ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்க!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட்  துப்பாக்கிச் சூடு:

காவல்துறையினர் மீது 

கொலை வழக்குப் பதிவு செய்க!

======================================

தோழர் கி. வெங்கட்ராமன்,பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

======================================

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய அமைதிவழிப் போராட்டத்தில் கொடிய முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை வெறியாட்டம் ஆடிய காவல்துறை அதிகாரிகளின் மீது குற்ற வழக்குகள் தொடுப்பதோடு, துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி அருணா செகதீசன் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பது கசிந்து வெளியாகி இருக்கிறது. 


அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை வெளியிடும் நச்சுப் புகை மற்றும் கழிவுகள் காற்றையும், நீரையும் கெடுத்து தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பலவகைப் புற்றுநோய்களையும், தொடர் ஒவ்வாமை நோய்களையும் விளைவித்தது.


இதனைப் பட்டறிவால் உணர்ந்த மக்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடினர். அவற்றின் குவிமையமாக கடந்த 2018இல் மார்ச்சு மாதம் தொடங்கி இடைவிடாத 100 நாள் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் உச்சமாக 2018 மே 22 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியான அணிவகுப்பு நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என அறிவித்தார்கள். 


இப்போராட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடலோடி மீனவ மக்கள் நடத்தி வந்தாலும், அது மெல்லமெல்ல அனைவரையும் ஒருங்கிணைத்த மக்கள் திரள் போராட்டமாக மலர்ந்தக்கது. கட்சி - மதம் - சாதி கடந்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பு வழியாக இப்போராட்டம் நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. போராட்டக் குழுவின் அழைப்பை ஏற்றுத்தான் மே 22 மக்கள் பேரணியும் நடைபெற்றது. 


அமைதியான அந்த மக்கள் போராட்டத்தின் மீது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசின் காவல்துறை கண்மண் தெரியாத அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் உச்சமாக துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைவெறியாட்டம் நடத்தியது. மே 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் காவல்துறையின் துப்பாக்கிச் சூடு நடைபெற்று 13 பேர் படுகொலைக்கு உள்ளானார்கள். கொடுங்காயமுற்ற ஒருவர் நீண்டநாள் மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டு அது பயனின்றி மரணமடைந்தார். 


அப்பாவி மக்களின் மீது தாங்கள் நடத்திய இந்தக் கொலைவெறியாட்டம் மக்களை அச்சுறுத்திவிடும் என்று ஆட்சியாளர்கள் போட்டக் கணக்கு படுதோல்வி அடைந்தது. 


தாங்கள் உயிராக நேசித்த அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்ட போதும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடாமல் பிணத்தை வாங்க மாட்டோம் என்று அம்மக்கள் மிக உறுதியாக நின்றார்கள். 


எடப்பாடி அரசு வேறுவழியின்றி பணிந்தது. 2018 மே 28 அன்று, அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடி சீல் வைக்கப்பட்டது. 


உலகம் முழுவதும் அண்மைக்காலமாக சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், எந்த சூழல் பாதுகாப்புப் போராட்டத்திலும் இல்லாத வகையில் தூத்துக்குடியில் தான் இவ்வளவு கொடிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு, 14 தமிழர்கள் உயிரீகம் செய்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி அரசு நடத்திய இந்தக் கொலை வெறியாட்டம் உலகத்தையே அதிர வைத்தது. 


வழக்கம்போல, எடப்பாடி அரசு பொய்க் குற்றச் சாட்டுகளை அடக்கி அமைதியான மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தி விட்டார்கள் என்று கதை கட்டியது. துப்பாக்கிச் சூட்டையும், மக்கள் படுகொலையையும் ஞாயப்படுத்தியது. 


ஆயினும், நீதி கேட்டு மக்கள் நடத்தியப் போராட்டங் களும், மனித உரிமை அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகளும் எடப்பாடி அரசைப் பணிய வைத்தது. நீதிபதி அருணா செகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அ.தி.மு.க. அரசு அமர்த்தியது. 


