ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடைக்குக் கண்டனம்!


 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

தடைக்குக் கண்டனம்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
======================================
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான காம்பஸ் இந்தியா உள்ளிட்ட 5 முசுலிம் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு எனப் பட்டிய லிட்டு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா - UAPA) கீழ் மோடி அரசு தடை செய்துள்ளது.
கடந்த 27.09.2022 அன்று பிறப்பித்த இந்த உத்தரவில், தடை செய்யப்பட்ட சிமி, பன்னாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற வற்றோடு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு அமைப்பு வழிப்பட்ட தொடர்பு இருப்பதாகவும், தொடர்ந்து பல பயங்கரவாத மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் ஐந்தாண்டுக்குத் தடை செய்யும் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் அரசின் அறிவிப்பு விளக்கமளித்தது.
தமிழ்நாட்டில் குடந்தை - திருபுவனத்தில் நடைபெற்ற கொலை நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில கொலை நிகழ்வுகளைத் தவிர, இந்தத் தடை ஆணைக்கு வலுவான எந்த ஆதாரத்தையும் மோடி அரசு முன்வைக்கவில்லை.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு எனப் பேசி இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி, கேம்பஸ் இந்தியா மாணவர் அமைப்பைப் பற்றியும் இவ்வாறு பேசியிருந்தார்.
பயங்கரவாதத்திற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அவ்வாறு தடை செய்யப்பட்டபோது, புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றச் சமூகமாக நடத்தப்பட்டார்கள். தமிழின உணர்வாளர்கள், புலி ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார்கள். அதேபோன்றதொரு நிலை, ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்திற்கும் நேரக்கூடிய ஆபத்து இருக்கிறது.
ஒருவேளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், குற்றவியல் சட்டப்படி உரிய வழக்குத் தொடுத்து தண்டிக்க லாமே தவிர, ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே சட்ட விரோத அமைப்பு என்று தடை செய்வது சனநாயகத்திற்கு எதிரானதாகும். ஏற்கெனவே, மோடி அரசும் அதன் துணையோடு பா.ச.க. பரிவாரங்களும் முசுலிம்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதல் நடத்தி வரும் இச்சூழலில், இந்தத் தடை ஆணையைப் பயன்படுத்தி, முசுலிம்கள் மீது கொடும் தாக்குதல் நடத்துவதற்கே வழி ஏற்படுத்தும்.
எனவே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையா ணையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.