ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்! ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை
தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத்தைக் கத்தரித்துக் கொலை செய்தார்கள். தமிழ்நாட்டிலோ நீட் தேர்வே கில்லட்டின் கொலைக் கருவி ஆகிவிட்டது.

சில நாட்களுக்கு முன் மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நேற்று (14.9.2021) அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடியைச் சேர்ந்த  மாணவி கனிமொழி, இன்று (15.9.2021) காட்பாடி அருகே தலையாரம்பட்டு என்ற ஊரைச்  சேர்ந்த மாணவி செளந்தர்யா என்று வரிசையாக நம் தமிழ்ப் பிஞ்சுகளை நீட் பூதம் விழுங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அண்ணாமலை வரை உள்ள ஆரியத்துவா வாதிகளுக்கு இவ்வுயிர்ப் பறிப்புகள் அதிர்ச்சியை அளிக்காது. அவர்கள் பாரதமாதாவுக்குக் கொடுத்த இரத்தப்பலி என்று உள்ளூர உவப்பார்கள். ஆனால் நாம் அனிதா தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 16 பிள்ளைகளை நீட் பூதத்தின் வாயில் கொடுத்து விட்டு அன்றாடம் துடிக்கிறோம்! இந்த நீட் கொலைகள் தொடர அனுமதிக்கலாமா?

தமிழ்நாடு அரசு 13.9.2021 அன்று, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வை நடத்தாமல் விலக்கு அளித்து, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது. பா.ச.க. தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தோர் ஆதரித்து, இந்த முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இதுபோல் சல்லிக்கட்டு உரிமைக்காகவும், நீட் தேர்வு விலக்குக்காகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளின் கதி என்ன? தில்லிக் காலனி ஆதிக்க அரசின் குப்பைத் தொட்டிக்குத்தான் அவை போயின.

இந்த சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு ஆளுநருக்குத்தான் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி வைப்பாராம், குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவை ஆய்வுக்கு அனுப்பி வைப்பாராம். மோடி – அமித்சா வகையறா முடிவு செய்வார்களாம்.

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கூட இந்தக் கொடுமை இல்லை. அப்போது மாநில சட்டமன்றத்தின் வசம் கல்வி அதிகாரம் இருந்தது. “குடியரசு” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் குடிகளின் அரசில் கல்வி, மாநில சட்டப் பேரவை அதிகாரத்தில் இல்லை.

புதிய ஆளுநராக ஆர்.என்.இரவி 18.9.2021 அன்று தமிழ்நாட்டில் பதவி ஏற்கவுள்ளார். இந்தியக் காவல் துறையில் உளவுப் பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆர்.என்.இரவி. ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருந்து, அம்மாநில மக்களிடம் கெட்ட பெயர் வாங்கித் தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்.
 
கடந்த காலப் பட்டறிவுகளிலிருந்து தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும், நீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் புதிய உத்திகளை வகுத்து நீட் தேர்வு விலக்கு முன்வடிவுக்கு இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புதிய ஆளுநர் பதவி ஏற்ற பின் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். ஒன்று அவர் கையொப்பம் இட்டு சட்டமாக அறிவிக்க வேண்டும். அல்லது கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டு நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமக்கு வந்த மூன்று நாளில் கையொப்பமிட்டு சட்டமாக்க வேண்டும். 2017-இல் சல்லிக் கட்டு சட்ட முன்வடிவைச் சட்டமாக்கிடக் கோரி தமிழர்கள் மெரினாவிலும் மாவட்டங்களிலும் இலட்சம் இலட்சமாய்- இரவு பகலாய்த் தொடர் போராட்டம் நடத்திய போது அவசரம் அவரமாகக் குடியரசுத் தலைவர் கையொப்பம் வாங்கி, சட்டமாக்கினார்கள்.

மேற்கண்ட முறையில் தமிழ்நாடு ஆளுநரும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டியதில்லை என்று விலக்களிக்கும் சட்ட முன்வடிவைச் சட்டமாக்கவில்லை என்றால் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி, இந்திய அரசுக்கு எதிராக, சனநாயக வடிவில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கு நூறு செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், சட்டமன்றத்தில் முன்வடிவு நிறைவேற்றியதோடு, தன் கடமை முடிந்து விட்டது என்று தி.மு.க. ஆட்சி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இதில், தி.மு.க.வைக் குறை கூறி மோடி ஆட்சிக்கு சேவை செய்யும் பணியில் அ.இ.அ.தி.மு.க. இறங்கக் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகள் ஆதரவை நீட்டுக்கு எதிராக ஒருங்கு திரட்ட முயல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு இந்திய அரசு ஒப்பம் அளிக்கும் வரையில், இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.