இதற்கிடையில், மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக “மக்கள் கண்காணிப்பகம்” அமர்த்திய பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு, விரிவாக எல்லாத் தரப்பையும் விசாரித்து, தகவல்களை சேகரித்து உண்மை அறிக்கையை வெளியிட்டது. உண்மை வெளிவந்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி அரசு மிகக் கவனமாக இருந்தது. எனவே, மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்ட உண்மை அறியும் அறிக்கையை கன்னியாகுமரி தொடங்கி மதுரை வரையிலும் எந்த அச்சகமும் அச்சடித்துத் தரக் கூடாதென வாய்மொழி உத்தரவுப் பிறப்பித்து, அனைத்து அச்சகங்களையும் மிரட்டியது. 


மக்கள் கண்காணிப்பகத் தோழர்கள் மிகுந்த துன்பப்பட்டு, கடுமையான முயற்சிக்குப் பிறகு உண்மை அறியும் குழுவின் அறிக்கையை அணியப்படுத்தினார்கள். அதை வெளியிடுவதற்கும் பெரும் தடைகளை காவல்துறை ஏவிவிட்டது. கடைசியில், மிகக் கொடுமை யான கெடுபிடிகளுக்கும், தடைகளுக்கும் இடையில் தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்கத் திருச்சபை ஆயர் மண்டபத்தில் அந்த அறிக்கை மக்கள் முன்னால் வெளியிடப்பட்டது. 


மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் அறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 


இன்னொருபக்கம், உச்ச நீதிமன்றத்திலும், வெவ்வேறு நீதிமன்றங்களிலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன. 


இப்பின்னணியில், மிக நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு நீதிபதி அருணா செகதீசன் ஆணையம் கடந்த 2022 மே 18 அன்று, மொத்தம் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட ஐந்து தொகுதிகளாக வகுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் வழங்கியது. 


இவ்வளவு முக்கியமானதொரு அறிக்கையைப் பெற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், அதுபற்றி மூச்சு விடவில்லை! அப்படியொரு அறிக்கை அளிக்கப்பட்ட தகவலைக் கூட முறையாக வெளியுலகிற்கு அறிவிக்கவில்லை. 


இந்த நிலையில், தி இந்து குழுமத்தின் “பிரண்ட் லைன்” இதழ் சார்பில், இளங்கோவன் இராசசேகரன் இவ்வறிக்கைகளைப் பெற்று அதிலுள்ள முக்கியமான விவரங்களை “பிரண்ட் லைன்” இதழில் வெளியிட்டார். (பிரண்ட்லைன், 2022 ஆகத்து 23). 


அதற்குப் பிறகும்கூட, இந்தக் கட்டுரை அச்சேறும் இந்த நிமிடம் வரை தி.மு.க. அரசு, இந்த அறிக்கை குறித்து வாய்திறக்கவில்லை. 


தூத்துக்குடி படுகொலை நிகழ்ந்த சில நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தபோது, காவல்துறைக்கு பொறுப்பாக இருந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இலட்சக்கணக்கில் திரண்ட மக்களிடையே ஊடுருவிய சில தீவிரவாத இயக்கங்கள் வன்முறையைத் தூண்டி விட்டு காவல்துறையினரைத் தாக்கியதால் வேறுவழியின்றி தற்காப்புக்காக காவல்துறை சுட நேர்ந்தது என்று ஞாயப்படுத்தினார். அதற்கு முன்பாக, துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தபோதே செய்தியாளர்கள் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது, தொலைக் காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று நெஞ்சாரப் பொய் சொன்னவர் எடப்பாடி பழனிச்சாமி! 


அருணா செகதீசன் அறிக்கை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது முழுக்க முழுக்கப் பொய் என்பதைத் தோலுரித்துக் காட்டி விட்டது. 


“வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களின் கூட்டத்தை எதிர்கொள்வதற்கு வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கு எந்தவித சிறு ஆதாரமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆத்திர மூட்டல் நிகழாதபோது நடத்தப்பட்ட வன்முறை” என்று உறுதியாகக் கூறுகிறது. 


