வி!



மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா?


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி!


“கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்; ஒரு செங்கல் வைக்கக் கூட விட மாட்டோம்; அங்கு அணை கட்டுவதை எதிர்த்துத் தஞ்சாவூரில் பா.ச.க. 05.08.2021 அன்று 10 ஆயிரம் பேருடன் உண்ணாப் போராட்டம் நடத்தும்” என்று பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக ஆளும் பா.ச.க.வும், தமிழ்நாட்டு பா.ச.க.வும் எதிர் எதிரான நிலை எடுத்திருப்பதன் மூலம், இந்தியா முழுமைக்கும் ஒரே இந்துத்துவா, ஒரே பண்பாடு, ஒரே அரசியல் கொள்கை, ஒரே மொழி என்று பேசி வந்த அதன் ஏகத்துவ நிலைபாடு தவறானது என்று அக்கட்சியே வெளிப்படுத்தி விட்டது. 

அடுத்து, தமிழ்நாடு பா.ச.க. உண்மையாகவே மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறதா அல்லது தமிழ்நாட்டு உரிமைக்காக நிற்பது போல் நடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

அண்ணாமலை உண்மையாகவே, மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறார் என்றால், அவர் முதலில் எதிர்க்க வேண்டியது இந்திய அரசின் நீராற்றல் துறையைத்தான்! ஏனெனில், பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை (ஜல்சக்தித் துறை)தான், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை (DPR – Detailed Project Report) தயாரித்து அனுப்புமாறு 24.10.2018 அன்று கர்நாடகத்திற்கு அனுமதி அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைத்து அதற்கு ஒப்புதல் பெறுமாறு அறிவுறுத்தி, அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 20.01.2019 அன்று அனுப்பியும் வைத்தது. 

இந்த உண்மைகளை ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பிய வினாவுக்கு 26.07.2021 அன்று அளித்த விடையில் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பல தடவை ஒருமித்து, அந்த அணைத் திட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ள நிலையில் – இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்தறை அந்த அணைக்கு அனுமதி தராத நிலையில் – பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அந்த அணைக்கான அனுமதியை மேற்கண்டவாறு வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு பா.ச.க.வும் அதன் தலைவர் அண்ணாமலையும் மேக்கேதாட்டு அணையை அரசியல் நாடகமாக அல்லாமல் உண்மையாக எதிர்க்கிறார்கள் என்றால், அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு நீராற்றல் துறை கொடுத்த அனுமதியை இரத்துச் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அது அனுப்பி வைத்த அறிக்கையை திரும்பப் பெற்று, அதைக் கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இக்கோரிக்கையை இந்திய நீராற்றல் துறைக்கு பா.ச.க. தலைவர் கே. அண்ணாமலை முன்வைக்க வேண்டும். 

கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், ஒன்றிய நீராற்றல் துறையையும் கண்டித்து கே. அ்ண்ணாமலை உண்ணாப் போராட்டம் நடத்தினால் அதுவே உண்மையான போராட்டமாகும். கர்நாடக அரசை மட்டும் கண்டித்து உண்ணாப் போராட்டம் நடத்தினால் கட்சி வளர்ப்பதற்காக தமிழ்நாடு பா.ச.க. நடத்தும் நாடகம் என்றே தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.