ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு! - பெ. மணியரசன் இரங்கல்!



தமிழ் இன உணர்வுப் பாவலர்  
புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இன்று (08.09.2021) காலமான செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்டு வந்தவர் புலமைப்பித்தன்! உண்மையான தமிழின உணர்வு நிரம்பிய நெஞ்சத்துக்கு சொந்தக்காரர். 

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து, தமிழீழ விடுதலைப் போருக்கு தமிழ்நாட்டில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. முழுமையாக ஆதரவு கொடுக்கப் பாடுபட்டவர். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும், மற்ற தளபதிகளும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, அவர்கள் புலவர் புலமைப்பித்தன் இல்லத்திற்கு உரிமையோடு சென்று தங்குவதும் உணவருந்துவதும் வழக்கமாக இருந்தது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடு நெருக்கமான தொடர்பு வைத்து, பல உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வர் புலவர்.

இந்திய அரசின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து குவித்தபோது, கொதித்தெழுந்து போர் நிறுத்தக் கோரிக்கை இயக்கங்களில் பங்கு பெற்றார். 

2009 பேரழிவுக்குப் பிறகு ஈழத்தமிழர்களுடைய துயர் துடைக்கவும் இனப்படுகொலைக் குற்றவாளிகளைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஏற்றவும் நடந்த பல்வேறு முயற்சிகள் - இயக்கங்கள் முதலியவற்றில் முதன்மையாகப் பங்கு கொண்டார் புலமைப்பித்தன். அவ்வாறான  செயல் பாடுகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் புலவர் புலமைப்பித்தன் அவர்களும் கள நிகழ்வுகளில் கூட்டாகச் செயல்பட்டிருக்கிறோம். 

தமிழீழ மக்கள் அன்றாடம் கொன்று குவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குப் போர் நிறுத்தம் கோரி தன்னையே எரித்துக் கொண்ட தழல் ஈகி முத்துக்குமார் சிலையை தமிழ்த்தேசியப் பேரியக்கம், தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி - சாணூரப்பட்டியில் திறந்தபோது, அப்போதைய தமிழ்நாடு அரசு தடை செய்தது. அந்தத் தடையைக் கண்டித்து அதே நாளில் (16.5.2010) அதே ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார்.  

சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தைத் திரைப்பாடல் வாயிலாக வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா புலமைப்பித்தன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்! அவரது மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.