கொடிய துப்பாக்கிச் சூடு நடந்தது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். மே 23 தொடங்கி 28 வரை மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டது என இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. 


காவல்துறையின் தாக்குதலுக்குப் பயந்து சிதறி ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும், “தொலைவில் கூடியிருந்த போராடும் மக்கள் மீது பதுங்கியிருந்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய அரிதான நிகழ்வு இது” என்றும், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்கிறது என்று புரியாமலேயே பல பேர் இரத்த வெள்ளத்தில் மாய்ந்து போனார்கள் என்றும் அருணா செகதீசன் அறிக்கை விளக்குகிறது. 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மீது முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அருகில் இருந்த ஹெரிட்டேஜ் பூங்காவில் மரங்களுக்கு இடையே மறைந்திருந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் அந்த இடத்திலேயே செத்து வீழ்ந்தார்கள் என்று இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. 


எந்தெந்த இடத்தில் எப்படிப்பட்ட கொலை வெறியாட்டத்தைக் காவல்துறை நடத்தியது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறும் இந்த ஆணைய அறிக்கை, இதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளையும் பட்டியிடுகிறது. 


அன்றைய தெற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி.) - இன்றைய கூடுதல் காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி. - காவலர் நலம்) சைலேஷ்குமார் யாதவ், அன்றைய திருநெல்வேலி சரக துணைத் தலைமை ஆய்வாளர் (இன்று சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர்) கப்பில்குமார் சரத்கார், அன்றைய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (இன்று காவல்துறை துணை ஆணையர் (நிர்வாகம்), சென்னை) பி. மகேந்திரன், அன்றைய தூத்துக்குடி துணைக் கண்காணிப்பாளர் லிங்கத் திருமாறன் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள், 2 காவல் துணை ஆய்வாளர்கள், 1 தலைமைக் காவலர், 7 காவலர்கள் குற்றவாளிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர். 


“இவர்கள் அனைவரும் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்பது மிக உறுதியானது” என்றும், “இவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடுப்பதோடு, அதற்கு குறுக்கீடில்லாமல் இவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அருணா செகதீசன் அறிக்கை பரிந்துரைக்கிறது.


இன்னொரு கொடிய உண்மையையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “துப்பாக்கிச் சூடு அனைத்துமே நீண்டதொலைவு சுடும் கருவிகளிலிருந்து நடத்தப் பட்டுள்ளது. இறந்த உடல்களின் உடற்கூராய்வு அறிக்கையும் அதனை உறுதிப்படுத்துகிறது. சிதறி ஓடிய மக்கள் மீதுதான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதற்கு உடற் கூராய்வுகளே சான்று கூறுகின்றன” என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


துப்பாக்கிக் குண்டுகள் தலையின் பின்பக்கமாகப் பாய்ந்து, வாய்வழியாகவும் முகத்தின் வழியாகவும் வெளியேறி இருக்கின்றன. உயிருக்குப் பிழைத்து ஓடிக் கொண்டிருந்த மக்கள் தங்களை எது தாக்கியது என்று அறியாமலேயே செத்து வீழ்ந்தார்கள். காவல் துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையாணை எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்ற வழி காட்டுதல்கள் கூறும் வழிமுறைகள், எச்சரிக்கை செய்தல், தடியடி நடத்துதல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர்ப் புகை வீசுதல், எச்சரிக்கைக்காக வான் நோக்கி சுடுதல் என்ற வழிமுறைகளை வலியுறுத்துகிறது. இவ்வாறான எந்த வழிமுறையையும் காவல்துறை பின்பற்றவில்லை. முழங்காலுக்குக் கீழ்தான் சுட வேண்டும் என்ற நெறி  முறைகளைக் கூட காவல் துறையினர் அப்பட்டமாக மீறி இருக்கிறார்கள். 


