ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தனிநபர் வெறுப்பால் பழனிராசன் கர்நாடகத்தின் ஆதரவாளர் ஆகக்கூடாது! க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள், 8.2.2022 அன்று மேக்கேதாட்டு அணை குறித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் தலைப்பு – “மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!”. இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில ஏடுகளில் பிப்ரவரி 9, 10 ஆகிய நாட்களில் வந்தது.

இந்த அறிக்கையை உண்மைக்கு மாறாக திரித்துக் கூறப்பட்டுள்ள செய்தி என்று தோழர் சு. பழனிராசன் (Subbian Palanirajan)  அவரது முகநூல் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். “அமைச்சரின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் வெட்டி ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு, தவறான பொருள் கூறி, “மேக்கேதாட்டு அணைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்” என்று தலைப்புக் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, தமிழக விவசாயிகளைக் குழப்ப வேண்டிய அவசியம் என்ன? தினந்தந்தியில் வந்திருக்கும் செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த மோசடி புரியும்” என்று எழுதியுள்ளார்.

இக்கூற்றுக்கு அவர் சான்று காட்டுவது “தினந்தந்தி” ஏடு (8.2.2022) வெளியிட்டுள்ள செய்தியின் தலைப்பு – “சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்துக்கு அனுமதி – மத்திய அரசு திட்டவட்டம்!”. அதில் உள்ளே வரும் செய்தி :

“சுற்றுச்சூழல் அனுமதியைப் பொறுத்தவரை, தமிழகம் – கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான முடிவு ஏற்பட்டால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று நிபுணர் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது”.

“அதேநேரத்தில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் மேகதாது அணையின் உத்தேச திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின்னரே குறிப்பு விதிமுறைகளுக்கான முன்மொழிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும்” என்று தினந்தந்தி செய்தியின் அடுத்த வரிகள் வருகின்றன.

“தினத்தந்தி”யின் மேலே உள்ள வரிகளில் இரு மாநிலங்களும் இணங்கினால் மட்டுமே மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியதாகப் போட்டுள்ளது தினத்தந்தி. அதற்கு அடுத்த வரிகளில் ஒன்றிய நீர்வளத்துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் அணையை ஏற்றுக் கொண்ட பின்னரே சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது ஒப்புதலுக்கான முன்மொழிவு பற்றி முடிவு செய்யும் என்று போட்டுள்ளது. இச்செய்தி வெளியீடு குழப்பமாக இருந்ததால், மக்களவையில் 7.2.2022 அன்று எழுத்து வடிவில் முன்வைக்கப்பட்ட ஒன்றிய இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அவர்களின் விடை அளிப்பின் அசல் நகரைப் பெ.ம. எடுத்துப் பார்த்தார். (அதன் புகைப்பட வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).

அந்த அசல் விடையில் “தினத்தந்தி” வரிசைப்படுத்திய வடிவில் மேலே காட்டப்பட்ட இருவகைச் செய்திகளும் அடுத்தடுத்து இல்லை!

அமைச்சர் விடையின் அசல் நகலில், முதல் பத்தியின் இறுதிப் பகுதியில், “சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு அணை குறித்து விரிவாக விவாதித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள சிக்கல்களுக்கு இணக்கமான தீர்வு வர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்பிறகு, கர்நாடகத்தில் ஐந்து கிராமங்களும் 4,966 ஏக்டேர் காடுகளும் நிலமும் மூழ்கிவிடும் என்றெல்லாம் கூறும் அமைச்சர், அதற்காக அனுமதி மறுக்கப்படும் என்று ஒரு வரி கூடக் கூறவில்லை!

கடைசிப் பத்தியில் பின்வருமாறு கூறுகிறது :

”சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை அமைச்சகம், (அணை குறித்து) இப்பிரச்சினையெல்லாம் நீராற்றல் (ஜல்சக்தி) அமைச்சகத்துடன் கலந்தாய்வு செய்தது. அதன்பிறகு பின்வரும் முடிவுக்கு வந்துள்ளது. மேக்கேதாட்டு அணைக்கான செயல் திட்ட வரைவு அறிக்கை நீராற்றல் துறையும் காவிரி மேலாண்மை ஆணையமும் ஏற்றுக் கொண்ட பின் சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை அமைச்சகம் ஏற்பது குறித்துப் பரிசீலிக்க முடிவெடுத்துள்ளது”.

”The MoEF&CC, after examination of the issues and in consultation with Ministry of Jal Shakti (MoJS), has decided to consider the proposal for grant of Terms of Reference (ToR) to Mekedatu Balancing Reservoir and Drinking Water Projectonly after acceptance of Draft Prefeasibility Report (DPR) of the Mekedatu project by the Ministry of Jal Shakti (MoJS) and Cauvery Water Management Authority (CWMA)”.

இதில் எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்த பிறகு, சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை அமைச்சகம் மேக்கேத்தாட்டுக்கு ஒப்புதல் கொடுக்கப் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கூறவில்லை.

நீராற்றல் துறை ஏற்கெனவே ஒப்புதல் கொடுத்துவிட்டது என்ற உண்மையையும் அமைச்சர் நேரடியாகக் கூறவில்லை. ஆனால், அதனோடு விவாதித்த பிறகுதான் மேக்கேதாட்டு அணை அனுமதி பற்றிப் பரிசீலிக்கத் தமது அமைச்சகம் முடிவு செய்தது (decided to consider) என்ற உண்மையைக் கூறிவிட்டார்.

நடைமுறையில் பாக்கியாக உள்ளது காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே! அதற்காகத்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் அதன் தலைவரால் வலிந்து, “மேக்கேத்தாட்டு ஒப்புதல்” என்ற பொருள் கூட்டத்தின் பொருள் நிரலில் சேர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகளின் எதிர்ப்பால் – அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் வைக்கப்படுகிறது.

இப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்தர குமார் ஹல்தர் இதற்கு முன் நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர். அவர்தான் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் கொடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அதனை அனுப்பி வைத்தவர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அரசு மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி தர அணியமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பால் அது அங்கு இன்னும் அனுமதி பெறவில்லை. இந்த அபாயம் பழனிராசனுக்குப் புரியவில்லை என்றால் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே ஏமாவதி, ஏரங்கி, கபினி உள்ளிட்ட பல அணைகளைக் காவிரிக்கான நீர்வரத்து ஆறுகளில் கர்நாடகம் கட்டிச் செயல்படுத்திப் பின்னர் இந்திய அரசின் ஏற்பைப் பெற்றது.

இப்பொழுது மீண்டும் இந்திய அரசின் நேர்முக அல்லது மறைமுக ஆதரவுடன் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்காத வகையில் தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி உருவாக வேண்டும் என்ற அக்கறையுடன்தான் – ஒன்றிய அமைச்சரின் மக்களவை உரையில் உள்ள உண்மைகளை எடுத்துரைத்துத் தலைவர் பெ.ம. எச்சரித்துள்ளார். தோழர் சு. பழனிராசன் தனிப்பட்ட வெறுப்பு - பொறாமை உணர்ச்சிக்குப் பலியாகித் தம்மையும் அறியாமல், கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் கூடாது!

மோடி அரசு மேக்கேதாட்டு அணையை அனுமதிக்காது என பழனிராசன் அவ்வளவு நம்பிக்கையோடு இருக்கிறாரா?

-
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
11.02.2022

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.