ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஹல்தருக்கு எதிராக_ முன்னரே தடைசெய்த காவல்துறைக்கு பெ. மணியரசன் கண்டனம்







 மேக்கேதாட்டு அணையை அனுமதிக்கத் துடிக்கும் ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்ட முன்வந்தோரைக் காவல்துறை முன்கூட்டியே கைது செய்தது கண்டனத்திற்குரியது!

=======================================

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

பெ. மணியரசன் கண்டனம்!

=======================================


காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு சட்ட விரோதமாக முயன்று கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், இன்று (17.06.2022) மாலை கல்லணையை பார்வையிட வந்தபோது, காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த உழவர்களும், தமிழர் உரிமை உணர்வாளர்களும் கருப்புக் கொடி காட்ட முனைந்து முழக்கமிட்டனர். அவர்களைக் காவல்துறை ஹல்தர் வருவதற்கு முன்பே, கைது செய்து திருக்காட்டுப்பள்ளி திருமண மண்டபத்தில் அடைத்தது. 


காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த. மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை. தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச. கலைச்செல்வம், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி. தென்னவன், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், மன்னார்குடி கண்ணன் (காவிரி உரிமை மீட்புக் குழு), ஐயனாபுரம் சி. முருகேசன் (தமிழர் தேசிய முன்னணி), வெள்ளாம்பெரம்பூர் துரை இரமேசு (காவிரி உரிமை மீட்புக் குழு), சு. பழனிராசன் (சமவெளி விவசாயிகள் சங்கம்), வழக்கறிஞர் கென்னடி (மா.லெ. திருச்சி) உள்ளிட்ட 40 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோர் திருக்காட்டுப்பள்ளியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  


கருப்புக் கொடி காட்ட வந்தோர் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, கல்லணை பயணிகள் விடுதியிலிருந்து வெளியே வந்த ஹல்தரின் மகிழுந்துக்கு முன்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் திருச்சி இனியன், தமிழரசன், குடந்தை தோழர்கள் கி. பிரபாகரன், பா. திருஞானம், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் க. தீந்தமிழன் ஆகிய 6 தோழர்கள் கருப்புக் கொடி காட்டி முழக்கமெழுப்பினர். அப்போது காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, தோகூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 


தமிழ்நாடு காவல்துறை மிகவும் கெடுபிடி செய்து, கருப்புக் கொடி காட்டும் சனநாயக உரிமையை மறுத்து, முன்கூட்டியே உழவர்களையும், உணர்வாளர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டது. தமிழ்நாட்டுக் குடிநீராகவும், பாசன நீராகவும் 22 மாவட்டங்களுக்குப் பயன்படக் கூடிய காவிரி ஆற்றை மற்றுமொரு பாலாறாக மாற்றும் நோக்கத்துடன், இந்திய அரசும், அதன் அதிகாரியான ஹல்தரும் சட்ட விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிக்கு சனநாயக வழியில் கல்லணையில் கருப்புக் கொடி காட்டக் கூட அனுமதிக்கவில்லை தமிழ்நாடு அரசு! 


இந்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வளவு பறித்தாலும், அதை எதிர்ப்பது போல் பாவனை காட்டிவிட்டு, இந்திய அரசுக்கு விசுவாசம் காட்டும் வகையில் உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதுதான் மு.க. ஸ்டாலின் அவர்களின் “திராவிட”  மாடலோ? தமிழ்நாடு அரசின் இந்த சனநாயக விரோத நடவடிக்கைகளைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறேன். 


==========================

செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

==========================

பேச: 98419 49462, 94432 74002

==========================

Fb.com/KaveriUrimai

#SaveMotherCauvery

www.kaveriurimai.com

==========================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.