“இவ்வாறான தாக்குதல்கள் நடத்துமளவிற்கு காவல்துறையினருக்கு எந்தவிதக் கொடுங்காயமும் ஏற்படவில்லை. மணிகண்டன் என்ற ஒரே ஒரு காவலருக்கு மட்டும் கடுங்காயம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி காவல்துறையினர் சொல்வது போல் கருதத்தக்கக் காயங்கள் எதுவும் காவல்துறையினருக்கு ஏற்படவில்லை. அவர்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்லப் படும் காயங்கள் எல்லாம் மிகச் சிறியவை. வீக்கம், லேசான உள்காயம் என்பதைத் தாண்டி, எந்தக் கொடுங்காயமும் ஏற்படவில்லை. கல்லெறி நடவடிக்கை களில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு கூட வேறு வழிகளைக் கையாண்டிருக்க முடியும்” என்று இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. 


போராட்ட நாளில் வெவ்வேறு இடங்களில் பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கிடையே எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லை. சுடலைக்கண்ணு என்ற காவலரின் செயல்பாடே அதற்குச் சான்று. இந்த சுடலைக்கண்ணு தானே குண்டுகளை நிரப்பிக் கொள்ளும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மூன்றாவது மைல், இந்திய உணவுக் கழக சந்திப்பு, சிரேஷ்புரம் ஆகிய வெவ்வேறு இடங்களில் 17 ரவுண்டு சுட்டிருக்கிறார். காவலர் நிலையில் உள்ள ஒருவர் வெவ்வேறு இடங்களில் தனது விருப்பத்திற்கு இணங்க துப்பாக்கியோடு சென்று எவ்வாறு சுட முடிந்தது என்ற கேள்வியையும் இந்த அறிக்கை முன்வைக்கிறது. 


வெவ்வேறு இடத்தில் நிலைகொண்டிருந்த காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டிய முதன்மையானக் கடமையிலிருந்து தலைமை ஆய்வாளர் சைலேஷ்குமார் யாதவ் முற்றிலுமாகத் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறது இந்த அறிக்கை.


அடுத்தவொரு கொலை வெறியாட்டத்தையும் அருணா செகதீசன் ஆணையம் வெளிப்படுத்தி இருக்கிறது. மிகப்பெரும் துப்பாக்கிச் சூடு நடந்த மே 22-க்கு அடுத்த நாள் மே 23 அன்று, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் சென்றிருந்தபோது, முதல் நாள் மரணத்தாலும், கொடும் தாக்குதலாலும் ஆத்திரமுற்றிருந்த மக்கள் எஸ்.பி.யோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காவல் அதிகாரிக்கு காலில் இரத்தக் காயம் ஏற்பட்டது. அவ்வளவுதான்!


“இந்த சூழ்நிலையைப் பொறுப்பாகக் கையாண்டிருக்க வேண்டிய எஸ்.பி. மகேந்திரன், அவருடைய பாதுகாவல ரான ஸ்டாலின் என்பவருடைய பெல்ட்டிலிருந்து பிஸ்டலை எடுத்து மக்களை நோக்கி 9 முறை சுட்டார். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கொல்லப் பட்டார். பலர் படுகாயமடைந்தார்கள்” என்பதையும் ஆணைய அறிக்கை எடுத்துக் கூறுகிறது. 


அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (இன்று ஐதராபாத், தேசிய மீன்வள வாரிய அதிகாரி) என். வெங்கடேஷ் தொடக்கத்திலிருந்தே தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தார். “அப்பட்டமான பொறுப் பின்மை, தவறான முடிவுகள்” ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் என்று இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. 


144 தடையாணை பிறப்பித்துவிட்டு, நிகழ்வு நடந்த மே 22 அன்று, தூத்துக்குடியிலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளியிருக்கக்கூடிய கோவில்பட்டியில் அவர் முகாமிட்டிருந்தது அவருடைய பொறுப்பின்மையின் அடையாளமாகும். அவர் மீதும் துறைவாரியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. 


