ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்! - பெ. மணியரசன் அறிக்கை!திராவிடக் களஞ்சியத்தை அரசு 
வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


“திராவிடக் களஞ்சியம்” குறித்த விளக்கத்தைத் தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (02.09.2021) சட்டப்பேரவையிலும், வெளியில் ஊடகங்களிடமும் விளக்கியுள்ளார். சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டவில்லை; கால்டுவெல் காலத்திலிருந்து தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட காலம் வரை உள்ள 150 ஆண்டு கால வரலாற்றில் திராவிடச் சிந்தனையாளர்களின் கருத்துகள், மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றை அரசு வெளியிட இருக்கிறது. அத்தொகுப்பின் தலைப்புதான் “திராவிடக் களஞ்சியம்” என்று கூறியுள்ளார். (புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, 02.09.2021).

“திராவிடக் களஞ்சியம்” குறித்து இப்போது அமைச்சர் கொடுத்துள்ள விளக்கத்தில், ஒரு வரியாவது கூறி, “திராவிட இயக்கச் சாதனைகள் பற்றிய நூல்” என்று குறிப்பிட்டிருக்கலாம். இதுகுறித்து மக்கள் செய்தித் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பின்வருமாறு இருந்தது : “சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்”. 

இதில், “திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும்” என்று இருக்கிறது. ஆனால், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள மானியக் கோரிக்கை அறிக்கை எண் 46இல், “திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும்” என்று மாற்றிக் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த சொற்றொடர் அமைப்புக் குழப்பத்தினால் சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டது. நல்லவேளை, அப்படி இல்லை என்று விளக்கம் கொடுத்தீர்கள், நன்றி! தொலைக்காட்சியில் நீங்கள் விமர்சித்ததுபோல் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க அலையும் நபர் நான் இல்லை. தமிழர்களின் மரபான இனத்தை மாற்றிக் குழப்புவது தி.மு.க.தான்! 

பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மக்கள் அணிவகுப்பைத் திரட்டி, தமிழ்த் தேசிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற கொள்கையுடையது எங்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

இப்போது நீங்கள் சொல்லி இருக்கிற விளக்கத்தின்படி பெரியார், அண்ணா, கலைஞர் முதலிய தி.க. – தி.மு.க. தலைவர்களின் கட்டுரைகள், கவிதைகள், அவர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதிய படைப்புகள், புகழுரைகள் மற்றும் தமிழ் மொழியை – தமிழர் பண்பாட்டை - தமிழர் தனித்துவ வரலாற்றைத் திராவிடம் என்ற பலமொழிக் கூட்டுக் கலவைக்குள் திணித்து எழுதிய அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இப்பொழுதுள்ள பாலகிருஷ்ணன் போன்றவர்களின் ஆய்வுரைகள் முதலியவை இடம்பெறும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழின வரலாற்றை ஒரு பகுதியை கால்டுவெல்லின் காலத்திலிருந்து தொடங்குவது எப்படிப்பட்ட வரலாற்று அறிவு என்பது புரியவில்லை. கி.மு. – கி.பி. என்பதுபோல தி.மு.க., கா.மு. – கா.பி. என்று வரையறுத்துக் கொண்டதோ? 

ஆரிய – சமற்கிருத ஆதிக்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவது தமிழினம்! வர்ணாசிரம தர்மத்தை தமிழர் ஆன்மிகம் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பை தமிழினத்தில் முதல் முதலாகத் தொடங்கியது திராவிட இயக்கம் என்பதுபோன்ற பிழையான வரலாற்றுத் திரிபுகள் வேண்டாம்! ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அணியுடன் கூட்டணி சேர்ந்து ஒன்றிய அமைச்சரவையில் பங்கு வகித்ததும், தமிழ்நாட்டில் அக்கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்ததும் தி.மு.க. வரலாற்றில் உண்டு! எதிர்காலத்தில் இக்கூட்டணி மீண்டும் உருவாகாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை!

“திராவிடக் களஞ்சிய”த் தொகுப்புகளில், தமிழைத் திராவிட மொழிகளுள் ஒன்று என்றும், தமிழரைத் திராவிடர் என்றும் வலியுறுத்தும் தமிழின மறைப்புதான் நடைபெறவுள்ளது. மற்ற மொழிகளுக்குத் தாய்மொழியாக உள்ள தமிழின் தொன்மை – ஆற்றல் ஆகியவற்றை மறைக்கும் செயல்தான் இதனால் மிஞ்சும். திராவிட மொழிப் பட்டியலில் கூறப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர் மகிழ்ச்சி அடைவர். 

கடந்தகாலத் தி.க. – தி.மு.க. கட்சிகளின் “சாதனைகள்” மற்றும் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாக நீங்கள் கருதுபவற்றை மக்கள் வரிப் பணத்தில் நூல்களாக வௌயிடுவது சரியா என்பதையும் தி.மு.க. தலைவர்கள் “நெஞ்சுக்கு நீதி”யுடன் முடிவு செய்ய வேண்டும். இத்தொகுப்பைத் தி.மு.க. வெளியிடுவதே சரி! 

தி.மு.க. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு சமூக, பொருளியல் வளர்ச்சி வடமாநிலங்களைவிட அதிகமாக ஏற்பட்டது; அதற்கான சூத்திரம்தான் “திராவிட மாடல்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒன்றை மட்டும் கேட்கிறேன். கடந்த ஆறாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்தக் காலத்தில், தமிழினம் வடநாட்டவர்களைவிட வேளாண்மை - தொழில் – வணிகம் – நகர நாகரிகம் – சமூகநீதி முதலியவற்றில் பின்தங்கி இருந்தது? வெள்ளைக்காரன் ஆட்சியிலும் சரி, அவன் வெளியேறிய பிறகு வந்த காங்கிரசு ஆட்சியிலும் சரி மேற்கண்டவற்றில் வடமாநிலங்களை விடத் தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முன்னேறித்தான் இருந்தது. இதற்கென்ன  தனித்துவமான “திராவிட மாடல்” பங்களித்தது? 

எவ்வளவு மோசமான ஊழல், பதவிவெறி அரசியல், தன்னல அரசியல், காங்கிரசு – பா.ச.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி போன்றவை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்   களிநடம்புரிந்தாலும் வடமாநிலங்களை விடத் தமிழ்நாடு இன்றும் முன்னேறி இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. 

இவற்றில் முதன்மையானது, வரலாற்று அடிப்படையில் தமிழினம் முன்னேறி இருந்த பின்னணி, அறிவு – ஆற்றல் – நேர்மை முதலியவற்றில் மரபுவழி உள்ளாற்றல் தமிழர்களுக்கு இருப்பது என்பதே இன்றைய முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.