தமிழர் மரபு வேளாண்மை மாநாடு! தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்கக் கோரி
அன்புமிக்க உழவர்களே, தமிழர்களே!
“நவீனம்”, “வளர்ச்சி” என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி உழவர்களைக் கடனாளியாக்கியது. வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றி வருகிறது.
நீர், நிலம், காற்று நஞ்சானது. உண்ணும் உணவிலும்; நஞ்சுகலந்தது. ஏனெனில், பயிர்களின் மீது தெளிக்கும் இரண்டு விழுக்காடுதான் பூச்சிகளைத் தாக்கியது, மீதம் அனைத்தும் வேளாண் விளை பொருட்களில் தங்கியது.
வீரிய வித்துக்கள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ வறட்சியையோ நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கியது.
இவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் புதியபுதிய நோய்கள் வந்த…
தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்கக் கோரி
தமிழர் மரபு வேளாண்மை மாநாடு!
30-07-2022 ஞாயிறு மதியம் 3.00 முதல் இரவு 8.00 வரை.
இரத்தின மகால், பெண்ணாடம்.
அன்புமிக்க உழவர்களே, தமிழர்களே!
“நவீனம்”, “வளர்ச்சி” என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி உழவர்களைக் கடனாளியாக்கியது. வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றி வருகிறது.
நீர், நிலம், காற்று நஞ்சானது. உண்ணும் உணவிலும் நஞ்சுகலந்தது. ஏனெனில், பயிர்களின் மீது தெளிக்கும் பூச்சிக்கொல்லிகளில்; 2 விழுக்காடுதான் பூச்சிகளைத் தாக்கியது, மீதம் அனைத்தும் வேளாண் விளை பொருட்களில் தங்கியது.
வீரிய வித்துகள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ வறட்சியையோ நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கின.
இவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் புதியபுதிய நோய்கள் வந்தன.
இவற்றை வாய்ப்பாகக் கொண்டு மக்கள் உடல்மீது தனியார் மருத்துவ மனைகளும் மருந்துக் கம்பெனிகளும் இலாப வேட்டையாடின.
உயிர்ப்போடிருந்த மண் மலடாக்கப்பட்டது. தவளை, நாரை, கொக்கு, குருவிகள் ஓசையால் சூழப்பட்டிருந்த வயல்களில் பயங்கர அமைதியே நிலவுகிறது.
வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு - இலாப விலை கிடைப்பதற்கு – தமிழ்நாட்டு சந்தையைத் தமிழர்களுக்கே பாதுகாத்துக் கொள்வதற்குப் போராடுகிறபோதே, பசுமைப் புரட்சியின் அழிவிலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்ள தமிழர் மரபு வேளாண்மைக்கு மாற வேண்டிய தேவை உழவர்களுக்கு ஏற்பட்டது.
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை சொல்லிச் சென்ற உயிர்ம வேளாண்மையை – நமது தமிழ் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த் தெடுத்த ஐந்திணைகளுக்கு ஏற்ற தற்சார்பு வேளாண்மையை - மீட்டெடுக்க வேண்டிய தேவையை முற்போக்கு உழவர்கள் உணரத் தொடங்கினார்கள்.
சூழலுக்கு இசைவான வளங்குன்றா வேளாண்மையை இலாபம் தரும் தொழிலாக வளர்த்தெடுக்க அவர்கள் முயன்றார்கள்.
இந்த முயற்சியில் தமிழ்நாட்டு உழவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் வேளாண் பேரறிஞர், மரபு வேளாண்மைப் போராளி ஐயா நம்மாழ்வார் விளங்கினார். அவருடைய வழிகாட்டுதலில் தமிழர் மரபறிவைக் கொண்டு உயிர்ம வேளாண்மை முயற்சிகள் இன்று விரிவடைந்துள்ளன.
ஆயினும், அரசின் பங்கேற்பும் ஆதரவும் இருந்தால்தான் இந்தத் தற்பு* வேளாண்மையை பெருமளவு பாதுகாத்து வளர்க்க முடியும்.
இன்று சூழல்பேரழிவும், புவி வெப்பமாதல் சிக்கலும், உழவர் தற்கொலையும் அச்சுறுத்திக் கொண்டுள்ள சூழலில், உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் கர்நாடகம் ஆந்திரம், கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து செயல்படுத்திபடுத்தி வருகின்றன.