மாவட்ட ஆட்சியர் போராட்டத்தின் முதல் நாள் இரவு 10 மணிக்கு, தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்குக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதுவும் அடுத்தநாள், கூட இருந்த மக்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. திட்டமிட்டபடி எஸ்.ஏ.வி. உயர்நிலைப்பள்ளி திடலில் கூடி, அங்கிருந்து பேரணி யாகப் புறப்படுவது என்ற அவர்களது திட்டப்படி அனுமதித்திருந்தால் சிக்கல் இவ்வளவு பெரிதாகி இருக்காது. ஆனால், பகுதி பகுதியாக 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்ததால், பள்ளி மைதானத்திற்கு வந்து திரள முடியாமல் வெவ்வேறு இடங்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். காவல்துறையினர் தங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியது என்று இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. 


இன்னொரு முக்கிய குற்றச்சாட்டையும் அருணா செகதீசன் ஆணையம் முன்வைக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், ஸ்டெர்லைட் ஆலையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வாகன எரிப்பில் ஈடுபட்ட 20 பேரின் அடையாளங்கள் அங்குள்ள கண்காணிப்புக் கேமிரா படங்களில் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், மாநிலக் காவல்துறையோ, நடுவண் புலனாய்வுக் கழகமோ (சி.பி.ஐ.) சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இதுகுறித்து புலனாய்வு செய்தபோது 20 பேரில் ஒருவரின் அடையாளம் கூட தெரியவில்லை என்று அறிக்கை முன்வைத்திருப்பதை அருணா செகதீசன் கடுமையாகக் குறை கூறுகிறார். இதற்குப் பிறகாவது சி.பி.ஐ. ஞாயமாகவும் நடுநிலை யாகவும் அந்தக் கண்காணிப்புக் கேமிரா படங்களை ஆய்வு செய்து உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். 


மேலும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட இழப்பீடு ரூபாய் 20 இலட்சம் போதாது, குறைந்தது 50 இலட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும் என்றும், கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். 


இதுமட்டுமின்றி, அரசும், இரஜினிகாந்த் போன்ற வர்களும் குற்றம் சாட்டியதுபோல அமைதியாக நடந்த அன்றைய போராட்டத்தில் எந்தத் தீவிரவாதக் குழுவினரும் வன்முறையைத் தூண்டியதற்கான சான்று எதுவும் இல்லை என உறுதிபட அருணா செகதீசன் அறிக்கை கூறுகிறது. 


அதேநேரம், காவல்துறை நடத்திய வன்முறையை ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் தூண்டிவிட்டது என்று முடிவுக்கு வருவதற்கும் ஆதாரம் ஏதுமில்லை என்றும் கூறுகிறது. 


துப்பாக்கிச் சூடு நடந்த அன்றைய நாளிலும் அதையொட்டி முந்தைய சில நாட்களிலும் காவல் துறையின் அத்துமீறலுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் நேரடியாக பின்னணி பாத்திரம் வகிக்கவில்லை என்றளவில் மட்டும்தான் தனது விசாரணை வரம்புக் குட்பட்டு அருணா செகதீசன் ஆணையம் சொல்ல முடிந்திருக்கிறது. 


ஆயினும், இச்சிக்கலின் தொடக்கத்திலிருந்தே ஆட்சியாளர்கள் அனில் அகர்வாலுக்குத் துணையாக இருந்தார்கள் என்பதால்தான் இவ்வளவு நீண்ட போராட்டமே தேவைப்பட்டது. குறிப்பாக, 100 நாள் தொடர் போராட்டத்தின் உச்ச நிகழ்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்கள் பேரணி எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாமல் இவ்வளவு கொடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது முதலமைச்சரின் வழிகாட்டல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. 


ஸ்டெர்லைட் அகர்வாலிடம் கோடி கோடியாகப் பணம் பெற்றதால்தான், அடுக்கடுக்கான மருத்துவ ஆதாரங்களோடு திரும்பத் திரும்ப மக்கள் எடுத்துக் காட்டிய பிறகும் உச்ச நீதிமன்றம் வேதாந்தா நிர்வாகத்தின் சட்ட மீறலை சுட்டிக்காட்டி கோடிக் கணக்கான ரூபாய் தண்டத்தொகை விதித்தப் பிறகும், அந்த ஆலை இயங்க எடப்பாடி அரசு அனுமதித்தது. 


அமைதியான இந்த மக்கள் போராட்டத்தை குருதி வெள்ளத்தில் ஆழ்த்துவது என்ற கடைசித் திட்டமும் உள்ளூர் அளவில் இயங்கும் காவல்துறை அதிகாரிகள் தனித்து செய்யக்கூடியது அல்ல! முதலமைச்சரின் உறுதியான உத்தரவுக்குப் பிறகுதான் இவ்வளவு பெரிய கொடும் வன்முறையில் எந்த அதிகாரியும் ஈடுபடுவார். 


“தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்ற எடப்பாடியின் அப்பட்டமான பொய் வசனமும் முன்கூட்டியே எழுதித் தரப்பட்டது தான்! 


இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிற எதிர்க்கட்சி யாக அண்ணா தி.மு.க. இருக்கும் நிலையில், தி.மு.க.வின் வழக்கமான பழிவாங்கும் அரசியல்படி அருணா செகதீசன் அறிக்கையை மு.க. ஸ்டாலின் அரசு ஏன் “பயன்படுத்திக்” கொள்ளவில்லை என்பது ஊடகத்தினரிடையே வியப்பை ஏற்படுத்துகிறது. 


ஸ்டெர்லைட் அகர்வால் அண்ணா தி.மு.க.வுக்கு மட்டும் கோடி கோடியாகக் கொடுக்கவில்லை. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க் கட்சியாக தி.மு.க. இருந்தபோதும் தொடர்ந்து தி.மு.க.வுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட பல தி.மு.க.காரர்களும் லாரி கான்ட்ராக்ட் உட்பட பலவிதமான பணப் பயன்கள் பெற்றவர்கள்தான். 


குற்றம் சாட்டப்பட்டிருக்கிற காவல்துறை அதிகாரி களில் பலரும் இன்றைய தி.மு.க. ஆட்சியின் அடாவடி களுக்கு துணை போகக் கூடியவர்கள்தான். அதுமட்டு மின்றி, பா.ச.க. பிரதமர் மோடியின் நெருக்கமான நண்பராக அனில் அகர்வால் இருப்பதும், இன்றுவரை ஆர்.எஸ்.எஸ். சங்கி அமைப்புகள் தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்ச ஆலைக்கு ஆதரவாகப் பரப்புரைகளும் போராட்டங்களும் நடத்தி வருவதும் மு.க. ஸ்டாலினுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எப்போதுமே திராவிட மாடல் என்பது மோடி மாடலின் தமிழ்நாட்டுப் பதிப்பு தான்! 


இதனால்தான், இதுவரை அருணா செகதீசன் ஆணைய அறிக்கையை வெளியிடக் கூட மு.க. ஸ்டாலின் முன்வரவில்லை என ஐயப்பட இடமிருக்கிறது. 


இனியாவது, மு.க. ஸ்டாலின் அரசு நீதிபதி அருணா செகதீசன் ஆணைய அறிக்கையை முழுமையாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இணையங்களில் வெளியிட வேண்டும். ஆணையம் குற்றம் சாட்டியுள்ள காவல்துறை அதிகாரிகளின் மீதும், காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அன்றைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீதும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 


எந்தச் சூழலிலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை திறக்கப் படவோ, அதன் பகுதிகள் மீண்டும் இயக்கப் படவோ தங்களது அரசு அனுமதிக்காது என உறுதியான கொள்கை அறிவிப்பை மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும். 


காவல்துறை தாக்குதலில் கொடுங்காயமுற்று மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்டிருக்கும் இளையோர் அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களை சுற்றுச்சூழல் போராளிகள் என அங்கீகரித்து, மொழிப்போர் ஈகியருக்கு வழங்கப்படுவது போல, தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படுவதுபோல மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு விழாக்களில் அவர்களை சிறப்பிக்க வேண்டும்.


மு.க. ஸ்டாலின் அரசு இனியும் தாமதிக்காமல் மேற்சொன்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2022 செப்டம்பர் இதழில் வெளியாகியுள்ளது). 

 

=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.