தமிழர் மரபு வேளாண்மையில் ஈடுபட்டுவரும் உழவர் குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், தமிழ்நாடு அரசு இதுவரை உயிர்ம வேளாண்மைப் பாதுகாப்புக் கொள்கை எதையும் அறிவிக்கவில்லை.
இவற்றின் காரணமாக வேளாண்மையைவிட்டு உழவர்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தி வேளாண்மையை இலாபகரமான தொழிலாகவும், வளங்குன்றா வேளாண்மையாகவும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்து செயல்படுத்த வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
இதனை வலியுறுத்தவே தமிழக உழவர் முன்னணி தமிழர் மரபு வேளாண்மை மாநாட்டை நடத்துகிறது.
வேளாண்மையை வளம் குன்றாத-இலாபகரமான-மதிப்புமிக்க தொழிலாகப் பாதுகாப்பதற்கு, கிராமங்களில் இருந்து நகரம் நோக்கிய புலம்பெயர்வை மட்டுப்படுத்துவதற்கு, நிலத்தின் உயிர்ம வளத்தையும், உற்பத்தித் திறனையும் வளர்ப்பதற்கு, உழவர் தற்சார்பையும் அதன் வழியாக தமிழ்நாட்டின் தற்சார்பையும் உறுதிப்படுத்துவதற்கு, நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு நஞ்சில்லா உணவும் வேளாண் உற்பத்திப் பொருட்களும் கிடைப்பதற்கு, உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிப்பு மிகவும் தேவையாகும்.
தமிழர் மரபு அறிவில் காலூன்றி நின்று உயிர்ம வேளாண்மை தொடர்பான நவீன அறிவியல் அறிவையும் ஏற்று வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் உயிர்ம வேளாண்மைக் கொள்கை அமைய வேண்டும்.
வேளாண்மையோடு ஆடுமாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற வேளாண்மைத் துணைத் தொழில்களும் ஒன்றிணைந்த திட்டமாக உயிர்ம வேளாண் கொள்கை இருக்க வேண்டும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழின மரபு அறிவு இந்த மண்ணோடு இயைந்து உருவாக்கிய மரபு விதைகளை உற்பத்தி செய்யும் விதைகிராமங்கள், விதைவங்கிகள், விதைக்கூட்டுறவு அமைப்புகள், தமிழர் மரபு வேளாண்மை சுயஉதவிக் குழுக்கள் அவற்றிற்குரிய உயிர்ப்பு நிதி, உயிர்ம வேளாண் விளை பொருட்களை சேமித்துப் பாதுகாத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கான தற்சார்பு கட்டமைப்புகள், உயிர்ம விளைபொருள் சான்றளிப்பு, உயிர்ம வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கப்பட்ட வள ஆதாரங்களாக அறிவித்தல், பன்மைப் பயிர் சாகுபடி, அரசு விழாக்களில் மரபு உணவுப்பண்டங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் புவிகாப்பிலும் பங்காற்றுவதால் தமிழர் மரபு விளை பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு விலை என்ற வகையில் கூடுதல் கொள்முதல் விலை வழங்குதல், திணை சார்ந்த தமிழர் மரபு வேளாண்மையை பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை பாடத்திட்டத்தில் சேர்த்தல், இரசாயன வேளாண்மையிலிருந்து தமிழர் மரபு உயிர்ம வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு குறைந்தது முதல் மூன்றாண்டுகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடு, உள்ளிட்டவை அரசின் உயிர்ம வேளாண் கொள்கையில் உள்ளீடுகளாக விளங்க வேண்டும்.
உயிர்ம வேளாண் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்துவதற்கு உரிய நிதியும் அதிகாரமும் பெற்ற உயர்மட்ட உயிர்ம வேளாண்மை வாரியமும் ஊராட்சி வரையிலும் அதற்குரிய கீழ்மட்ட அமைப்புகளும் நிறுவப்பட வேண்டும்.
இவை குறித்து விவாதித்து முடிவு செய்து அரசுக்கு வலியுறுத்தவே இந்த மாநாடு.
Leave a Comment